கோயம்புத்தூர்
கோவையில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி- உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்...

கோவையில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தொடங்கி வைக்கிறார்.

கோவையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, நடப்பாண்டும் செட்டிபாளையம் எல் அன் டி பைபாஸ் சாலை அருகே, 64 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் மருதமலை சேனாதிபதி தலைமையில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர். போட்டியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, எம்.பி.க்கள் பி.ஆர்.நடராஜன் (கோவை), கு.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் மருதமலை சேனாதிபதி, செயலாளர் டாக்டர் மகேந்திரன், பொருளாளர் டி.ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதுவரை போட்டியில் கலந்து கொள்ள 950-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களான தேனி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் வருகின்றன. கொங்கு மண்டலத்தில் இருந்து 200 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு வருபவர்களின் பாதுகாப்புக்காக, இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. காளைகளை வரிசையாக நிறுத்த மைதானம் அருகில் உள்ள தென்னந்தோப்பில் இருந்தும் தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்தவும் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர்.

இப்போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முதல் பரிசாக காரும், 2-வது பரிசாக புல்லட்டும், 3-வது பரிசாக இருசக்கர வாகனமும் வழங்கப்பட உள்ளன. கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தலா 2 கிராமில் தங்க நாணயமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பதிவு: January 20, 2022
சித்திரை 1-ம் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டு- மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி…

சித்திரை 1-ந் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சித்திரை 1-ம் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டு என்று நம் அனைவருக்கும் தெரியும். தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமல்ல, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ்க்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரு கால வரம்பு இருக்கிறது, அதற்கான கால வரம்பில் அந்தந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இது பிரதமரே தொடங்கி வைத்த திட்டம் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே எய்ம்ஸ் வரும், தமிழக மக்கள் அனைவரும் எய்ம்ஸில் சிறப்பான சிகிச்சை எடுக்கப் போகிறோம்" எனத் தெரிவித்தார்.

பதிவு: January 12, 2022
வீட்டுக்கு வீடு சுவரோவியங்கள்... புது பொலிவுடன் கோவை குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள்!

கோயம்புத்தூர் மாநகராட்சி 'சீர்மிகு நகரம்' திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் புது பொலிவு பெறும் வகையில் சுவரோவியங்கள் தீட்டும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.


கோயம்புத்தூர் மாநகராட்சி 'சீர்மிகு நகரம்' திட்டத்தின் கீழ் St+art Art of India foundation எனும் அமைப்பின் 'கோவை கலைக்கூடம்' சார்பில் உக்கடம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் புது பொலிவு பெறும் வகையில் சுவரோவியங்கள் தீட்டும் பணியை அமைச்சர் செந்தில் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை கலைக்கூடம் சார்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி இதே உக்கடம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடிக்குமாடி குடியிருப்புகளில் வண்ண ஓவியம் தீட்டும் பணியினை அமைச்சர் தொடங்கி வைத்திருந்த நிலையில் முடிவுற்ற பணியை பார்வையிட்டார்.

இதன் பின்னர் வண்ண சுவரோவியங்கள் தீட்டிய ஓவியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். நவம்பர் 14 குழந்தைகள் தினம் சார்பில் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 60 குழந்தைகள் பங்கேற்ற சுவரோவியம் தீட்டும் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அப்பகுதி வாழ் மக்களைச் சந்தித்து அவர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பதிவு: December 18, 2021
`பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது!'- அடுத்தடுத்து சிறுமிகள் மர்மக் கொலையால் அன்புமணி காட்டம்

"பாச்சலூர் பள்ளி மாணவி, கோவை குழந்தை ஆகியோர் மர்மமாக படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் விரைந்து கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எந்தவித சமரசமும், அலட்சியமும் காட்டக் கூடாது" என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாச்சலூரிலும், கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகிலும் அடுத்தடுத்து இரு பெண் பிஞ்சுகள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பாச்சலூர் மாணவி கொலைக்கு காரணமான சதிகாரர்கள் இதுவரை கைது செய்யப்படாதது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானலை அடுத்த பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்நாள் பிற்பகலில் பள்ளிக்கட்டிடத்திற்கு பின்புறத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். அக்குழந்தையை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், செல்லும் வழியிலேயே அந்த பெண் பிஞ்சு உயிரிழந்துவிட்டது. அதேபோல், கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே கடந்த 11-ம் தேதி காணாமல் போன 15 வயது சிறுமி, ஐந்து நாட்களுக்குப் பிறகு நேற்று யமுனா நகரில் கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறாள். வாழ வேண்டிய இரு பிஞ்சுகளின் படுகொலைகள் நெஞ்சத்தை உருக்குகின்றன. இந்த இரு கொலைகளும் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பாச்சலூர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த ஒன்பது வயது குழந்தையின் சாவுக்கு பள்ளி நிர்வாகமும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் காலை 11 மணிக்கு, மதிய உணவுக்கு முந்தைய இடைவேளையின் போது வகுப்பை விட்டுச் சென்ற அந்தக் குழந்தை, இடைவேளை முடிந்த பிறகும் வகுப்புக்குத் திரும்பவில்லை. ஆனால், அதை ஆசிரியர்கள் அறியவில்லை. மதிய உணவு இடைவேளையின் போது அந்தக் குழந்தையை அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் அதன் அக்கா பள்ளி முழுவதும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தும்கூட, காணாமல் போன குழந்தையை தேட அவர்கள் முயற்சிக்கவில்லை.

