மாணவி சத்யா கொலை - மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட தந்தை, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மாரடைப்பால் அவரது தந்தை உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்துவருபவர் சதீஷ். அதே பகுதியில் வசித்துவருபவர் மாணவி சத்யா. இவர்கள் இருவரும் பள்ளிக்காலத்திலிருந்தே காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் சத்யாவிற்கு அவரது வீட்டில் வேறு ஒருவருடம் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் தான், கல்லூரிக்குச் செல்ல வழக்கம் போல் பரங்கிமலை இரயில் நிலையத்திற்கு மாணவி சத்யா வந்துள்ளார். அங்கு வந்த சதீஷ் மற்றும் சத்யா இடையே காதல், நிச்சயிக்கப்பட்ட திருமணம் குறித்த வாக்குவாதம் முற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை நோக்கி வந்துகொண்டிருந்த மின்சார இரயில் முன்பாக சத்யாவைப் பிடித்துத் தள்ளியுள்ளார்.

விழுந்த சத்யா மீது மின்சார இரயில் ஏறியதில் தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார். இதனைக் கண்ட பயணிகள் அலறியடித்தவாறு அங்குமிங்கும் சிதறவே யாருக்கும் சிக்காமல் கொலை செய்த சதீஷ் அங்கிருந்து கணநேரத்தில் தப்பித்து ஓடியுள்ளார்.

இதையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு வந்து தண்டவாளங்கள் மீது கிடந்த சத்யாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தப்பியோடிய சதீஷைப் பிடிக்க 7 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையும் நடைபெற்றுவந்தது. 

இந்நிலையில் துரைப்பாக்கம் அருகே நேற்று நள்ளிரவில் சதீஷ் காவலர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். மேலும், மகள் இறந்த தகவலறிந்த சத்யாவின் தந்தை அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்குப்பின், புதிய திருப்பமாக, அவர் மகள் இறந்த துக்கத்தால் மதுவில் விஷம் கலந்து அருந்தியதும், அதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவலர்கள் தொடர்ந்து இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

2016-ல் இதேபோன்ற காதல் விவகாரத்தால் சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் ராம்குமார் என்ற இளைஞரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சமயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சத்யா கொலை வரை தொடரும் இதுபோன்ற நிகழ்வுகள் சமூகத்தில் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது. 

பதிவு: October 14, 2022
`நேற்றிரவு இரட்டைக் கொலை செய்தனர்; இன்று என்கவுன்ட்டர்!'- செங்கல்பட்டில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

செங்கல்பட்டில் நேற்றிரவு இரண்டு பேரை கொலை வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகளை காவல்துறையினர் இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். காவல்துறையினர் நடத்திய தற்காப்பு நடவடிக்கையில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு கே.கே. தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (எ) அப்பு (32), பிரபல ரவுடியான இவர் மீது முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் திமுகவை சேர்ந்த ரவிபிரகாஷ் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று மாலை கார்த்திக், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் பைக்கை நிறுத்தும் நேரத்தில், மின்னல் வேகத்தில் எதிரே பைக்கில் வந்த 3 பேர், மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து அவர் மீது வீசினர். இதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவர்கள், வீச்சரிவாளை எடுத்து கார்த்திக்கை சரமாரியாக வெட்டினர். இதில், அவர் தலை சிதறி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

பின்னர் மர்ம நபர்கள், செங்கல்பட்டு மேட்டு தெருவில் உள்ள பிரபல ரவுடி மகேஷ் (22) வீட்டுக்கு சென்றனர். அங்கு, அவர் தனி அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றனர். அடுத்தடுத்து பிரபல ரவுடிகள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு, பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பம் தொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டில் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய தினேஷ், மொய்தீன் ஆகியோர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாமண்டூர் அருகே 2 பேரை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது தினேஷ், மொய்தீன் ஆகியோர் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது தற்காப்பிற்காக காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தினேஷ், மொய்தீன் ஆகியோர் பலியாகி உள்ளனர். அதே சமயம் ரவுடிகள் வெடிகுண்டு வீசி தாக்கியதில் 2 காவலர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் விசாரணை நடத்தி வருகிறார். என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இருவரின் உடல்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பதிவு: January 07, 2022
மோசடி வழக்கில் 20 நாட்கள் தலைமறைவு வாழ்க்கை!- கர்நாடகாவில் சிக்கினார் ராஜேந்திர பாலாஜி

ரூ.3 கோடி பண மோசடி வழக்கில் முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து. ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த 17ம் தேதி முதல் தலைமறைவானார். 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.

