கிருஷ்ணகிரி
`நாளை உருவாகிறது புயல்; தமிழகத்தில் 5 நாட்களுக்கு செம மழை!'- வானிலை மையம் அலர்ட்

"அந்தமான் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது என்றும் இதனால் தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் செய்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி , கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும் ஈரோடு தேனி திண்டுக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வருகின்ற 15ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ம் தேதி ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இன்று முதல் வருகின்ற 16ம் தேதி வரை தென்கிழக்கு வங்க கடல், குமரி கடல், மன்னார் வளைகுடாப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் உள்ளிட்ட இடங்களில் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என அலர்ட் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: October 13, 2021
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு!- பண்ணந்தூரில் வீடுகள், கடைகள் அதிரடி அகற்றம்

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபடி பண்ணந்தூர் கிராமத்தில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், வீடுகள் அகற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்திலிருந்து கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரிக்கு செல்லக்கூடிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வணிக வளாக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை 2020ம் ஆண்டு மார்ச் மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் இன்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் சுமார் 600 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 17 நபர்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றை இடித்து அகற்றினர்.

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெயக்குமார் உதவி பொறியாளர் சிவசங்கரன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் பர்கூர் டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் 70க்கும் மேற்பட்ட போலீசார், போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் மற்றும் வட்டாட்சியர் முருகேசன் வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பதிவு: September 23, 2021

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்