சென்னையில் குறைந்து வரும் கொரோனா வைரஸ் பரவல்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ள நற்செய்தி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்துவருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று 19-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், “தமிழகம் முழுவதும் இன்று 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.  3.32 கோடி தடுப்பூசிகள் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன.

15 முதல் 18 வயதுடைய 25 லட்சம் பேருக்கு  இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடைய 5.56 லட்சம் பேரில் 1.84 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 600 சிறப்பு முகாம்கள் வரும் வியாழக்கிழமை அமைக்கப்படும். இதுவரை தமிழகத்தில் 9.17 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மேலும் அவர், “சென்னை, 94.9% பேருக்கு முதல் தவணை செலுத்தி இந்தியாவில் உள்ள  பெருநகர மாநகராட்சியில் அதிக தடுப்பூசி செலுத்தியதில் முன்னிலை வகிக்கிறது. 74.11 % பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதே கொரோனா தொற்றிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.  தடுப்பூசி செலுத்தியுள்ளதால் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. முழுமையான இறப்பு விகிதத்தை குறைக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

உங்களை காப்பாற்றுவதற்கு தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒரு தடுப்பூசியின் விலை 1100 ரூபாய் இருக்கும் நிலையில், மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு அரசாங்கம் தடுப்பூசி முகாம் நடத்துகிறது. எனவே தடுப்பூசிக்கு போலி சான்றிதழ் கொடுக்க வேண்டாம் வாங்க வேண்டாம் என்பதை சிந்தித்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

உள் மாவட்டங்களில் தொற்றின் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் தொற்றின் பாதிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன் 9 ஆயிரமாக இருந்த நிலையில், நேற்று 7 ஆயிரமாக சற்று குறைந்துள்ளது. 15 - 18 வயகுட்பட்டோர், தங்கள் வயதுக்கான சான்றிதழை காண்பித்து அனைத்து தடுப்பூசி முகாம்களிலும் கோவாக்‌சின் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

உருமாற்றம் அடைந்த கொரோனா உட்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. சான்றிதழ் குளறுபடி காரணமாக தடுப்பூசி செலுத்தவதில் சிக்கல் ஏற்பட்டால் 104 என்ற எண்ணின் மூலம் புகார் அளித்து தடுப்பூசி செலுத்திகொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

பதிவு: January 22, 2022
கர்நாடகாவில் நடைமுறையில் இருந்த வார இறுதிநாள் ஊரடங்கு ரத்து! இரவு நேர ஊரடங்கு மட்டும் தொடரும் என அறிவிப்பு!

கர்நாடகாவில், நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த வார இறுதிநாள் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டபடி நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் கொரோனா நோய்த்தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளிலும், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலும் அண்மையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிக்கத் துவங்கியதை அடுத்து, பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு  நடைமுறையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில், கர்நாடகாவில் அதிகரித்துவரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றுப் பரவல் காரணமாக  வாரயிறுதி நாட்களில் முழு ஊரடங்கு அம்மாநில அரசால் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. மேலும் இரவு நேரத்திலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.  

இதையடுத்து, அம்மாநிலத்தில் நடைமுறையில் இருந்த வார இறுதிநாள் ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குகளை ரத்து செய்வதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு மட்டும் அறிவித்தபடி ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: January 21, 2022
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு- மீண்டும் 3 லட்சத்தை தாண்டியது...

கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் நாள்தோறும் சற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் மேலும் 491 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் கடந்த மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியது.

இந்தியாவில் கடந்த மாதம் 28-ந்தேதி வரை தினசரி பாதிப்பு 6 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது. அதன்பிறகு மின்னல் வேகத்தில் பரவிய தொற்றால் நாள்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

இதனால் நாட்டில் 3-வது அலை தொடங்கி விட்டதாகவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படியும் சுகாதாரத்துறையினர் எச்சரித்தனர்.

இதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்தது.

இந்நிலையில் 3-வது அலையில் இதுவரை இல்லாத அளவில் நேற்றைய பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,17,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் 2,82,970 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று ஒரேநாளில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த மே மாதம் முதல் வாரத்தில் 2-வது அலை உச்சத்தில் இருந்தது. மே 7-ந்தேதி நிலவரப்படி, ஒரே நாளில் 4.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உச்சத்தை எட்டியது. அதன்பிறகு படிப்படியாக சரியத் தொடங்கியது. 15-ந்தேதி 3.10 லட்சமாகவும், மறுநாள் 2.8 லட்சமாகவும் இருந்தது.

பின்னர் நாள்தோறும் பாதிப்பு சரிந்து வந்த நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு தற்போது தினசரி பாதிப்பு மீண்டும் 3 லட்சத்தை தாண்டி உள்ளது.

இன்றைய நிலவரப்படி, தினசரி பாதிப்பு விகிதம் 15.13-ல் இருந்து 16.41 சதவீதம் ஆகவும், வாராந்திர பாதிப்பு 15.53-ல் இருந்து 16.06 சதவீதம் ஆகவும் உயர்ந்துள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 82 லட்சத்து 18 ஆயிரத்து 773 ஆக உயர்ந்தது.

நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 43,697 பேரும், கர்நாடகாவில் 40,499 பேரும், கேரளாவில் 34,217 பேரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 26,981, குஜராத்தில் 20,966, உத்தர பிரதேசத்தில் 17,662, டெல்லியில் 13,785, ராஜஸ்தானில் 13,398, மேற்கு வங்கத்தில் 11,447, ஒடிசாவில் 11,607, ஆந்திராவில் 10,057 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் நாள்தோறும் சற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் மேலும் 491 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 134 பேர் அடங்குவர். இதுதவிர மகாராஷ்டிராவில் 49, மேற்கு வங்கத்தில் 38, தமிழ்நாட்டில் 35, டெல்லியில் 35, பஞ்சாபில் 29, கர்நாடகாவில் 21 பேர் நேற்று இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,87,693 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2,23,990 பேர் முழுமையாக நலம் பெற்றனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 58 லட்சத்து 7 ஆயிரத்து 29 ஆக உயர்ந்தது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19,24,051 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று முன்தினத்தைவிட 93,051 அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 73,38,592 டோஸ் தடுப்பூசிகளும், மொத்தம் 159 கோடியே 67 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 18,69,642 பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று பரிசோதனை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சமீப நாட்களில் இல்லாத அளவில் நேற்று ஒரேநாளில் 19,35,180 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 70.93 கோடியாக உயர்ந்துள்ளது.

பதிவு: January 20, 2022
ஒமைக்ரானை மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்- உலக சுகாதார அமைப்பு மீண்டும் எச்சரிக்கை...

