கட்டுரை
ஜெயலலிதா பிறந்தநாளில் அவர் இல்லாத அதிமுக எப்படி உள்ளது? ஜெ.ஜெ. ஆன்மாவின் மனநிலை என்னவாக இருக்கும்?

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 74-வது பிறந்ததினம் இன்று. அவர் இல்லாத, ஒபிஎஸ் – இபிஎஸ் தலைமையிலான அதிமுக இன்று எவ்வாறு உள்ளது?

அதிமுக கட்சியின் வலிமையான ஒரு தலைமையாக ஜெயலலிதா இருந்தார் என்பதை யாரும் கிஞ்சிற்றும் மறுப்பதற்கில்லை. 2011-க்கு முன்புவரை ‘ஆட்சியில் மீண்டும் அதிமுக வர வாய்ப்புள்ளதா?’ என்று பலராலும் எள்ளிநகையாடப்பட்ட கட்சி, 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று விஸ்வரூபமடைந்தது.

அதன்பிறகான அதிமுகவின் வளர்ச்சியும் எழுச்சியும் மற்ற கட்சிகளை வாயடைக்க வைத்தது வரலாறு. இடையில் சொத்துக்குவிப்பு உள்ளிட்ட சில வழக்குகளில் சிக்கினாலும், அவற்றைத் தவிடுபொடியாக்கி மீண்டும் 2016 சட்டமன்றத் தேர்தலில் அரியணை ஏறினார். இவ்வாறாகச் சென்ற கட்சியின் நடப்பு தான், 2016 டிசம்பர் 5-ல் அவர் மறைந்த பிறகு பலவாறாக ஆட்டம் காணத் துவங்கியது.

முதல் சறுக்கலே கட்சியின் அடுத்த முதல்வர் பொறுப்பாளர் யார் என்பது தான். இதில் அக்கட்சியின் மூத்த தலைமைகளான இபிஎஸ் – ஒபிஎஸ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி, பூசல்கள் ஏற்பட்டு ஒருவழியாக எடப்பாடி.கே.பழனிசாமி தமிழக முதல்வராக சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.

இதன்பிறகும் கூட சற்றேனும் மக்கள் விரும்பும் சில நற்திட்டங்களோடு சென்றுகொண்டிருந்த அதிமுகவின் நடப்பு, பாஜகவுடன் கூட்டுசேரும் நடவடிக்கையால் தான் மக்களிடையே வெறுப்பைச் சம்பாதிக்கத் துவங்கியது.

இதன் விளைவினால் தானோ என்னவோ 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது அதிமுக. பத்தாண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் அமரத்துடித்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரியணையில் அமர்ந்தது. அதிமுக, ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சியானது

இத்தோல்விக்கு நிச்சயம் அதிமுக தலைமைகளாக மக்களிடையே அறியப்பட்ட இபிஎஸ் – ஒபிஎஸ் தான் பொறுப்பேற்றாக வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் இந்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் வாய்ப்பில்லை.

அதிமுக-விற்கு மக்கள் மத்தியில் அபிமானம் குறைய சரியான திட்டமிடல் இல்லை, கட்சி நிர்வாகிகளுக்குள் இருந்த பூசல்கள், தெளிவில்லாமல் உளரும் அமைச்சர்கள் என்று பலதரப்பட்ட காரணங்கள் கூறப்பட்டாலும் பாஜகவுடனான கூட்டணி ஓர் முக்கிய அங்கம் வகிக்கும்

ஜெயலலிதா இருந்த வரை பாஜகவுடன் கூட்டணி இனி இல்லை என்று கூறிவந்தநிலையில், அவர் காலம் சென்ற பின் அதையெல்லாம் மறந்து அதிமுக அமைச்சர்கள் பிரதமர் மோடியை பூஜித்ததும், பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்ததும் தான் பிரச்சினைக்கு முழு காரணம்.

இது அண்மையில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலித்ததுதான் சோகத்தில் சோகம். நாடாளுமன்றத்தில் இந்தியாவின் பெரிய மூன்றாவது கட்சியாக உருவெடுத்திருந்த அதிமுக, தமிழகத்தில் பல இடங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சிறிய கட்சிகளுக்குப் பின்னான இடங்களைப் பிடித்தது.

இந்நிலையில்தான் வாக்கு சதவீதத்தில் அதலபாதாளத்திற்கு அதிமுக சென்றதை எண்ணி துவண்டுபோன அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ், ‘அம்மா வழியில் கட்சியை அரியணை ஏற்றியே தீருவோம்’ என சூளுரைத்து நேற்றைய தினம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். இப்பொழுதுதான் அரியணை குறித்த எண்ணமே இவர்களுக்கு வருகிறதா என எண்ணத் தோன்றுகிறது.