அதன்பின்னர், மூத்தக் குழந்தை வீட்டுக்குச் சென்று பெற்றோரை அழைத்து வந்திருக்கிறாள். அவர்கள் தான் பள்ளிக்கட்டிடத்திற்கு பின்னால் பாதி எரிந்த நிலையில் குழந்தையை கண்டெடுத்திருக்கிறார்கள். அக்குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குக் கூட பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் சுமார் 50 லட்சம் மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். அண்மைக்காலங்களில் அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். நம்பி வரும் குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பை அரசு பள்ளிகளால் தர முடியவில்லை என்றால், அதைவிட மிகக்கொடிய கடமை தவறுதல் எதுவும் இருக்க முடியாது. இந்த அவலத்தை போக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாச்சலூர் பள்ளிக்குழந்தை கொலை செய்யப்பட்டு இரு நாட்களாகியும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. கோவை மாணவி காணாமல் போய் ஐந்து நாட்களாகியும் காவல்துறை கண்டுபிடிக்கத் தவறியதால் தான் அக்குழந்தை படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள். கோவை மாணவியை அவரது குடும்ப நண்பரே பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருக்கிறார். மாணவி காணாமல் போனதாக புகார் வந்த போதே காவல்துறை விசாரணையை தொடங்கியிருந்தால் குற்றவாளியை பிடித்து மாணவியை மீட்டிருக்கலாம்.

குற்றங்கள் நடந்த பின் குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிப்பது ஒரு வகையான கடமை என்றால், அத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுப்பது அதைவிட முதன்மையாக கடமை ஆகும். சிறிய குற்றம் செய்தால் கூட காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முடியாது என்ற உணர்வு சமூகத்தில் இருந்தாலே குற்றங்கள் குறைந்து விடும். ஆனால், அத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதில் காவல்துறை தவறுகிறதோ? என்ற ஐயத்தையும், கவலையையும் அண்மைக்காலத்தில் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஏற்படுத்துகின்றன.

பாச்சலூரில் குழந்தையை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்காத காவல்துறையினர், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெற்றோரையும், பொதுமக்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இப்போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மைக் காலங்களில் மாணவிகள் உள்ளிட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுதல், அதைத் தாங்கிக் கொள்ள முடியாத மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளுதல், பெண் குழந்தைகள் மர்மமாகக் கொல்லப்படுதல் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண் குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகம் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழ்ச் சமூகத்திற்கு அத்தகைய நிலை ஏற்படக்கூடாது.

பாச்சலூர் பள்ளி மாணவி, கோவை குழந்தை ஆகியோர் மர்மமாக படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் விரைந்து கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எந்தவித சமரசமும், அலட்சியமும் காட்டக் கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார்.

பதிவு: December 17, 2021
3 பவுன் நகைக்காக கொல்லப்பட்ட கோவை சிறுமி!- சிக்கிய தாயின் ஆண் நண்பர்

கோவையில் சாக்குமூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்டு சிறுமி சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் சிறுமியின் தாயின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 பவுன் நகைக்காக கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை, சரவணம்பட்டி பகுதியில் சாக்குமூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு படித்த மாணவி நேற்று சடலமாக மீட்கப்பட்டார். அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கட்டிட தொழிலில் மேஸ்திரியாக இருந்து வரும் சரவணன், வேலைக்கு செல்லும் போது அந்த மாணவியின் குடும்ப நண்பராக இருந்து வந்துள்ளார். பிறகு 3 சவரன் நகைக்காக கொலை செய்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது முத்துக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