ஒமைக்ரானை மிதமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ அதிக தொற்று தன்மை கொண்ட ஒமைக்ரான் உலகளவில் பரவி வருகிறது. ஒமைக்ரான் மிதமான பாதிப்பை எற்படுத்துகிறது என்பதை ஏற்க முடியாது. அதனை மிதமாக எடுத்து கொள்ள வேண்டாம் ஐரோப்பா தற்போது கரோனா பரவலின் மையமாக உள்ளது. கடந்த வாரம் மட்டும் ஐரோப்பாவில் 50 லட்சம் பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளில் செவ்வாய்க்கிழமை மட்டும் 1 லட்சம் பேர் வரை கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹானின் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா , 2020 தொடங்கியவுடனேயே உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இரண்டு ஆண்டுகளை கடந்த பிறகு கரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

தடுப்பூசியால் கரோனாவின் தீவிரத் தன்மை உலகளவில் குறைந்தாலும், முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கரோனா தொடர்ந்த வண்ணமே உள்ளது. எனினும் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் கரோனா முடிவுக்கு வரும் என்று மருத்துவ வல்லுனர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பதிவு: January 19, 2022
தமிழக அமைச்சருக்கு 2-வது முறையாக கரோனா பாதிப்பு உறுதி...

தமிழக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு இரண்டாவது முறையாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில் முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக ஏற்கனவே கரோனா பாதித்தவர்கள் தற்போது மீண்டும் கரோனா தாக்குதலுக்கு உள்ளாகும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தத் தகவலை அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த சில வாரங்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொற்று பாதிப்புக்கு அவர் ஆளாகியுள்ளார்.

பதிவு: January 19, 2022
2-14 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை- மத்திய அரசு தகவல்…

12-14 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

12-14 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் முடிவு எடுக்கவில்லை. நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் பேராயுதமாக விளங்கி வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதிதான் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.

 

முதல்கட்டமாக முன்களபணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது. பின்னர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் மெல்ல மெல்ல 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவரும் என்று விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது ஓராண்டின் நிறைவில், சுமார் 156.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், நாட்டில் உள்ள 92 சதவீத பெரியவர்கள் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருப்பார்கள். 68 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. கடைசியாக, 2022-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி முதல் 15 - 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நாட்டில் இதுவரை 3.38 கோடி தடுப்பூசிகள் சிறார்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், உலகிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்ற தடுப்பூசி திட்டம் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மிகவும் வளர்ந்த நாடுகளில் கூட மிகக் குறைவான மக்களே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் நிலையில், நமது நாட்டில் பெரிய அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நாட்டில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி எட்டப்பட்டது. கடந்த 7-ம் தேதி இது 150 கோடியைத் தொட்டது. பலமுறை ஒரு கோடிக்கும் அதிகமான டோஸ் ஒரேநாளில் செலுத்தப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 66 லட்சம் தடுப்பூசிகள் என்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, இது 156.76 கோடியை தொட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், தற்போது பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கிவிட்டது. அதன்கீழ் 43.19 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி திட்டம் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடங்குகிறது என தகவல் வெளியானது. தற்போது 12-14 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பதிவு: January 18, 2022
`கொரோனா கடைசி வரை நம்முடன் பயணிக்கும்; தமிழகத்தில் லாக்டவுன் தேவையில்லை!'- WHO விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

"கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் " என்று கூறிய உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை என தெரிவித்தார்.

சென்னை திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கலந்து கொண்டு பேசுகையில், "கொரோனா 3-ம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை.

கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அனிமியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இனி அதிகரிக்கக்கூடும். கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்" என்று கூறினார்.

பதிவு: January 08, 2022
இந்தியாவில் ஒன்றரை லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 1,41,986 பேர் பாதித்துள்ளனர். ஒரே நாளில் 285 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் புதிதாக 1,41,986 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,53,68,372 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 285 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,83,463 ஆக உயர்ந்தது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 40,895 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,44,12,740 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,72,169 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்தோர் விகிதம் 97.30% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.37% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் 1,50,61,92,903 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 90,59,360 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

பதிவு: January 08, 2022
தமிழகத்தில் நாளை முதல் இரவில் லாக்டவுன்!- எதற்கெல்லாம் தடை முழு விவரம்

தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் மருத்துவ அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

* தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்

* இரவு ஊரடங்கு நேரத்தில் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை.

* மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.

* அனைத்துப் பள்ளிகளிலும், 1ம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

* பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

 

* அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

* பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

* பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

* பொது பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில், 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

* மெட்ரோ இயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

* அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.
* அனைத்து பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Parks / Amusement Parks) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

* அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும்.

* அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

* சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

* மீன் மற்றும் காய்கறிச் சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களிலிருந்து செல்லும் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை மற்றும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

* கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அனைத்து சேவைத் துறைகள் போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.

* அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் 9.1.2022-க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

* ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்குச் செல்லும்போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்துக்கொள்ளவேண்டும்.

பதிவு: January 05, 2022
`3 நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை; ஞாயிறு முழு ஊரடங்கு!'- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தலைதூக்கியுள்ளதால் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவோடு சேர்ந்து ஒமிக்ரானும் பரவி கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பாக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருந்த சூழலில் தற்போது தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக விடுமுறை விடப்பட்டால் தடுப்பூசி செலுத்த மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பதிவு: January 05, 2022
இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா... ஒரு நாளில் 58,097 பேர் பாதிப்பு... 534 பேர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவால் 58,097 பேர் பாதித்துள்ளனர். ஒரே நாளில் 534 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 58,097 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,50,18,358 ஆக உயர்ந்தது. புதிதாக 534 பேர் இறந்துள்ளனர்.

நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,82,551ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 15,389 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,21,803 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,14,004பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்தோர் விகிதம் 98.01% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.61% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் 1,47,72,08,846 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 96,43.238 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

பதிவு: January 05, 2022
`நம்பர் ஒன் தேனாம்பேட்டை மண்டலம்!'- சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு

சென்னை மாநகரில் இதுவரை 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவாக தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் 228 தெருக்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு 700-க்குள் இருந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு 1892-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 766 பேர் குணமடைந்துள்ளனர். 1,126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுவும் தலைநகர் சென்னையில் தினம்தோறும் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது.