தமிழக மக்களின் எண்ணம் ஒன்றுதான். மக்களுக்கும், அவர்களின் வாழ்விற்கும் நன்மை பயக்கும் திட்டங்களை எந்த அரசு கொண்டுவந்தாலும் அவர்களை வாரியணைத்து உச்சிமுகர தமிழ் மக்கள் தயாராகத்தான் உள்ளனர். மாறாக, மதவாத சக்திகளுடன் இணைந்துகொண்டு நன்மை பயக்கிறேன் பேர்வழி பிரிவினை சூழ்ச்சிகளையும், சாமான்யர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களையும் திணித்தால் யாவரையும் துடைத்தெறிய அவர்கள் தயங்கமாட்டார்கள் என்பது தான் உண்மை.

அதிமுகவின் தற்போதைய நிலையை ஒருவேளை ஜெ.வின் ஆன்மா பார்த்தால், ‘நான் இரத்தம் சிந்தி உருவாக்கி வைத்திருந்த கழகமா இது? என்று இரத்தக்கண்ணீர் தான் வடிக்கும்.

பதிவு: February 24, 2022
`சலூனில் நூலகம்; புத்தகம் வாசித்தால் ரூ.30 தள்ளுபடி!'- வாடிக்கையாளர்களை ஆச்சர்யப்படுத்தும் முடிதிருத்தும் கலைஞர் மாரியப்பன்

முடி திருத்தகத்துக்கு வருகிறவர் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து பத்து பக்கங்களுக்கு மேல் வாசித்தால் அவருக்கு ரூபாய் 30 தள்ளுபடி தந்து என அசத்துகிறார் முடிதிருத்தும் கலைஞர் பொன் மாரியப்பன்!

வழக்கமான முடி திருத்தகங்களில் காணப்படும் அரைகுறை ஆடைகளுடன் கூடிய நட்சத்திரப் படங்கள் என்ன, எந்த நட்சத்திரப் படங்களும் இந்தக் கடையில் இல்லை. மாறாக, மர அலமாரியில், புத்தகங்கள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்க முடிதிருத்த வந்தோர் அமைதியாக அந்தப் புத்தகங்களை எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன் கடைக்கு வருபவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, கடைக்குள் சிறிய நூலகத்தை அமைத்துள்ளார் தூத்துக்குடி மில்லர்புரத்தில் 'சுசில்குமார் பியூட்டி கேர்' என்ற பெயரில் முடி திருத்தகம் நடத்திவரும் பொன்.மாரியப்பன். அதை முடிதிருத்தும் கடை என்பதைவிட மூளையை புதுப்பிக்கும் கடை என்று தாராளமாகச் சொல்லலாம்.

வழக்கமாக முடி திருத்தும் கடைக்குச் செல்கிறவர்கள் செய்தித்தாள்களை வாசிப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் பொன் மாரியப்பன் கடைக்குச் செல்கிறவர்கள் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பதை கண்டிப்பாகக் காண முடிகிறது.

பொன் மாரியப்பன்‌ கடைக்கு நாளிதழ்கள், வார இதழ்களும் வருகின்றன. அத்தோடு கதை, சிறுகதை, கவிதை, வரலாறு, இலக்கியம், ஆன்மிகம், நாவல்... என சுமார் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மர அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. முடிவெட்டுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில், புத்தகங்களை ஆர்வத்துடன் எடுத்துப் படிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். பேச்சு, திரைப்படப் பாடல்கள் என எந்த சப்தமுமின்றி, முடிவெட்டும் கத்தரிக்கோல் சப்தம் மட்டுமே இங்கே கேட்கிறது.

சின்ன வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வம் மாரியப்பனுக்கு உண்டு. 8-ஆம் வகுப்பு வரைக்கும்தான் படித்திருக்கிறார். சில ஆண்டுகள் ஒரு வக்கீலிடம் சிப்பந்தியாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு, அப்பா செய்துவந்த இந்த முடி திருத்தும் தொழிலைத் தொடர கடை ஆரம்பித்தார். முடிவெட்ட ஆள் வராத நேரத்தில் புத்தகம் வாசிக்கத் தொடங்கி இருக்கிறார். இப்படி, முழுமையாகப் படித்து முடித்த புத்தகங்களை அலமாரியில அடுக்கி வைக்கத் துவங்கியிருக்கிறார். அது இன்று 400க்கும் மேற்பட்ட ஒரு நூலகமாக உருவெடுத்திருக்கிறது. இந்தக் கடையைத் துவங்கி ஆறு வருஷம் ஆகிறது.

"புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப் படுத்தணும், குறைந்தபட்சம் முடிவெட்ட வந்திருக்கும் நேரத்துலயாவது புத்தகங்களைப் படிக்க வைக்கணும்னு நினைச்சேன். தனியா புத்தக அலமாரி ஒண்ணு வாங்கி, அதுல என் கைவசம் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் வரிசையா அடுக்கிவெச்சேன். முடிவெட்ட காத்திருப்பவர்களிடம், பிடிச்ச புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொன்னேன். முதலில் தயக்கம்காட்டியவர்கள், பிறகு எடுத்து மேலோட்டமாகப் புரட்ட ஆரம்பிச்சாங்க. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க. செல்பேசியில் மூழ்கிக் கிடக்கக்கூடாது, அடிக்கடி செல்பேசி பார்ப்பதால் ஏற்படும் தீமைகள். குறித்து நாளிதழ்களில் வெளியான தகவல்கள், கட்டுரைகளையும் அனைவரின் பார்வையில் படுறமாதிரி ஒட்டி வச்சிருக்கேன்" என்கிறார் பொன் மாரியப்பன்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரையில் இவருக்கு ’புத்தகர் விருது’ கொடுக்கப்பட்டிருக்கிறது. இவரது சேவையைப் பாராட்டி தூத்துக்குடியில் உள்ள பலரும் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இவரது கடைக்கு வந்து நூலகத்தைப் பார்த்துப் பாராட்டியதுடன் 50 புத்தகங்களை அன்பளிப்பாகவும் வழங்கியிருக்கிறார்.

 

இப்போது கடைக்கு முடிவெட்ட வருகிறவர்கள் யாரும் செல்பேசிப் பார்ப்பதில்லை. முடிவெட்டிய பிறகும் சில நிமிடங்கள் உட்கார்ந்து புத்தகத்தைப் படித்துவிட்டு, பொறுமையாக வீட்டுக்குப் போகிறவர்களும் நிறைய உண்டு.

முடிதிருத்தும் கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டு செல்லும்போதும், இந்த ஆறு ஆண்டுகளில் ஒரு ரூபாய்கூட கட்டணத்தை உயர்த்தியதில்லை மாரியப்பன். இந்த ஆண்டு உயர்த்தச் சொல்லி மற்ற கடைக்காரர்கள் வற்புறுத்தியபோதிலும், 50 ரூபாயாக இருந்த கட்டணத்தை, 80 ரூபாயாக உயர்த்தி அறிவித்திருக்கிறார், நீண்ட யோசனைக்குப் பிறகு.

இந்த நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை பொன் மாரியப்பன் வெளியிட்டுள்ளார். அதாவது வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் முடி வெட்டும் கட்டணம் ரூபாய் 80 ஆக உயர்த்தப்படுகிறது முடிவெட்ட வருகிறவர்கள் இங்குள்ள ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து பத்து பக்கங்களுக்கு மேல் வாசித்தால் அவருக்கு 30 ரூபாய் கட்டண சலுகை வழங்கப்படும். இதுதான் அந்த அறிவிப்பு.

“கட்டணத்தைக் கூட்டிச் சொல்லி, புத்தகம் வாசிச்சா 30 ரூபாய் குறைப்புன்னு சொல்றது... எப்படிப் பார்த்தாலும் அதே 50 ரூபாய் கட்டணம்தானே உனக்கு கிடைக்குது” என்று மாரியப்பனிடம் மற்ற கடைக்காரர்கள் இப்போது கேட்கிறார்கள்.

"மத்த கடைக்காரர்களுக்காக கட்டணத்தைக் கூட்டினேன். இதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால், புத்தகத்தை வாசிக்கச் சொல்லி குறைச்சிட்டேன். இதுல எனக்கு ஒரு மன நிறைவு” மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார் பொன். மாரியப்பன்.

புத்தக வாசிப்பே அருகி வரும் இந்தக் காலத்தில் பொன் மாரியப்பனின் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியதே! முடி குறையட்டும்; அறிவு வளரட்டும்!

பதிவு: December 13, 2021
ஆட்டம் காணும் அதிமுக… அஸ்திவாரம் போடும் பாஜக… அண்ணாமலை சாரின் திட்டம் பலிக்குமா?

தமிழகத்தில் காமராஜருக்கு பிறகு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள்தான் ஆண்டுகொண்டிருக்கிறது. அதற்கு வேட்டு வைக்கும் வேலையை கையில எடுத்துட்டாரு நம்ம அண்ணமலை சாரு…

எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவை யாரும் அசைத்து பார்க்க முடியாது என்ற அளவுக்கு அந்த கட்சியை ஒரு எகு கோட்டை மாற்றி வைத்து இருந்தாரு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு பிறகோ நிலைமை தலைகீழா மாறி போச்சு…

அதிமுகவை பொறுத்தவரை ஒற்றை தலைமை இல்லாத நிலையில தள்ளாடுகிறது. கட்சியில உள்ள முக்கிய நிர்வாகிகள் பலர் சசிகலாவை தலைவராக ஏத்துக்கிட்டாதான் கட்சியை காப்பாற்ற முடியும்ன்னு சொல்றாங்க… அதுக்கு இரண்டு தலைமையில உள்ள எடப்பாடி மட்டும் பிடியே கொடுக்க மாட்டுகிறாராம். தனது ஆதரவாளர்களை வைச்சு எதிர்ப்பு தெரிவித்துகிட்டு வராரு. இப்படியே போனா கட்சி என்ன ஆகும்ன்னு எடப்பாடிக்கு ஆதரவாக இருந்த சிலர் இப்ப பேச ஆரம்பிச்சிட்டாங்களாம். அதுதான் புது விஷயமாக இருக்கு…