கோவை, மதுரை, தென்காசி, பெங்களூரூ மற்றும் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று அவரை தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டு இருப்பதாக மாவட்ட போலீஸ் நிர்வாகம் தெரிவித்தது. மேலும் சைபர் கிரைம் போலீசார் மூலம் ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டது.

இந்த நிலையில் சுமார் 20 நாட்களாக 8 தனிப்படை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கர்நாடகாவில் பதுங்கி இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்தது. போலீஸ் வாகனத்தை கண்டு காரில் தப்பியோட முயன்ற ராஜேந்திர பாலாஜி போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை ஹசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு தமிழ்நாடு அழைத்து வர தனிப்படை நடவடிக்கை எடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இவரது முன்ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

பதிவு: January 05, 2022
திருப்பத்தூரில் ராஜேந்திர பாலாஜி பதுங்கல்?- அதிமுகவினரிடம் கிடுக்கிபிடி விசாரணை... தேடுதல் வேட்டையில் போலீஸ்

3 கோடி ரூபாய் மோசடி புகாரில் தலைமறைவாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூரில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய அதிமுக நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகிறது போலீஸ்.

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி மற்றும் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து கடந்த 17ம் தேதி அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னை, திருச்சி, கொடைக்கானல், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் தேடப்பட்டு வருகிறது. வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸூம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் தொடர்புடையதாக பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகியும், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் நேர்முக உதவியாளராக இருந்தவருமான ஜோலார்பேட்டையை சேர்ந்த ஏழுமலை மற்றும் நாட்றம்பள்ளியை சேர்ந்த விக்னேஸ்வரனை சிவகாசி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இருவரும் ராஜேந்திர பாலாஜி மூலம் அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் அழைத்து சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே 10 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்.பி.பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பதிவு: December 28, 2021
பெண்கள் உள்பட 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!- தெலுங்கானா எல்லையில் போலீஸ் அதிரடி

தெலுங்கானா மாநில எல்லையில் நக்சலைட்டுகள் மற்றும் காவல்துறை இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பெண்கள் உள்ளிட்ட 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநில எல்லையில், அடர்ந்த வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து தெலுங்கானா காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல்துறையினரை தாக்குவதற்காக அவர்கள் கையெறி குண்டுகளை தயாரித்து வருவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தெலுங்கானாவில் நக்சல் தடுப்பு காவல்துறையினரும், சத்தீஸ்கர் மாநில காவல்துறையினரும் துணை ராணுவ படையினருடன் அப்பகுதியில் இன்று காலை கூட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மறைவிடம் ஒன்றில் இருந்து காவல்துறையினர் மீது நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் அரை மணி நேரம் நீடித்த சண்டையில் 6 நக்சல் அமைப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 4 பேர் பெண்கள் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நக்சலைட்டுகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

பதிவு: December 27, 2021
`என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை!'- நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்த கூடலூர் மாணவி

"என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை" என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த கூடலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரை சேர்ந்த ஜெயா (18), கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தார். இந்த நிலையில் டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்த அவர் ‘நீட்’ தேர்வும் எழுதினார்.

கடந்த மாதம் தேர்வு முடிவு வெளியாகியது. இதில் மாணவி ஜெயா 69 மதிப்பெண் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மன வருத்தத்துடன் அவர் இருந்தார். இதையறிந்த பெற்றோர் அவரை திருப்பூரில் உள்ள அக்கா வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சில வாரங்கள் இருந்த ஜெயா, தனது பெற்றோரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு பாரதி நகருக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 17ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அத்துடன் மாணவி ஜெயா எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த கடிதத்தில், ‘நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன். அம்மா... என்னை மீண்டும் மன்னித்துவிடு’ என்று கூறியுள்ளார்.

பதிவு: December 24, 2021
`சூரப்பா மீதான முறைகேடு புகாரில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்!'- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகாரில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டுமென தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா இருந்த போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய அதிமுக அரசு அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. கலையரசன் விசாரணையை எதிர்த்து சூரப்பா தொடர்ந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் மேல்நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது.