அதாவது தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ளன. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகரில் இதுவரை 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 988 தெருக்களில் 3க்கும் குறைவான எண்ணிக்கையில் கொரோனா தொற்றுடையவர்கள் உள்ளனர். 170 தெருக்களில் 3க்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா தொற்றுடையவர்கள் உள்ளனர். 86 தெருக்களில் 4க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். இதில் அதிகளவாக தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் 228 தெருக்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் மொத்தமாக 3,486 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 38,379 தெருக்களில் எவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பதிவு: January 04, 2022
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொரோனா!- குவாரண்டையனில் பிரியங்கா காந்தி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரியங்கா காந்தியின் உறவினர் மற்றும் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

டெல்லியில் கொரோனா பரவல் சற்று வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக ஒமிக்ரான் அதிகம் பதிவாகி உள்ள மாநிலங்களில் பட்டியலில் டெல்லி 2ம் இடத்தில் உள்ளது. டெல்லியில் ஏற்கெனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள், பியூட்டி பார்லர்கள், ஜிம்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்டவை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு சிறிய அளவில் அறிகுறிகள் தென்பட்டன. நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் சமீபத்திய நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் உங்களை உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதே போல் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கும், எனது பணியாளர் ஒருவருக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் கொரோனா சோதனை செய்ததில் நெகட்டிவ் என்று வந்தது. இருப்பினும், சில நாட்கள் நீங்கள் தனிமைப்படுத்திகொண்ட பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

பதிவு: January 04, 2022
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு தயக்கமின்றி அபராதம் வசூலியுங்கள்!'- சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு தயக்கம் இன்றி அபராதம் விதிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை காலகட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்தன. தற்போது அபராதங்களில் தளர்வுகள் காட்டப்பட்டு வந்த நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதால் அவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் அரசு வலியுறுத்தி வருகிறது. வருகின்ற 10ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா தடுப்பு விதிகள் வகுத்து அளிக்கப்பட்டிருக்கின்றன. கூட்டம் கூடுவதற்கான விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த விதிகளை மீறுவோருக்கு தயக்கமின்றி அபராதம் வசூலிக்க சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார். மேலும், கூடுதலாக 50,000 படுகைகளை ஏற்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

பதிவு: January 03, 2022
`ஒமிக்ரானை எதிர்கொள்ள ஒரே வழி தடுப்பூசிதான்!'- WHO விஞ்ஞானி சௌமியா சாமிநாதன்

"ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே ஒரே வழி" என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் கூறியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற காணொளி காட்சி கூட்டத்தில் பேசிய அவர், தடுப்பூசிகளுக்கு ஒமிக்ரானை எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் டி செல்களில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி ஒமிக்ரானுக்கு எதிராக சிறப்பாக வேலை செய்கிறது.

மருத்துவமனைகளில் நெரிசல், ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னை என எதுவும் இல்லாமல் இருப்பது ஒரு நல்ல அறிகுறி. தடுப்பூசி போட்டுக் கொள்வது கடுமையான நோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கும். உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்களையும் ஒமிக்ரான் பாதித்தாலும் ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்பட்டு மரணத்தில் இருந்து நம்மை காக்கிறது. யாரேனும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இருந்தாலும் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

பதிவு: December 30, 2021
`அவசர தேவைக்கு பயன்படுத்தலாம்!'- இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி!

இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. கோவோவேக்ஸ், கோர்பிவேக்ஸ் என்ற தடுப்பூசிகளுக்கு ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவாக்சின் , கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, ஜனவரி 1ம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், கோவோவேக்ஸ், கோர்பிவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


2 கொரோனா தடுப்பூசிகளையும் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் மோல்நுபிரவிர் மருந்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் மன்சுக் மாண்டவியா தகவல் அளித்துள்ளார்.

மேலும் 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், பல்வேறு தரப்பினர் வலியுறுத்தும் ஃபைசர், மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஹைதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள கோர்பிவேக்ஸ் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புரத அடிப்படையிலான தடுப்பூசியாகும். நானோ துகள் தடுப்பூசியான கோவோவேக்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே மோல்நுபிரவிர் மாத்திரை பயன்தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: December 28, 2021
`கொரோனாவால் பாதிக்கப்பட்ட வடிவேலு நலமுடன் இருக்கிறார்!'- மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நடிகர் வடிவேலு நலமுடன் இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு, தன்னுடைய புதிய படத்திற்காக, இயக்குநர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோருடன் லண்டனுக்கு இந்த மாத தொடக்கத்தில் சென்றிருந்தார்.

அங்கு 10 நாட்கள் தங்கிய பின்பு, தமிழகம் திரும்பிய அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, ஒமிக்ரான் தொற்றுக் கூடிய அறிகுறிகள் இருப்பதாக கூறி, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என கூறப்பட்டுள்ளது.

பதிவு: December 27, 2021
15 முதல் 18 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஜனவரி 1 முதல் முன்பதிவு!

15 முதல் 18 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஜனவரி 1 முதல் கோவின் (CoWIN) செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஏற்கெனவே ஒருபுறம் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி என்பது மிக தீவிரமாக நடந்து வரும் நிலையில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கும் என பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். அதற்கான பணிகளை தற்போது மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ள நிலையில் இதற்கான முன்பதிவு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கும் என்று ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ள சிறார்கள் கோவின் இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தற்போது ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.

கோவின் இணையத்தளத்தில் 15 முதல் 18 வயதுள்ள சிறார்கள் தங்களது ஆதார் அட்டை அல்லது 10ம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையை வைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். டாக்டர் ஆர்எஸ் சர்மா, கோவின் இயங்குதள தலைவர் இந்த தகவலை தற்போது அளித்துள்ளார்.

பதிவு: December 27, 2021
தமிழகத்தில் இரவில் முழு ஊரடங்கா?- டிசம்பர் 31ம் முடிவு என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"தமிழ்நாடு முழுவதும் இதுவரை 97 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் இரவு நேரத்தில் முழு ஊடரங்கு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து வரும் 31ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்படும்" என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவோருக்கான சிறப்பு படுக்கை வசதிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் கடந்த மே மாதத்திற்கு பிறகு 77 இடங்களில் கொரோனா கேர் சென்டர்ஸ் இந்திய மருத்துவதுறையின் சார்பில் சித்தா கோவிட் கேர் சென்டர்கள் உருவாக்கப்பட்டது. இதில் 1800 படுக்கைகள் அமைக்கப்பட்டது. இந்த துறையை பொறுத்தவரை ஏற்கெனவே 1542 மையங்கள் தமிழகத்தில் இயக்கி கொண்டுள்ளது. அதன் மூலம் நிரந்தரமான படுக்கைகள் என்கிற வகையில் 1710 படுக்கை வசதிகள் இருக்கின்றன. தொடந்து சித்தா மருத்துவத்தின் சார்பில் ஆந்த வசதிகளை துரிதப்படுத்தி மேம்படுத்தி அடுத்து பாதிப்புக்குள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தரவு அலகு (Data Cell) உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சார்பில் இதனுடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் இந்த Data Cell தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாதவரம் பால்பண்ணை அருகே 19.6 ஏக்கர் நிலப்பரப்பில் 2 கோடி ரூபாய் சித்தா மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது. புதிய தரவு மையத்தை மூலம் தமிழ்நாட்டு சித்த மருத்துவர்கள், இந்திய மருத்துவ துறையுடன் தொடர்பு கொள்ள முடியும். சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கான அலுவலகத்தை 10 நாளில் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். இந்தியாவுக்கு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக சித்தா மருத்துவ பல்கலைக்கழகம் இயங்கும்.