தலைமையை பிடிக்கதான் இப்ப போட்டி போட்டுறாங்களே தவிர, நேற்று சென்னையில மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்துகிட்டு இருக்கிறப்பவே… திருப்பூர்ல நடந்த கூட்டத்துல்ல அதிமுக-வில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏக்கள 2 பேர பாஜகவுல சேர்த்து அதிர வைத்து இருக்காரு நம்ம அண்ணாமலை சாரு. கூட்டணி வைச்சிருக்கும்போது கூட்டணியில உள்ள மற்றொரு கட்சி நிர்வாகிகளை தங்கள் கட்சியில பாஜக சேர்த்திருப்பது தமிழக அரசியல் வரலாற்றிலேயே புதிய முறையாகவே இருக்கு.

அதோட 2016-ல் நடக்க போகும் சட்டமன்ற தேர்தல்ல பாஜகதான் ஆட்சியை பிடிக்கும்ன்னு சொல்லிட்டாருன்னா பாத்துங்க… கூட்டணியில இருக்கும்போதே, தன் கட்சி நிர்வாகிகளை இழுப்பது சரியா என்பதை பத்தி எல்லாம் கொஞ்சம் கூட கவலைபடாம இருப்பதோடு, எதுகெடுத்தாலும் மைக் முன்னாடி நிற்கும் ஜெயகுமாரு இதை பத்தி பாஜகவுக்கு ஒரு மறைமுக எச்சரிக்கை கூட சொல்லன்னு தொண்டர்கள் எல்லாரும் அவர கடுமையாக விமர்சித்து வருகிறார்களாம்.

இப்படியே போனா, சீக்கிரமா நம்ம அண்ணாமலை சாரு அதிமுக கூடாரத்த காலி பண்ணிடுவாருன்னு அரசியல் விமர்சகர் மத்தியில் ஒரே பேச்சா இருக்குன்ன பாத்துங்க… இந்த பரபரப்புக்கு இடையில, நம்ம அண்ணாமலை சாருக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்து இருக்காம். சில அசைமெணட் கொடுக்க போறாங்களாம். அது என்னன்னா… எப்படி கூட்டணியில் இருந்துக்கொண்டே அதிமுக நிர்வாகிகளை தூக்கியது போல… திமுகவுல அதிருப்தியில இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தூக்க வேண்டும் என்பதுதான் அந்த அசைமெண்டாம்…. ஆளும் கட்சியில மட்டும்ல… காங்கிரஸ், பாமக, சீமான் கட்சியின்னு இந்த லிஸ்ட் விரிய போகுதாம். இதை எல்லாம் வைத்து பார்த்தா.. தமிழத்துல அதிமுகவுல ஆட்டம் காண தொங்கி இருக்குன்னு சொல்லலாம் போல… அதேபோல பாஜக காலூன்ற ஆரம்பிச்சிட்டாங்கன்ணும் சொல்லலாம்…

பதிவு: November 25, 2021
ஈபிஎஸ்ஸுக்கு எதிராக திரும்பிய செங்கோட்டையன்!- அ.தி.மு.க. மாசெ கூட்டத்தில் நடந்தது என்ன?- பரபரப்பு தகவல்கள்

உள்ளாட்சித் நகர்புற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக நடந்தது முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கோட்டைவிட்டதுபோல், நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கோட்டை விட்டு விடக்கூடாது என்றும், ஆளும் கட்சிக்கு சமமான வெற்றி பெற்றாக வேண்டும் என்றும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேபோன்ற, கட்சியை வழிநடத்த அமைக்கப்பட்டுள்ள 11 பேர் கொண்ட குழுவை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதற்கான குழு 18 பேர் கொண்ட குழுவாக ஆக்க வேண்டும். அந்த குழுவுக்கு அதிகாரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பேசியுள்ளனர்.

இந்த கருத்துக்கு ஆதரவு தரும் வகையில், கட்சியின் மூத்த உறுப்பினராக இருக்கும் செங்கோட்டையன், ‘அ.தி.மு.க.வை வழி காட்டு குழுதான் வழிநடத்த வேண்டும். அதற்காக அந்த குழுவுக்கு முழு அதிகாரத்தையும் வழங்க வேண்டும்’ என்று பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்போது சிலர், வழிகாட்டு குழுவுக்கு செங்கோட்டையனை தலைவராக போடலாம். கட்சியின் அவைத் தலைவராக செங்கோட்டையனை நியமிக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். இந்த கருத்தினை எடப்பாடியும், அவரது ஆதரவாளர்களும் விரும்பவில்லையாம். இதனால் சிறிது நேரம் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோன்று வழிகாட்டு குழுவை விரிவுப்படுத்தவும் எடப்பாடி தரப்பு சம்மதிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

எப்போதுமே எடப்பாடி தரப்பு பக்கமாக இருந்த செங்கோட்டையன், இப்ப ஏன் எடப்பாடி தரப்புக்கு எதிராக பேசுகிறார் என்ற குழப்பம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பதிவு: November 24, 2021
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து… முதல்வர் அவசர ஆலோசனை... பாமகவின் அடுத்த மூவ் என்ன?