கலையரசன் ஆணைய அறிக்கையும் கடந்த விசாரணையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு மீண்டும் நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநரே சூரப்பா விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதற்கான ஆணையத்தின் அறிக்கையை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாகவும் கூறினார். இதையடுத்து விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

பதிவு: December 23, 2021
`ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினார்!'- மாங்காடு மாணவி தற்கொலை வழக்கில் சிக்கிய கல்லூரி மாணவர்

சென்னை மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்ஸாே உள்பட 3 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு மாணவர் சிறையில் அடைக்ககப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த சூழலில் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி, திடீரென தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.

அதில் மாணவி எழுதிய உருக்கமான 3 கடிதங்கள் போலீசாரிடம் சிக்கின. அதில் 2 கடிதங்களில் அவர், “ஆசிரியர்கள், உறவினர்கள் யாரையும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் பாதுகாப்பானது, கல்லறையும், தாயின் கருவறையும்தான். பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை” என உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மற்றொரு கடிதத்தை மாணவி எழுதி விட்டு, பின்னர் அதை கிழித்து போட்டு உள்ளார். அதில், முன்னாள் ஆசிரியை ஒருவரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு அவரே காரணம் எனவும் அவரது பெயரை குறிப்பிடாமல் எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, மாணவியின் செல்போன் மற்றும் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது போக்ஸோ, பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் ஆபாசமாக குருஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பதிவு: December 20, 2021
யூடியூப்பை பார்த்து பிரசவம் பார்த்த கணவன் ... குழந்தை பலி... மனைவி சிரியஸ்!- அரக்கோணத்தில் நடந்த கொடுமை

அரக்கோணம் அருகே யூடியூப்பை பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்த நிலையில் அதிக ரத்தப்போக்கு காரணமாக குழந்தை இறந்தது. பிரசவமான பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பணப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள நெடும்புலி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் லோகநாதனின் மனைவியான கோமதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிரசவ வலியின் போது அவரது அக்கா உதவியுடன் யூடியூப்பை பார்த்து பிரசவம் பார்த்துள்ளார். இதனால் அதிக அளவில் அவரது மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தையை உடனடியாக நெமிலி அருகேயுள்ள புண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரண்டு பேரையும் அழைத்து வந்து அனுமதி செய்துள்ளார்.

இங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக குழந்தை மற்றும் அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சையில் ஈடுபட்டனர். இருந்தாலும் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் பிறந்த ஆண் குழந்தையானது இறந்துள்ளது. மேலும் கோமதி என்பவர் அதிக அளவு ரத்தப்போக்கின் காரணமாக தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் புண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் தற்போது நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததின் காரணமாக குழந்தை இறந்ததாக கூறி மருத்துவர் அளித்த புகாரின் பேரில் தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: December 20, 2021
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்பட 14 இடங்களில் மீண்டும் ரெய்டு!

ஊழல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. கடந்த 15ம் தங்கமணி மற்றும் அவர்களது உறவினர்கள் சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.2.16 கோடி பணம் , 1.13 கிலோ தங்கம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

மேலும் ஐந்தாண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 4.85 கோடி சொத்து குவித்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தங்கமணி மட்டுமல்லாது அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீதும் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில் விசாரணையின் தொடர்ச்சியாக மீண்டும் இன்று காலை 6.30 மணியளவில் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்கள், ஈரோட்டில் 3 இடங்கள், சேலத்தில் ஓரிடத்தில் என சோதனை நடைபெற்று வருகிறது. நாமக்கல்லில் பிஎஸ்கே கட்டுமான நிறுவனம், அதன் உரிமையாளர் அசோக் வீடு, எருமப்பட்டியில் உள்ள சரண்யா ஸ்பின்னிங் மில், அழகு நகரில் உள்ள கோழிப்பண்ணை அதிபர் மோகன் வீடு, ஈரோட்டில் சாந்தான்காடு பகுதியில் தங்கமணியின் நண்பரான குமார் என்பவர் வீடு, ஒண்டிக்காரன்பாளையத்தில் செந்தில் நாதன், செங்கோடம்பள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு, பள்ளிபாளையத்தில் உள்ள தங்கமணியின் ஆடிட்டர் செந்தில் குமார் ஆகிய வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பதிவு: December 20, 2021
மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி எஸ்கேப்!- தேடும் 6 தனிப்படைகள்

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 6 தனிப்படைகள் தேடி வருகின்றனர்.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் உள்ளது. மேலும், விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் அடிப்படையில் விருதுநகரில் வழக்கு பதியப்பட்டது. இதில் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

மோசடி வழக்கில் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் வந்ததும், உடனடியாக ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அங்கிருந்து காரில் வேகமாகப் புறப்பட்டுச் சென்றார். இதனால், அதிமுகவினர் பரபரப்பு அடைந்தனர்.