ஒமிக்ரான் அறிகுறி 97 பேருக்கு தமிழகத்தில் மருத்துவத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவத்துறையால் 34 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டவர்களின் மாதிரிகள் ஒன்றிய அரசின் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே மரபியல் ஆய்வு கூடம் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதில் ஒமிக்ரான் பரிசோதனை செய்து ஆய்வு முடிவுகளை அறிவிக்க ஒன்றிய மருத்துவ குழுவினரிடம் வலியுறுத்தப்படும். இதனால் ஒன்றிய அரசின் மருத்துவ பரிசோதனைக்கு மாதிரிகளை அனுப்பி பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கான கால தாமதம் குறையும்.

தமிழகத்தில் பரிசோதனை செய்து முடிவுகளை வெளியிடும் அனுமதியை ஒன்றிய அரசு வழங்கினால் தினசரி ஒமிக்ரான் பாதிப்பு விவரங்களை வெளியிட முடியும். பன்னாட்டு விமான நிலையங்களில் கொரோனா பாதிப்பு அதிகமில்லாத நாடுகளில் இருந்து வருவோருக்கு RTPCR பரிசோதனை மற்றும் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கவும் ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுகுறித்தும் ஒன்றிய அரசின் குழுவினரிடம் வலியுறுத்தப்படும். ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் இரவு நேரத்தில் முழு ஊடரங்கு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து வரும் 31ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்படும்" என்று கூறினார்.

பதிவு: December 27, 2021
இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் உள்ள 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 578 ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

டெல்லியில் தான் மிக அதிகபட்சமாக 142 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்ததாக மகாராஷ்டிராவில் 141 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 3-வது இடத்தில் கேரளா மாநிலத்தில் 57 பேருக்கும் குஜராத்தில் 49 பேருக்கும் ராஜஸ்தானில் 43 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34.

கர்நாடகா 31, மத்தியப் பிரதேசம் 9, மேற்கு வங்கம் 6, ஹரியானா 4, ஒடிஷா 4, ஆந்திரா 6, ஜம்மு காஷ்மீர் 3, உத்தரப்பிரதேசம் 2, சண்டிகர் 3, லடாக் 1, உத்தரகாண்ட் 1, ஹிமாச்சல் பிரதேசம் 1, ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 151 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே, ஒமிக்ரான் பாதிப்பில், முதல் 10 இடங்களில் உள்ள மாநிலங்களுக்கு இந்த மத்திய பன்னோக்கு குழு வர இருக்கிறது. அதில், 6-வது இடத்தில் உள்ள தமிழகத்திற்கு நேற்று இரவு பன்னோக்கு குழு வந்தது. சென்னைக்கு விமானம் மூலம் வந்த இந்தக் குழுவில், மத்திய சுகாதாரத்துறையை சேர்ந்த வல்லுநர்களான டாக்டர்கள் வினிதா, புர்பசா, சந்தோஷ்குமார், தினேஷ்பாபு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவினர் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கிண்டியில் உள்ள கிங்ஸ் கொரோனா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ய இருக்கின்றனர். தொடர்ந்து 5 நாட்கள் தமிழகத்திலேயே தங்கியிருந்து, மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஒமிக்ரான் தடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இந்தக் குழுவினர், தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களுக்கும் சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை முறை, வெண்டிலேட்டர் வசதி, மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய இருக்கின்றனர். பின்னர், ஆய்வின் முடிவுகளை அறிக்கையாக தயாரித்து மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,  நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.79 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.47 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 6,531 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,93,333 ஆக உயர்ந்தது.

புதிதாக 315 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,79,997 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 7,141 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,37,495 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 75,841 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குணமடைந்தோர் விகிதம் 98.40% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.22% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் 1,41,70,25,654 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 29,93,283 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பதிவு: December 27, 2021
15 பேர் தொற்றால் பாதிப்பு!- கனடாவை அச்சுறுத்தும் ஒமிக்ரான்

கனடாவில் 15 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்றான ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கனடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கனடா தேசிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை ஏற்று 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆறு மாதங்களுக்குள் தடுப்பூசி தொடரை முடித்து பிறகு பூஸ்டர் ஷாட் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவைத் தவிர அனைத்து நாடுகளிலிருந்தும் விமானம் மூலம் வரும் மக்கள் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது, தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10 நாடுகளை உள்ளடக்கும் வகையில் பயணிகளுக்கான தடையை விரிவுபடுத்தியது.

டொராண்டோவில் நேற்று ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று மூன்று பேருக்கு உறுதியானது. அவர்களில் இருவர் சமீபத்தில் நைஜீரியாவிலிருந்து திரும்பினர், மற்றொருவர் சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பியவர். தற்போது கடுமையான கொரோனா தொற்று பாதிப்பு இல்லையென்றாலும் வரும் வாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துளள்னர்.

கோவிட்-19 சிகிச்சைக்காக பைசர் நிறுவனத்தின் ஒரு மில்லியன் டோஸ் வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்தை வாங்க கனடா ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் மெர்க் நிறுவனத்துடன் 500,000 டோஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

பதிவு: December 04, 2021
`பள்ளிகளில் ஒமிக்ரான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!'- பள்ளி கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளிகளில் ஒமிக்ரான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் ஒமிக்ரான் வைரஸை தடுக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

* வேகமாக பரவும் ஒமிக்ரான் வைரஸ் விழிப்புணர்வு & நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

* அனைத்து வகை பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்

* 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்

* நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம்

* பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக் கூடாது

* ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்

* மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.

* வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தனி மனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

* பள்ளியில் நீச்சல் குளங்களை மூட வேண்டும்.

* இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.

* நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது.
என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பதிவு: December 03, 2021
சிங்கப்பூர், இங்கிலாந்தில் இருந்து திருச்சி, சென்னை வந்தவர்களுக்கு கொரோனா!- ஒமிக்ரான் டெஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டது மாதிரிகள்

சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து விமானத்தில் திருச்சி, சென்னைக்கு வந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, அந்த நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 136 பயணிகளிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிய வகை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அவரின் மாதிரிகள் ஒமிக்ரான் வகை கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூரை சேர்ந்த அந்த நபர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருச்சி ஆட்சியர் கூறுகையில், இவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மாதிரிகள் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த நபருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா உறுதியான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முழுமையான பரிசோதனை முடிவு வரும் வரை ஒமிக்ரான் உறுதி என எடுத்துக்கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

பதிவு: December 03, 2021
கர்நாடகாவில் 2 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிப்பு!- இந்தியாவில் அலர்ட்

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் மருத்துவமனையிலும், ஒருவர் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கெனவே டெல்டா, பீட்டா, காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. இதற்கிடையில், தற்போது கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது.

‘ஒமிக்ரான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். ஆனால் விழிப்புடன் இருப்பது அவசியம். ஒமிக்ரான் பாதிப்புள்ளவர்களுக்கு தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள 2 பேரோடு தொடர்பில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள 2 பேரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள இருவரில் ஒருவருக்கு 66 வயதும், மற்றொருவருக்கு 46 வயது. ஒருவர் மருத்துவமனையிலும், ஒருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 29 நாடுகளில், உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.

பதிவு: December 02, 2021
திரையரங்குகள் 100% இருக்கை அனுமதியை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நவம்பர் 3,4ம் தேதிகளில் திரையரங்குகளை மூடவும் உத்தரவிடக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தற்போது தொடர்ச்சியாக திருவிழா காலமாக இருப்பதால், கொரோனா நோய் தடுப்பு வழி முறைகளை, பொதுமக்கள் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதாகவும், தமிழகம் இன்னும் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடவில்லை. இந்நிலையில், திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது கொரோனா நோய் தொற்று பரவலை அதிகரிக்கவே செய்யும்.

அன்மையில், கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்ததன் காரணமாக 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. திரையரங்கங்கள் 100% இருக்கைகளுடன் இயங்கும் போது பார்வையாளர்கள் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே இருக்கும்.

தற்போது தீபாவளி பண்டிக்கையை ஒட்டி எனிமி, வா டீல் ஆகிய உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவுள்ளன. இது கொரோன பரவலுக்கு காரணமாக அமையும். எனவே, சினிமா திரையரங்குகள், 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்தும், நவம்பர் 3, 4 தேதிகளில் திரையரங்குகளை மூடவும் உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

பதிவு: October 30, 2021
`இந்தியாவில் மனிதர்களில் சராசரி ஆயுள் காலத்தை 2 ஆண்டுகளாக குறைத்தது கொரோனா!'- ஆய்வில் அதிர்ச்சி

கொரோனா பாதிப்பிற்கு பிறகு இந்தியாவில் மனிதர்களில் சராசரி ஆயுள் காலம் 2 ஆண்டுகள் குறைந்திருப்பதாக ஆய்வு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து பல அலைகளாக தாக்க தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.

தற்போதை நிலையில் தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இதனால் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள், முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த ஜனவரி முதல் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு இந்தியாவில் மனிதர்களில் சராசரி ஆயுள் காலம் 2 ஆண்டுகள் குறைந்திருப்பதாக ஆய்வு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த மக்கள் தொகை ஆய்வுக்கான சர்வதேச மையம் என்ற அமைப்பு இந்த தகவலை தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு ஆண்களின் சராசரி வயது 69.5 ஆகவும், பெண்களின் சராசரி வயது 72 ஆகவும் இருந்ததாக அம்மய்யத்தின் பேராசிரியர் சூரியகாந்தி யாதவ் தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டு இது ஆண்டுகளுக்கு 67.5 ஆகவும், பெண்களுக்கு 69-8 ஆகவும் குறைந்து விட்டதாக அவர் கூறியுள்ளார். எனினும் கொரோனா சூழல் முழுமையும் கட்டுக்குள் வரும் பட்சத்தில் சராசரி ஆயுள் காலம் மீண்டும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பதிவு: October 23, 2021
`பிப்ரவரி வரை மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்!'- ராதாகிருஷ்ணன்

"குறைந்தபட்சம் பிப்ரவரி வரையாவது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்" என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதற்கு ஒவ்வொரு மாநிலமும் தனது பங்கை செலுத்தி உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 5.4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளில் 5.14 கோடி அரசு மூலமாகமும், 26 லட்சம் டோஸ் தடுப்பூசி தனியார் மருத்துவமனை மூலமாக செலுத்தப்பட்டுள்ளது. தற்போது நம்மிடம் 53.84 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். இதை கடமையுடன் கூடிய தளர்வுகள் என மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பிப்ரவரி வரையாவது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்`` என தெரிவித்தார்.

பதிவு: October 21, 2021
`கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் வர எந்த தடையும் இல்லை!'- இங்கிலாந்து திடீர் அறிவிப்பு

"கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வர எந்த தடையும் இல்ல" என இங்கிலாந்து அரசு திடீரென அறிவித்துள்ளது.

உலகில் பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் போதும் சில தடுப்பூசிகள் மட்டுமே சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளன. அந்த வகையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து அங்கீகரித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை தங்கள் நாட்டில் அனுமதிக்க மறுத்து வந்தது.

இந்தியாவில் இருந்து வருவோர் கோவிஷீல்டு தடுப்பூசியை 2 தவணைகள் செலுத்திய போதும் தங்கள் நாட்டுக்குள் வரும் போது 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவித்தது. இது இந்திய பயணிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவிஷீல்டு உள்பட தங்கள் நாட்டால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை முழுமையாக செலுத்திக்கொண்ட இந்தியர்கள் வரும் 11ம் தேதி முதல் பிரிட்டனில் கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியாவிற்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லீஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அரசின் இந்த அறிவிப்பு இந்திய பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே உற்பத்தி அதிகரித்துள்ளதால் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து நேபாளம், மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல் ஈரானுக்கு 10 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை அனுப்பவும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: October 08, 2021
திருமணத்தில் அலைமோதும் கூட்டம்... கொரோனா அதிகரிக்க வாய்ப்பு… அலட்சியத்தில் அதிகாரிகள்?

கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்களா? என்பதுதான் தற்போதைய பெரிய கேள்வியாக உள்ளது.

கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து திருமண மண்டபங்களில் 50 சதவீதம் அளவுக்கு ஆட்களை அழைத்து திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றும் நாளையும் (வியாழன், வெள்ளி) முகூர்த்த நாட்கள் என்பதால் சென்னையில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் கூட்டம் அலைமோதியது. ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அதிக அளவில் மக்கள் பயணித்ததை காண முடிந்தது. இதன் காரணமாக சென்னையில் திருமண மண்டபங்கள் இருக்கும் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

கொரோனா அச்சமின்றி திருமண நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பலர் ஒரே இடத்தில் திரண்டு நிற்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முககவசம் அணியாமல் இருந்தனர். சென்னையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் இருந்து பலர் வந்துள்ளனர். இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜூகளில் அனைத்து அறைகளும் நிரம்பி உள்ளன.

சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும், அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கு தனித்தனி வாகனங்களும் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் சென்று அதிகாரிகள் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டதுடன் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.

ஆனால் இந்த நடைமுறை தற்போது முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் முறையாக கண்காணித்து, மாஸ்க் அணியாதவர்களுக்கு உரிய அபராதம் விதித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். அதேபோன்று திருமண கூடங்களை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும். அப்படி கண்காணித்தால் இப்படி கூட்டம் கூடாது. திருமண உரிமையாளர்களுக்கு உரிய எச்சரிக்கை செய்ய வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து இருக்கிறது.

அதிகாரிகள் சரியாக பணியாற்றினால் மட்டுமே கொரோனா நோயை ஒழிக்க முடியும். அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என்றால் அண்டை மாநிலமான கேரளா போன்றே தமிழகத்திலும் கொரோனா நோய் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

பதிவு: September 09, 2021
நீட் உள்பட 10 கோரிக்கை!- ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

10 அம்ச கோரிக்கைகளுடன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்பகல் 2 மணிக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டனர். டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று பிற்பகல் 2 மணி அளவில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். தமிழக மக்கள் தொகையின் அடிப்படையில் தடுப்பூசி வழங்க ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளேன்.

11 புதிய மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கப்பட வேண்டும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். நீட் தேர்வு சம்பந்தமாக விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். இதுபோன்ற 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கொடுக்க இருக்கிறோம். மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி கோர உள்ளதாகவும் தெரிவித்தார்.

பதிவு: September 03, 2021

முக்கிய செய்திகள்

'தமிழகத்தில் புழங்கும் பரிசுச்சீட்டு விற்பனையை முற்றிலும் தடை செய்யவேண்டும்' - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கும் பரிசுச்சீட்டு விற்பனையை தமிழக அரசு முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், 

சேலத்தில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டு விற்பனை நடைபெற்று வருவது காட்சி ஊடகம் மூலம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகள் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது

சேலம், சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளும், ஒரு நம்பர் பரிசுச்சீட்டுகளும் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியும் இந்த சமூகத் தீமையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது

ஆன்லைன் சூதாட்டம் என்ற மிகப்பெரிய சமூகத் தீமைக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனைக் குடும்பங்கள் சீரழிகின்றனவோ, அதை விட அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளால் சீரழிந்து கொண்டிருக்கின்றன

தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டே பரிசுச்சீட்டுகள் தடை செய்யப்பட்டு விட்டன. அந்தத் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். பரிசுச்சீட்டுகளை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் ஏழைக் குடும்பங்கள் வீதிக்கு வருவதை தடுக்க வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: June 28, 2022
AltNews இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது! FIR கூட வழங்காமல் கைதுசெய்துவிட்டதாக மற்றொரு இணை நிறுவனர் தகவல்!

AltNews இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018-ல் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட ஒரு கருத்தின் காரணமாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ட்விட்டரில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அதுகுறித்த தகவல்களை ட்விட்டர்வாசிகளுக்குப் பகிர்பவர் பத்திரிகையாளர் முகமது ஜுபைர். இவர் AltNews செய்தி நிறுவனத்தின் இணை இயக்குநர் ஆவார். அண்மையில், தனியார் தொலைக்காட்சியில் நபிகள் நாயகம் குறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசிய காணொலியை வலைதளங்களில் பகிர்ந்தவர் இவரே. அது உலக அளவில் கவனம் பெற்று பல்வேறு எதிர்ப்பலைகளைக் கிளப்பியது.

இந்நிலையில், 2018-ல் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட ஒரு கருத்தின் காரணமாக நேற்றைய தினம் டெல்லி காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதிற்கு முன்னதாக வழக்கு ஒன்றின் விசாரணைக்காக திங்கள்கிழமை வருமாறு அவரை டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அழைத்திருந்ததாகவும், ஆனால் வேறொரு வழக்கில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறியதாகவும் AltNews நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் பிரதீக் சின்ஹா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "2020-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வரும்படி டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அவரை அழைத்தனர். அந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க நீதிமன்றத்தில் இருந்து முன்னதாகவே உத்தரவைப் பெற்றிருந்தார் முகமது ஜுபைர். ஆனால், விசாரணைக்கு ஆஜரான அவரை மாலை 6.45 மணியளவில் வேறொரு வழக்கில் அதன் முதல் தகவல் அறிக்கை நகலைக் கூட வழங்காமல் போலீஸார் கொண்டு சென்றனர். பல முறை கேட்டும் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைக் காண்பிக்கவில்லை. அவரைக் கொண்டு சென்ற வேனில் இருந்தவர்கள் தங்களுடைய பெயர் பேட்ஜை சீருடையில் அணிந்திருக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஜுபைர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295A (எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் சீற்றம் செய்யும் நோக்கில் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயலில் ஈடுபடுதல் மற்றும் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழக்கில் புகார்தாரர் யார், அதன் விவரம் என்ன என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.

முகமது ஜுபைரின் கைதிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். காங்கிரசார் பலரும், உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பரப்பும் பாஜக நிர்வாகிகளுக்கு மத்திய அரசு பாதுகாப்பும், உண்மையின் குரலாய் அவதூறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருபவர்கள் மீது வழக்குகளும் பதிந்துவருவதாக சாடியுள்ளனர்.

இந்நிலையில், ஜுபைர் அகமதின் கைது நடவடிக்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, "பாஜகவின் வெறுப்பு, மதவெறி மற்றும் பொய்களை அம்பலப்படுத்தும் ஒவ்வொரு நபருக்கும் அவர்களால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. உண்மையின் ஒரு குரலைக் கைது செய்வது இன்னும் ஆயிரம் பேரை தட்டி எழுப்பும். உண்மை எப்போதும் கொடுங்கோன்மையின் மீது வெற்றி பெறும்" என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தனது ட்விட்டர் பக்கத்தில், "முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் எந்த அறிவிப்பும் இல்லாமல் & சில அறியப்படாத FIR-இல் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி காவல்துறை முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலை முழக்கங்களைப் பற்றி எதுவும் செய்யவில்லை. ஆனால் வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் தவறான தகவல்களை எதிர்க்கும் "குற்றத்திற்கு" எதிராக விரைவாக செயல்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

பதிவு: June 28, 2022
தமிழக அரசின் உயர்கல்விக்கான ரூ.1000 உதவித்தொகை பெறும் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், முடியாது! விபரங்கள் இதோ!

அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்காக அரசுத்தரப்பிலிருந்து மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள் என்ற விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:

1. மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்.

2. தனியார்ப் பள்ளியில் Right to Education (RTE)யின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

3. அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

4. மாணவிகள் 8 (அ) 10 (அ) 12 வகுப்புகளில் படித்து பின்னர் முதன் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். [சான்றிதழ் (Certificate course), பட்டயம் (Diploma / ITI, D.TEd., courses), இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree) (B.A., B.Sc., B.Com., BBA., BCA. and all Arts & Science, Fine Arts Courses), தொழில்சார்ந்த படிப்பு (B.E., B.Tech, M.B.B.S., B.D.S., B.Sc.(Agri). B.V.Sc., B.Fsc., B.L, etc.) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing. Pharmacy, Medical Lab Technology, Physiotherapy etc.. CUITO D000.). தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

5. 2022-2023ஆம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும்,தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

6. 2021-2022 ஆம் ஆண்டில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இம்மாணவியர்கள் தங்களது இளநிலைப் படிப்பினை (under graduation) நிறைவு செய்துவிடுவார்கள்.

7. இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும், முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து தங்களுக்கு தேவையான தெளிவுரைகள்/கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

8. இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும், இளங்கலை/தொழிற்கல்வி/மருத்துவக் கல்வியில் 2-ஆம் ஆண்டு முதல் 5-ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

பதிவு: June 27, 2022
'அஸ்ஸாம் மக்களின் துயரைக் கண்டுகொள்ளாமல் எம்.எல்.ஏ.,க்களை கடத்திவந்து கும்மாளம் போடுகிறீர்களா?; இதுதான் பாஜகவின் உண்மை முகம்' - கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மக்களின் துயரத்தை நினைத்து கவலைப்படாமல், பாஜக மாநில அரசு, மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைய சகுனி ஆட்டம் ஆடிவருவதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

"அசாமில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறைந்தது 200 உயிர்கள் இதுவரை பலியாகியிருக்கின்றன. உண்மை பலி விபரம் இன்னும் அதிகமாக இருக்கும்.

வீடுகளை, இருப்பிடத்தை இழந்து சாலைகளில் கண்ணீரோடு தவிக்கும் மக்களின் துயரை வார்த்தைகளால் அடக்க முடியாது. இந்த நிலைமை பற்றியெல்லாம் ஒன்றிய அரசுக்கு கொஞ்சமும் கவலை கிடையாது. அசாம் பாஜக முதல்வருக்கும் எந்த பதட்டமும் இல்லை. மாறாக அவர் ரேடிசன் புளூ விடுதியை கண்காணித்துக்கொண்டுள்ளார்.

அங்கேதான், மராட்டிய எம்.எல்.ஏக்கள் கடத்தி வரப்பட்டு, ஐந்து நட்சத்திர விடுதியில் கும்மாளத்துடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூட்டணி அரசை கவிழ்த்து, மராட்டியத்தில் தான் ஆட்சியமைக்க வேண்டும் என்று பாஜக இந்த சகுனி ஆட்டத்தை நடத்தி வருகிறது.
 
மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டு, அதிகார மமதையில் ஆட்டம் போடுகிறார்கள். இதுதான் பாஜகவின் உண்மை முகம்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
 
பதிவு: June 25, 2022
'முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்களை உடனடியாக அரசு விடுவிக்க வேண்டும்; தவறினால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்' - சீமான்!

திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தவறினால் மாநிலம் தழுவிய மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில்,

"திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்களில் 30 பேர் மாத்திரை உட்கொண்டும், ஒருவர் தீக்குளித்தும் தற்கொலைக்கு முயன்றதுமான செய்திகள் பேரதிர்ச்சி தருகின்றன. ‘விதியே! விதியே! என் செய நினைத்திட்டாய் என் தமிழ்ச்சாதியை?’ எனும் பெரும்பாவலன் பாரதியின் கூற்றுக்கிணங்க, தாய்த்தமிழகத்திலேயே ஈழச்சொந்தங்களுக்கு நிகழ்ந்தேறும் இக்கொடுமைகள் கண்டு மனம்வெதும்புகிறேன்.

தங்களை ஏதிலிகளென இந்தியச்சட்டத்தின்படி பதிவுசெய்துள்ள ஈழச்சொந்தங்களையும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களெனக் கூறி, சிறப்பு முகாம் எனப்படும் சித்திரவதைக்கூடங்களில் அந்நிய நாட்டவர்களோடு அடைத்து வைத்துள்ள அநீதிக்கெதிராக, தங்களை விடுவிக்கக்கோரி 35 நாட்களுக்கும் மேலாகப் பட்டினிப்போராட்டம் செய்து அரசு மனமிறங்காத நிலையிலேயே, ஆற்றாமையும், விரக்தியும் தாளாது இத்தகையக் கொடிய முடிவை ஈழச்சொந்தங்கள் எடுத்துள்ளனர் என்பது ஏற்கவே முடியாதப் பெருந்துயரமாகும்.

இந்நாட்டுக்குத் துளியும் தொடர்பற்ற திபெத்தியர்கள் ஏதிலிகளாக அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அடிப்படை வசதிகளும், பொருளாதார வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்பெற்று, பெரும் மதிப்போடு நடத்தப்படும் வேளையில், இந்நாட்டில் வாழும் எட்டுக்கோடி தமிழ்ச்சொந்தங்களின் தொப்புள்கொடி உறவான ஈழச்சொந்தங்கள் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படுவதும், அடிப்படை மானுட உரிமைகளும், அத்தியாவசிய இருப்பு நடவடிக்கைகளும்கூட அளிக்கப்படாது மறுக்கப்படுவதும் தமிழினத்திற்கு இந்நாட்டு அரசுகள் செய்யும் பெருந்துரோகமாகும். தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழகத்திலேயே ஈழச்சொந்தங்கள் நாதியற்றவர்கள் போல நாளும் நடத்தப்படுவதும், அவர்களது உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படாது அவமதிக்கப்படுவதும் வெட்கித்தலைகுனிய வேண்டிய பெரும் அவமானமாகும்.