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு இல்லையெனக் கூறி பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக போராட்டங்களை நடத்திவந்த நிலையில், 1989-ல் இருந்த தி.மு.க. அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்குள் "மிகப் பிற்படுத்தப்பட்டோர்" என்ற பிரிவை உருவாக்கியது. அதில் வன்னியர் உட்பட வேறு பல சாதியினரும் இடம்பெற்றனர்.

இருந்தபோதும், வன்னியர்களுக்கு எனத் தனியாக 20 சதவீத உள் ஒதுக்கீடு தர வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. அதுமட்டுல்லாது, அ.தி.மு.கவுடன் கூட்டணி நீடிக்க வேண்டும் என்றால் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிடிவாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இருந்தது.

வேறு வழியின்றி அ.தி.மு.க. அரசு, 2021-ல் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக தமிழக அரசு இது தொடர்பாக ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளிப்பதாக அறிவித்தது.

இந்த அவசரச் சட்டத்தை முன்மொழிந்து தமிழக சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோர் பிற சாதியினருடன் போட்டியிட்டு உரிய பலன்களை, சட்டப்படியான பங்கினைப் பெற இயலவில்லை என்பதாலும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில், அரசின் நியமனங்களில் வன்னிய குல சத்ரியர்களுக்கு தனிப்பட்ட ஒதுக்கீடு வழங்கக்கோரி அவர்களிடமிருந்து முறைப்பாடு வந்துள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்காக உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆய்வுசெய்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரின் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவனர் (வன்னியர்) 10.5 சதவீதம், சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்துள்ளனர். ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள அதற்கேற்ப இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற அரசு முடிவுசெய்துள்ளது." என்று கூறினார்.

மேலும் இது தற்காலிகமான ஏற்பாடுதான் என்பதையும், சாதிவாரிக் கணக்கீடு முடிந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தென் மாவட்டத்தில் இந்த சட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பால் தேர்தல் பிரச்சாரங்களின்போது இது தற்காலிக ஏற்பாடு என்பதை சில அமைச்சர்கள் மீண்டும் வலியுறுத்திக் கூறவேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேநேரத்தில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு என்பது அ.தி.மு.க. அரசு செய்துள்ள ஒரு நாடகம், இது செல்லாது, இது முறையாக அறிவிக்கப்படவில்லை என்று விமர்சனம் செய்தார். அதேநேரத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த இடஒதுக்கீடு சட்டப்படி செய்து தரப்படும் என்று வாக்குறுதியாகவே அளித்தார்.

அதேபோன்று, தேர்தல் முடிந்து மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு, இந்த உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்தன. இந்த நிலையில்தான், இது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு ஜூலை 26-ம் தேதி வெளியிட்டது. இந்த இட ஒதுக்கீட்டை எப்படி அளிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும் அறிவித்தது.

இந்த அறிவிப்பை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்றிருக்கிறது. பா.ம.க நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக இடஒதுக்கீடு நடைமுறைக்கு வர தொடங்கியது.

இந்தநிலையில், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ‘வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை ரத்து’ செய்யப்படுதாக தீர்ப்பு அளித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு வன்னியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி அடுத்த கட்டமாக இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரத்தில், தமிழக அரசு இந்த தீர்ப்பு எதிராக மேல்முறையீடு செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பதிவு: November 01, 2021
பசும்பொன் செல்ல ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு அனுமதி... எடப்பாடிக்கு திடீர் தடை… உச்சகட்ட பரபரப்பில் அ.தி.மு.க

சசிகலா விவகாரம் தொடர்பாக, முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதை, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் தவிர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ராமநாதபுரம் பசும்பொன்னில் நாளை முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, இன்று மதுரை செல்கிறார் சசிகலா. கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின், மருதுபாண்டியர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து பசும்பொன் சென்று, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

