கணவர் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில், தம்பி வீட்டில் திருடி இந்த பணத்தில் இன்ஜினீயருடன் ஊட்டிக்கு சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த கன்னியாகுமரி பெண் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். கள்ளக்காதல் ஜோடியை கைது செய்துள்ள காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பேபிசுதா (44). நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் பேபிசுதா தனது இரு மகள்களுடன் சேரமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி பெத்தேல்புரம் பகுதியில் வசிக்கும் தனது தம்பி சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளாமோள் பேபிசுதாவை விருந்துக்கு அழைக்க, வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அங்குள்ள தேவாலய திருவிழாவில் கலந்து கொண்டு விருந்து முடித்து ஜனவரி 28-ம் தேதி பேபிசுதா சேரமங்கலத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவுகள் மற்றும் அறை கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவை சென்று பார்த்த போது அதில் இருந்த 50 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து மண்டைக்காடு காவல் நிலையத்தில் பேபிசுதா புகார் அளித்தார். இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். இதன்பின்னர் தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். கடந்த 7 மாதங்களாக தனிப்படை போலீசாருக்கு கொள்ளை குறித்து எந்த தடயமும் கிடைக்காத நிலையில் கொள்ளை நடந்த அன்று அந்த பகுதியில் இயங்கிய செல்போன் எண்களை ஆய்வு செய்த போது அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் உபயோகத்தில் இருந்ததும், அந்த வாலிபர் செல்போனில் இருந்து பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் அடிக்கடி பேசி கொண்டிருந்ததையும் தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அந்த வாலிபரையும் அவருடன் இருந்த இளம்பெண்ணையும் பெத்தேல்புரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த 27 வயதான பபின் என்று தெரியவந்தது. ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரான பபின் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வந்தார். கொரோனா நோய் தொற்றால் வேலையிழந்து கடந்த ஒன்றரை வருடத்திற்கு சொந்த ஊருக்கு வந்தது தெரியவந்தது.
பக்கத்து வீட்டை சேர்ந்த சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளா மோள் என்பவருடன் பபினுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவருடன் நெருங்கி பழகி கள்ளத்தொடர்பை ஏற்படுத்தி அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் உல்லாச வாழ்க்கைக்கு பணம் இல்லாத நிலையில் ஷர்மிளாமோள் சேரமங்கலத்தில் வசிக்கும் தனது கணவரின் சகோதரி பேபி சுதா வீட்டில் கொள்ளையடிக்கும் திட்டத்தை பபினிடம் கூறியுள்ளார்.
அதன்படி, பேபி சுதாவை கடந்த ஜனவரி மாதம் 26-ம் விருந்துக்காக வீட்டிற்கு அழைத்து ஷர்மிளாமோள் தங்க வைத்த நிலையில் 27-ம் தேதி இரவு திட்டமிட்டப்படி பபின் சேரமங்கலம் சென்று பேபி சுதா வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஷர்மிளா தனது கணவரிடம் வேலைக்கு நேர்முக தேர்வுக்காக சென்னை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இருவரும் நகைகளை விற்று ஊட்டியில் சொகுசு வீடு வாடகைக்கு எடுத்து உல்லாசமாக பல நாட்கள் இருந்துள்ளனர்.
பின்னர், சொந்த ஊர் திரும்பிய அவர்கள், யாருக்கும் சந்தேகம் வராத நிலையில் அடிக்கடி அதேப்போல் ஊட்டிக்கு சென்று உல்லாசமாக இருப்பதும் தற்போது நகைகளை விற்ற பணத்தில் சொந்தமாக சொகுசு வீடு ஒன்றை கட்டி கிரக பிரவேசம் செய்ததோடு இருவரும் வெளியூர்களுக்கு செல்லாமல் அந்த வீட்டிலேயே அடிக்கடி தனிமையாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்த தங்க நகைகளை மீட்ட போலீசார், இருவரையும் இரணியல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.