தேர்தலுக்கு முன்பு, ஈழச்சொந்தங்களுக்குக் குடியுரிமைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதி அளித்த மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தற்போது ஏதிலிகளாகக்கூட அவர்களை வாழவிடாது வஞ்சிப்பது எந்தவகையில் நியாயம்? இதுதான் சமூக நீதியா? ‘ஈழத்தமிழர் எங்கள் இரத்தம்’ என மேடையில் முழக்கமிட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இப்போது இரத்தம் வற்றிப்போகிற அளவுக்கு அவர்கள் பட்டினிக்கிடந்து, உடல்மெலிந்து கோரிக்கை வைத்தும் செவிமடுக்காதது ஏன்? அவர்களுக்கு வாக்கில்லை என்பதால், அவர்களது வறண்ட நாக்குகள் இடுகிற முழக்கங்கள் உங்கள் செவிப்பறைக்கு எட்டவில்லையா முதல்வரே? உயிரை முன்னிறுத்தி, போராட்டம்செய்தும் உங்கள் இதயக்கதவுகள் திறக்காதென்றால், நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? இல்லை! சிங்களர்களுக்கான ஆட்சியா? இதுதான் நீங்கள் விடியல் தரும் இலட்சணமா? வெட்கக்கேடு! பேரவலம்!

ஆகவே, இந்தியச்சட்டநெறிமுறைகளின்படி, தங்களை ஏதிலிகளாகப் பதிவுசெய்தும் சட்டவிரோதக் குடியேறியவர்களெனக்கூறி, திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், மாநிலம் தழுவிய மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போமெனப் பேரறிவிப்பு செய்கிறேன்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு: June 25, 2022
'மெட்ரிக் பள்ளிகளில் இடஒதுக்கீடு அளிக்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்' - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்திலுள்ள பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளில் 69% இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை என்றும், அப்பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. மாணவர் சேக்கையில் சமூகநீதியை நிலைநாட்ட பள்ளிக்கல்வித்துறை காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது!

தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அவை தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பது கட்டாயம் ஆகும். ஆனால், பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் 69% இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மை!

ஊரகப்பகுதிகளில் உள்ள சாதாரண மெட்ரிக் பள்ளிகள் 69% இட ஒதுக்கீட்டை பின்பற்றுகின்றன. அதிகக் கட்டணம் வசூலிக்கும் நகர்ப்புறங்களில் உள்ள புகழ் பெற்ற பள்ளிகள் தான் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை. அவை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்; ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை முடிவடைந்த பிறகு பள்ளி வாரியாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பதிவு: June 24, 2022
ஒபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு; வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டு அட்டூழியம்! கூட்டத்தில் பெரிதும் அவமதிக்கப்பட்ட ஒபிஎஸ்... அடுத்த நகர்வு என்ன?

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் தொண்டர்களால் அவமதிக்கப்பட்டு, அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்ப்ட்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றாலும், கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் ஒபிஎஸ் - இபிஎஸ் ஆகிய இரு தலைவர்களின் மேற்பார்வையிலேயே நடைபெற்றுவந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தபின் யார் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பூசல் எழுந்து, பின் எடப்பாடியார் அப்பொறுப்பை ஏற்றார். மேலும் பன்னீர்செல்வம் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியில் நீடித்தார்.

இந்நிலையில், அதிமுக சிறந்த எதிர்க்கட்சியாகத் திகழ ஒற்றைத் தலைமைதான் சரியான முடிவு என்ற பேச்சு அதிமுக நிர்வாகிகளிடையே ஆரம்பமான நிலையில், கடந்த 9 நாட்களாக தொடர் அமளிகளில் அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டுவருகின்றனர். ஒபிஎஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பதவியேற்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், இபிஎஸ் தான் பொதுச்செயலாளராக பதவியேற்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் குரலெழுப்பிவரும் நிலையில், ஒபிஎஸ் கூறிய சில தீர்மானங்களின் பேரில் அதிமுக பொதுக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒபிஎஸ் முதலிலேயே வந்துவிட்டார். ஆயினும் கூட்டத்திற்குள் நுழைந்த அவரை இபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியேறச்சொல்லியும், 'துரோகி' என்று முழக்கமிட்டும் முன்னேறவிடாமல் தடுத்தனர். பின் இபிஎஸ் மண்டபத்திற்குள் நுழையும்போது பலத்த கரகோஷத்துடன் தொண்டர்களால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின் மேடையில் இருவரும் அமர்ந்தபின் ஒவ்வொருவராக கட்சி நிர்வாகிகளின் நிலைப்பாடு குறித்தும், ஒற்றைத்தலைமை அதிமுகவிற்கு அவசியம் என்றும் பேசினர். அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மேடையில் பேசிய நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் பெயரைக் குறிப்பிட்டு அவரை வரவேற்றனர். ஆனால் யாரும் ஒபிஎஸ்-ஐ வரவேற்கவும் இல்லை, அவரிடம் முகம்கொடுத்து பேசவும் இல்லை.

தொடர்ந்து சி.வி.குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரித்துவிட்டதாகவும், கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும் பேசினர். இதனால் கூட்டத்தில் சச்சரவும், கூச்சல் குழப்பமும் நிலவியது. ஒரு கட்டத்திற்கு மேல் ஒபிஎஸ் மேடையில் அமராமல் பாதியிலேயே மேடையை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், ஒபிஎஸ் மேடையிலிருந்து வெளியேறும்போது அவர் மீது தண்ணீர் பாட்டில்கள் அதிருப்தி நிர்வாகிகளால் எரியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் வந்த வாகனத்தின் சக்கரங்களிலிருந்து காற்று பிடுங்கப்பட்டதும் அதிர்ச்சியைக் கிளப்பியது. பின் மாற்றுவாகன உதவியுடன் அவர் அங்கிருந்து கிளம்பினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், 'கட்சியை அழிவுப்பாதைக்கு அழைத்துச்செல்கின்றனர். சதிகாரர்கள்' என்று ஆவேசமாகப் பேசினார்.

பொதுக்குழுக்கூட்டம் பாதியிலேயே முடிந்து எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், அடுத்த பொதுக்குழுக்கூட்டம் ஜூலை 11 அன்று மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது ஒபிஎஸ்-ன் கையெழுத்து இல்லாமல் நடைபெறாது என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.

ஜூலை 11-ல் நடைபெறும் பொதுக்குழுக்கூட்டத்தில் இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆயினும் கூட்டம் நடைபெறுமா?, அதில் ஒபிஎஸ் கலந்துகொள்வாரா?, என்னென்ன முடிவுகள் அக்கூட்டத்தில் ஏடுக்கப்படும்? என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆயினும் ஒபிஎஸ், இபிஎஸ் தரப்பு நிர்வாகிகளால் பெரிதளவில் அவமதிக்கப்பட்டது தற்சமயம் பேசுபொருளாகி சர்ச்சையைக் கிளப்பிவருகிறது. 

பதிவு: June 23, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்