ஆண்டுதோறும், பசும்பொன் தேவர் நினைவிடத்திலும் அ.தி.மு.க., சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம். 'சூரியனை பார்த்து குரைக்கிறது' என, சசிகலாவை பழனிசாமி விமர்சித்த விவகாரம், தென் மாவட்ட முக்குலத்தோர் சமுதாயத்தினரிடம் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அதுமட்டுமல்லாது முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சசிகலா குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இவைகள் முக்குலத்தோர் சமூகத்தினரிடையே கடும் அதிருப்பதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில், பசும்பொன் நினைவு இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தால், அவர் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தக்கூடும் என்றும் இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவும் உளவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் பழனிசாமி வருகைக்கு, போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
அதேநேரத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு மத்தியில் நடக்கும் நிகழ்ச்சியாக இருப்பதால் இதில் அ.தி.மு.க.வில் உள்ள சீனியார்கள் யார்? யார்? இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பதை வைத்துதான் அ.தி.மு.க.வில் செல்வாக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகமா? அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு அதிகமா? என்பது தெரிய வரும் என்று அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

சசிகலாவும் நாளை பசும்பொன் செல்கிறார். அங்கு முத்துராமலிங்க தேர்வல் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் ஆதரவாளர்கள் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரே நாளில் பசும்பொன் செல்வதால் இருவரும் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலினும் பசும்பொன் செல்கிறார். அவருடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள். இதேபோன்று பல்வேறு கட்சித் தலைவர்களும் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள். இதனால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதிவு: October 29, 2021
சசிகலாவை சந்திக்கும் முன்னாள் அமைச்சர்கள்... கடும் அதிருப்தியில் ஈபிஎஸ்... பற்றவைத்த ஓபிஎஸ் மவுனம்

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலாவை அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறையில் இருந்து வெளியில் வந்த சசிகலா சிறிது காலமாக அமைத்தி காத்து வந்தார். இந்தநிலையில், அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு துவக்கத்தில் இருந்து மீண்டு தனது அரசியல் பணியை தொடங்கினார் சசிகலா. அதன் தொடர்ச்சியாக வரும் 30ம் தேதி வரை தென் மாவட்டங்களில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

இதனிடையே, சசிகலாவின் நடவடிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் அமைந்து இருக்கிறது. மதுரையில் அவர் கொடுத்த பேட்டி, சசிகலாவின் தலைமையை ஏற்க அவரும், அவரது ஆதரவாளர்களும் தயாராகிவிட்டார்கள் என்பதை காட்டுவதாகவே அமைந்திருக்கிறது.

இந்தநிலையில் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தஞ்சாவூர் சென்றுள்ளார். தஞ்சையில் தங்கி இருக்கும் அவரை முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், காமராஜ் ஆகியோர் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதேபோன்று நெல்லை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அங்குள்ள அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சசிகலாவை சந்தித்து பேசுவார்கள் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவல்களுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சசிகலாவுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதேபோன்று, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.சி.டி. பிரபாகரன், ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

இதேபோன்று பல நிர்வாகிகள் சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆதரவான கருத்துகளை தெரிவிக்க தொடங்கி உள்ளனர். பல பேர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வுகளை எல்லாம் கண்டு எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். அவரது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறாராம். இனி அ.தி.மு.க.வில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

பதிவு: October 27, 2021
களமிறங்கும் சசிகலா… அ.தி.மு.க.வில் வீசப் போகிறது புயல்... எடப்பாடி பழனிசாமியின் சீக்ரெட் பிளான்!

சசிகலா மேற்கொள்ள உள்ள அரசியல் ரீதியான சுற்றுப்பயணம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. ஏற்கெனவே அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டத்தின் போது, சசிகலா மேற்கொண்ட நிகழ்ச்சிகளே அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் வெளிப்பாடாகதான் சசிகலா மீது எடப்பாடி பழனிசாமியும், ஜெயக்குமாரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்தநிலையில், வரும் 27ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சில மாவட்டங்களில் அரசியல் ரீதியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சசிகலாவின் இந்த சுற்றுப்பயணம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தும் என்றே அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி பிரிந்தபோது, எம்ஜிஆரின் மனைவியான ஜானகி அரசியலிலிருந்து ஒதுங்கி ஜெயலலிதாவுக்கு வழி விட்டது போல் சசிகலாவும் தற்போதைய அதிமுக தலைமைக்கு வழிவிட்டு பெருந்தன்மையுடன் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதே எடப்பாடி தரப்பின் விருப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டே அ.தி.மு.க.வில் உள்ள சில சீனியர்களின் கருத்துகளும் அமைந்துள்ளன. அதையொட்டியே செய்திகளும் வெளி வருகின்றன. ஆனால் சசிகலாவோ முடிந்தவரை அ.தி.மு.கவை தன்பக்கம் இருக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இதனிடையே, அதிமுகவை கைப்பற்றும் முயற்சியைவிட்டுவிட்டு அமமுகவை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கலாம் என டி.டி.வி.தினகரன் சசிகலாவிடம் கூறி வருவதாகவும், அதற்கு சசிகலா உறுதியாக எந்தவித உத்தரவாதமும் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், சென்னையில் நடந்த சசிகலாவின் இரு நாள் நிகழ்ச்சிகள் அதிமுக தலைமையை அசைத்துப் பார்த்தாலும் மீடியாக்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே செல்லலாம். ஆகையால் தென் மாவட்ட சுற்றுப் பயணத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் தங்கள் செல்வாக்கை காட்ட வேண்டும் என முடிவு எடுத்துள்ளனர். அது மீடியாக்கள் மூலமாக தமிழக அரசியலை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்றும் சசிகலா திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