பதிவு: December 17, 2021
கேரள காதலன் மீது ஆசிட் வீசிய காஞ்சிபுரம் காதலி!‍- `லிவிங் டுகெதர்' வாழ்க்கையில் நடந்த விபரீதம்

கோவையில் காதலன் மீது காதலி ஆசிட் ஊற்றியதோடு கத்தியால் குத்தியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். காதலியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்வர் ஜெயந்தி. இவர்கள் இருவரும் கோவையில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகின்றனர். லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அப்பிரச்னையில் காதலன் ராகேஷ் மீது, ஹேண்ட் பேக்கில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை வீசியுள்ளார் காதலி ஜெயந்தி. மேலும் ராகேஷை கத்தியால் குத்திவிட்டு தானும் தூக்க மாத்திரை சாப்பிட்டு ஜெயந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


தகவல் அறிந்து காவலர்கள் அங்கு சென்று விசாரித்து வருகின்றனர். தற்போது இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் ராகேஷ் மற்றும் ஜெயந்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலன் மீது காதலி ஆசிட் வீசியதோடு, அவரை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: December 04, 2021
கோவையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு!- 2 குட்டியுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நடந்த சோகம்

கோவையில் தண்டவாளத்தை 2 குட்டியுடன் கடக்க முயன்றபோது கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 3 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 9 மணியளவில் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது, கோவை மதுக்கரை வனச்சரகம் க.க.சாவடி காவல் நிலைய சரகம் மகேந்திர மேடு, நவக்கரை அருகே உள்ள தங்கவேல் காட்டு மூளை பகுதியை ரயில் கடக்கையில், வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி ரயில் பாதையை கடக்க முயன்ற 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதன் இரண்டு குட்டி யானைகள் மீது ரயில் மோதியது.

இதில், தாய் மற்றும் 2 குட்டி யானைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். யானை உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமான முறைப்படி இன்று காலை யானையின் உடல் அதே பகுதியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிவு: November 27, 2021
`என்னை நம்பர் ஒன் முதல்வர் என்று சொல்வதைவிட, தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக ஆக்குவதுதான் எனது லட்சியம்!'- முதல்வர் ஸ்டாலின்

"என்னை நம்பர் ஒன் முதல்வர் என்று சொல்வதைவிட, தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக ஆக்குவதுதான் எனது லட்சியம்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” இன்று நடந்தது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து பேசுகையில், "சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பதைப் போல, மக்கள் இல்லாமல் அரசோ ஆட்சியோ இயங்கிட முடியாது. அந்த மக்களைக் காப்பதுதான் ஒரு அரசாங்கத்தினுடைய மகத்தான பணி. அதில் இந்த அரசு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்ததாக ஒவ்வொரு துறைக்கும் தேவையான திட்டங்களைத் தீட்டி அதற்காக பல செயல்வடிவங்கள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியில் நான் இப்போது கலந்து கொண்டிருக்கிறேன்.

இத்தகைய சோதனையான காலத்திலும்கூட, தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து, ஆறு மாத காலத்தில் இது மூன்றாவது முதலீட்டாளர்கள் மாநாடு, மூன்றாவது முறையாக நடக்கின்ற மாநாடு. மாநாடு என்றால் கூட்டத்தைக் கூட்டுவது, பேசுவது, கோரிக்கை வைப்பது என்பதோடு நிறுத்தப்படுவது, அதுதான் மாநாடு என்று சொல்வோம். ஆனால் இந்த மாநாட்டில் என்ன வித்தியாசம் என்றால், ஒப்பந்தங்கள் கையெழுத்து போடக்கூடிய மாநாடாக இந்த மாநாடு நடந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு மீது இத்தகைய நம்பிக்கை வைத்து, அனைத்துத் தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்களும் இன்றைக்கு முன்வந்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்று. அதற்காக முதலில் தமிழக அரசின் சார்பில் அவர்களுக்கு எல்லாம் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மே மாதத்தில் ஆட்சிக்கு வந்தோம். ஜூலை மாதத்தில் ஒரு முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினோம். செப்டம்பர் மாதத்தில் ஒரு ஏற்றுமதியாளர் மாநாட்டை நடத்தினோம். இதோ நவம்பரில் அடுத்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்திருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு மாநாடு நடந்திருக்கிறது. இதே வேகத்தில் போனால் - இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம், நிச்சயமாக பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.