சசிகலாவின் சுற்றுப் பயணம் தொடங்க இன்னும் இரு நாள்களே உள்ளன. தஞ்சை பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி வளாகத்தில் தினகரன் மகள் திருமண வரவேற்பு விழா நடைபெற உள்ளது. திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமணத்துக்கு தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள முடியாத நிலையில் தஞ்சையில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொண்டர்களிடம் குடும்பமாக வரவேண்டும் என அழைத்துள்ள தினகரன் அறுசுவை விருந்தையும் ஏற்பாடு செய்துள்ளார்.

சசிகலா ஆதரவாளர்கள், அமமுக தொண்டர்கள் என புதன் கிழமை தஞ்சையில் பெரிய கூட்டத்தை கூட்டி தங்களது செல்வாக்கை நிரூபிக்க திட்டமிட்டுள்ளனர். 27-ம் தேதி தஞ்சாவூர், 28-ம் தேதி மதுரை, திருநெல்வேலி, 29-ம் தேதி பசும்பொன் விழா என அனைத்து இடங்களிலும் சசிகலா தொண்டர் படை சூழ வலம் வரவுள்ளார்.

சசிகலாவின் இந்த சுற்றுப்பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறாராம். குறிப்பாக சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள மாவட்ட செயலாளர்களுக்கு சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது சசிகலா வரும் போது அ.தி.மு.க. நிர்வாகிகளோ, தொண்டர்களோ சசிகலாவை சந்திக்கவும் கூடாது, நிகழ்ச்சியில் பங்கேற்கவும் கூடாது என்று உத்தரவை பிறப்பித்து இருக்காராம். அதே நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ், சசிகலா விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருவது நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதை வைத்த பார்க்கும் போது சசிகலாவின் சுற்றுப்பயணம் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய அளவில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறதாம். அதேபோன்று அவரது ஆதரவாளர்களும் பீதியில்தான் இருக்கிறார்களாம்.

பதிவு: October 25, 2021
வீதி வீதியா போங்க… இனி தனித்துதான் போட்டி..!- உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் நிர்வாகிகளிடம் சீறிய ராமதாஸ்

உள்ளாட்சித் தேர்தலில் வடமாவட்டங்களில் கனிசமான இடங்களில் வெற்றி பெறும் கனவில் தனித்து களம் இறங்கியது பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால் 25 சதவீத வெற்றிக்கூட கிடைக்கவில்லை என்று கட்சியின் தலைமை கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12ம் தேதி எண்ணப்பட்டது. இதில் ஆளும் தி.மு.க. அமோக வெற்றிபெற்றது. அ.தி.மு.க. படுதோல்வியை தழுவியது. அந்த கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பா.ம.க. 47 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவியை கைப்பற்றியது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வடமாவட்டங்களில்தான் அதிகம் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுவதால் அதிக இடங்களை கைப்பற்றும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தனர். பா.ம.க. தலைமையும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி பா.ம.க.வுக்கு கிடைக்கவில்லை. இதனால் கட்சியின் தலைமை கடும் அதிருப்திக்கு ஆளானது.

இந்தநிலையில், பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட லர் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், இனி பா.ம.க. செயல்பாடுகள், எதிர்கால செயல் திட்டம், கூட்டணி நிலைப்பாடுகள் போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் பேசிய கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடும் கோபத்துக்கு ஆளாகிவிட்டாராம்.

"கட்சிக்கு யாரும் விசுவாசமாக வேலை செய்யவில்லை. அதனால்தான் வட மாவட்டங்களில் கூட நாம் எதிர்பார்த்த வெற்றியை நம்மால் பெற முடியவில்லை. இந்த தோல்வினால் நமக்கு இருந்த செல்வாக்கு குறைந்துவிட்டதாக தெரிகிறது. நமக்கு செல்வாக்கு உள்ள இடத்தையை நாம் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்" என்று நிர்வாகிகளை கடுமையாக சாடியிருக்கிறார் ராமதாஸ்.

"இனிமேல் கூட்டணி கிடையாது. யாராவது வேறு கட்சிக்கு மாற வேண்டும் என்று நினைத்தால் இப்போதே போய்விடுங்கள். இருப்பவர்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்.  அடுத்து வரக்கூடிய மாநகராட்சித் தேர்தல்களில் கடுமையாக உழைத்து வெற்றிபெற வேண்டும். இதை மனதில் வைத்து பணியாற்றுங்கள்" என்று மீண்டும் கோபத்தில் பேசினாராம் ராமதாஸ்.

விரைவில் எல்லா நிர்வாகிகளும் கிராம் கிராமமாக சென்று மக்கள் பணியாற்றி கட்சியை உறுதியாக நிலை நிறுத்துங்கள். அதற்கு விசுவாசமாகவும், கடுமையாகவும் உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவையும் ராமதாஸ் பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பதிவு: October 18, 2021
உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி… காரணம் இரட்டை தலைமையா?... குழப்பத்தில் நிர்வாகிகள்!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய தோல்வியை அ.தி.மு.க. எதிர்கொண்டிருக்கிறது. இந்த தோல்வியானது கட்சிக்கு இரட்டை தலைமை இருப்பதுதான் காரணமா? என்ற கோணத்தில் நிர்வாகிகள் மத்தியில் கடும் குழப்பம் நிலவுகிறதாம்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தொடுக்கப்பட்டார். அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதும், அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றனர். அ.தி.மு.க வரலாற்றில் முதல் முறையாக இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது.

இரு தலைமை உருவாக்கப்பட்ட நாள் முதல் இரு தலைவர்களுக்கான ஆதரவாளர்கள் என சூழலும் அதிகரிக்க தொடங்கியது. மேலும் இந்த இரட்டை தலைமையின் காரணமாக அ.தி.மு.க. ஒவ்வொரு பிரச்சனையிலும் உட்கட்சி மோதல்களால் திணறித்தான் வருகின்றன.

அ.தி.மு.க. இரட்டை தலைமையுடன் செயல்பட்டாலும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்ற அதிகாரத்துடன் இருந்ததால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவர் பக்கமே இருந்தனர். இதை பயன்படுத்தி கடந்த சட்டமன்ற தேர்தலில் தான் முதல்வர் வேட்பாளராக களம் இறங்கினார்.

வேட்பாளர்கள் தேர்விலும் ஒருங்கிணைப்பாளர் என்கிற வகையில் தமது கை ஓங்கி இருக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாம் நினைத்ததையே சாதித்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதவாளர்கள் கடும் அதிருப்திக்கு ஆளானார்கள்.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும் இருவரும் இணைந்து செயல்படாமல் மோதல் போக்கை கடைபிடித்தனர். இதனால் தொடர் வெற்றியைப் பெற்ற அதிமுக தோல்வியைத்தான் சந்திக்க முடிந்தது. ஆட்சி அதிகாரத்தை திமுகவிடம் பறிகொடுத்தது. ஆனாலும் ஒரு கவுரமான இடங்களை எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது அ.தி.மு.க.

சட்டசபை தேர்தல் முடிந்த பின்னரும் இரட்டை தலைமையின் அதிகார சண்டை ஓயவில்லை. யார் எதிர்க்கட்சித் தலைவர் என இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியாக அதிலும் எடப்பாடி பழனிசாமிதான் வென்றார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்கெனவே முடியாது என்கிற மனநிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.

சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து பேச்சு எழுந்தது. அப்போதும்கூட எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியது. ஒருகட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேச வேண்டிய நிலையையும் உருவாக்கினார் எடப்பாடி பழனிசாமி.

இத்தனை குமுறல்களையும் மனதில் வைத்திருந்த ஓ.பன்னீர்செல்வம், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது பகிரங்கமாகவே சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து பேசினார். தேர்தலின் போது தலைவர்கள் மேற்கொண்ட வியூகங்களால்தான் அதிமுக தோற்றது என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான அடுத்தடுத்த ஊழல்கள், கோடநாடு கொலை-கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்த விவாதங்கள் என உள்ளாட்சித் தேர்தல் களம் அத்தனையும் அதிமுகவுக்கு எதிராகவே இருந்தன. இதனைத்தான் தற்போதைய தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தி இருக்கின்றன.

அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போது 2019-ல் நடத்திய உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு இணையான இடங்களைப் பெற்றது. ஆனால் இப்போது அதிமுக தலைவர்களே கனவிலும் நினைக்காத பெருந்தோல்வியை சந்தித்துள்ளனர். 140 மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெறும் 2 இடங்கள்தான் அதிமுகவுக்கு என்பதெல்லாம் சரித்திரம் காணாத தோல்விதான்.

அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 990 இடங்களில் திமுக வெற்றி பெற்ற நிலையில், 200 இடங்களுக்கே அதிமுக போராடுவதும் அக்கட்சியின் தொண்டர்களுக்கு மிகப் பெரும் துயர செய்திதான். அதிகாரத்தில் இருந்த போது பெருமிதத்துடன் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொன்ன இரட்டை தலைமை என்பது அதிமுகவுக்கு எப்படியான தேர்தல் முடிவுகளை தந்திருக்கிறது என்பது சுய பரிசோதனைக்குரியதாகவே அவர்கள் பார்த்தாக வேண்டும் என்று கட்சியினர் சீனியர்களின் குமுறலாக இருக்கிறதாம்.

பதிவு: October 13, 2021

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்