நான் பல நேரங்களில், பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். பல மாநில முதலமைச்சர்களை எல்லாம் ஒப்பிட்டு ஒரு கணக்கீடு எடுத்து ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டார்கள். அதில் இன்றைக்கு நம்பர் 1 முதலமைச்சராக என் பெயரை அறிவித்திருக்கிறார்கள். நேற்றைக்குக்கூட கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறபோது சொன்னேன், திருப்பூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறபோது நான் சொன்னேன், என் பெயரைச் சொல்லி நம்பர் ஒன் முதலமைச்சர் என்று சொல்வதைவிட, நம்பர் ஒன் தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய நிலையை உருவாக்குவதுதான் என்னுடைய லட்சியம் என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அதை நோக்கித்தான் இன்றைக்கு போய்க்கொண்டிருக்கிறோம்.

இன்று மட்டும் 35,208 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 76,795 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி என்று நான் கூறியிருந்தேன். அதற்கேற்ப 22 மாவட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால் அனைத்து மாவட்ட இளைஞர்களுக்கும் அவர்களது ஊர்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது" என்று கூறினார்.

பதிவு: November 23, 2021
`உங்களது துணிச்சல்மிக்க நடவடிக்கைகள் தொடரட்டும்!'- ஆய்வாளர் மாதய்யனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனின் வீரதீரச் செயலைப் பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாதய்யனுக்கு முதல்வர் அளித்த வாழ்த்து மடலில், ''சட்டம் - ஒழுங்குக்குச் சவால் விடும் குற்றவாளிகளின் கொட்டத்தை அடக்கி, பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்குரிய சூழலை உறுதி செய்வதே காவல்துறையின் முதன்மைப் பணியாகும். அத்தகைய பணியைத் திறம்படச் செய்யும் சீருடைப் பணியாளர்கள் மக்களின் உண்மை நாயகர்களாகி பெருமதிப்பினைப் பெறுகிறார்கள்.

கோவை சூலூர் காவல் நிலைய ஆய்வாளரான தாங்களும் தங்கள் காவல் நிலையத்தின் காவலர்களும் நீலாம்பூர் பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியை மேற்கொண்ட நிலையில், அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த சந்கேத்திற்கிடமான இரண்டு இளைஞர்களைத் தாங்கள் விசாரிக்கையில், சரியான பதில் சொல்ல முடியாத அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்றபோது, அவர்களைத் தடுக்க முயன்று சண்டையிட்டதில், தங்கள் சட்டை கிழிந்த நிலையிலும், ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அவர்களில் ஒருவரைத் தாங்களும் காவலர்களும் பிடித்திருக்கிறீர்கள். அந்த நபரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மற்றொரு நபரையும் அடையாளம் கண்டு, இருவரையும் கைது செய்து, அவர்கள் வசமிருந்த திருட்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்திருக்கிறீர்கள்.

மக்கள் உழைத்துச் சம்பாதித்த மோட்டார் சைக்கிள்களைத் திட்டமிட்டுத் திருடிவந்த நபர்களை, தாங்கள் உயிருக்கு அஞ்சாமல் போராடிச் சட்டத்தின் முன் நிறுத்தியதன் மூலம், மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறீர்கள். தங்களின் துணிச்சல்மிக்க செயல்பாடு, காவல்துறையில் உள்ள நேர்மையான- துணிச்சலான அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாகும். தங்களின் வீரதீரச் செயலைத் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் பாராட்டியுள்ள நிலையில், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் என்ற முறையில் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டம் - ஒழுங்கைச் சமரசமின்றி நிலைநாட்டும் தமிழ்நாடு காவல்துறையினரின் துணிச்சல் மிக்க இத்தகைய நடவடிக்கைகள் தொடரட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

பதிவு: November 23, 2021
`மரணம் அடைந்த பிறகும்கூட சாதி மனிதனை விடவில்லை!'- உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை

மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை என்று வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடல்களை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தனது கணவருக்கு சொந்தமான நிலத்துக்குச் செல்லும் சாலையில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கி உள்ளபோதிலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அதை பயன்படுத்த அனுமதிக்காததால் சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அனைத்து தரப்பினரும் மயானத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுத் துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மரணம் அடைந்த பிறகும்கூட சாதி மனிதனை விடவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பது வேதனையான விஷயம். மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடலையும் தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் அனுமதிக்க வேண்டும். மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும். மயானம் என அறிவிக்கப்படாத பகுதிகளில் உடல்களை தகனம் செய்யவோ அடக்கம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது'' என்று உத்தரவிட்டார்.

பதிவு: October 23, 2021

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்