மோசடி வழக்கில் தான் கைதுசெய்யப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதாக கூறப்படுகிறது. மேலும், 6 தனிப்படைகள் அமைத்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியைத் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

பதிவு: December 18, 2021
பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு!- நெல்லையில் நடந்த சோகம்

நெல்லையில் தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 4 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை சந்திப்பில் உள்ள சாப்ட்டர் தனியார் பள்ளியில் காலை 11 மணியளவில் இடைவேளை விடப்பட்டுள்ளது. அப்போது கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள 3 மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். காவல்துறை, வருவாய் துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்தில் இடிந்து விழுந்தவுடன் ஆங்காங்கே அனைவரும் சிதறி ஓடியுள்ளனர். அனைத்து மாணவர்களையும் வகுப்பறைக்கு வர சொல்லி யார் இல்லை என்பது குறித்து கணக்கெடுக்க கூடிய பணியை பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைவேளை விடப்பட்டதாக சொல்லப்படுகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். தற்போது 8 மற்றும் 9ஆம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவித்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்த மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, உயிரிழந்த மாணவர்களின் விவரம் தெரியவந்துள்ளது. 6ம் வகுப்பு சி பிரிவில் படித்த சுதீஷ், 8ம் வகுப்பு ஏ பிரிவில் படித்த விஸ்வரஞ்சன், 9ம் வகுப்பு பி பிரிவில் படித்த அன்பழகன் ஆகிய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த மாணவர்கள் சஞ்சய், இசக்கி பிரகாஷ், சேக் அபுபக்கர், அப்துல்லாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பள்ளியில் நடந்த விபத்து குறித்து அறிக்கை அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பதிவு: December 17, 2021
3 பவுன் நகைக்காக கொல்லப்பட்ட கோவை சிறுமி!- சிக்கிய தாயின் ஆண் நண்பர்

கோவையில் சாக்குமூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்டு சிறுமி சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் சிறுமியின் தாயின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 பவுன் நகைக்காக கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை, சரவணம்பட்டி பகுதியில் சாக்குமூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு படித்த மாணவி நேற்று சடலமாக மீட்கப்பட்டார். அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கட்டிட தொழிலில் மேஸ்திரியாக இருந்து வரும் சரவணன், வேலைக்கு செல்லும் போது அந்த மாணவியின் குடும்ப நண்பராக இருந்து வந்துள்ளார். பிறகு 3 சவரன் நகைக்காக கொலை செய்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது முத்துக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

பதிவு: December 17, 2021
கடையின் பின்பக்க சுவரில் துளை... வைரம், தங்க நகைகள் அபேஸ்!- வேலூர் ஜோஸ் ஆலுக்காஸை பதறவைத்த கொள்ளையர்கள்

வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் சுவரை துளையிட்டு 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் காட்பாடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் இன்று காலை கடையை திறந்த போது தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசில் புகார் அளித்ததை அடுத்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் டி.ஐ.ஜி தலைமையில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது 30 கிலோ தங்கம் கொள்ளை போனதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் வைர நகைகள் எவ்வளவு கொள்ளை போயுள்ளது என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக தினமும் விற்பனையை முடித்த பிறகு லாக்கரில் பூட்டிவிட்டு செல்வது தான் வழக்கம். ஆனால் நேற்று இரவு அவ்வாறு செய்யாமல் காட்சிப்படுத்தும் இடத்திலேயே வைத்திருந்ததும் சந்தேகத்தை எழுப்பி இருப்பதால் நகை கடை ஊழியர்களிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: December 15, 2021
கிரிப்டோ கரன்சியில் முதலீடு... ரூ.4.85 கோடி சொத்து குவிப்பு... அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, ஆபீஸில் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நாமக்கல் ஈரோடு உட்பட 69 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்வாரியத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பல முறைகேடான முறையில் சொத்து சேர்த்ததாகவும் இவர் மீது புகார்கள் எழுந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், அவரது வீடு, அலுவலகம், மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்கள் என 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6.30 மணி முதல் சோதனை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக சென்னை, நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒலிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 150 மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர், அவரது உறவினர்கள், அவரது பினாமி கள் வீடு என மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனையானது நடைபெறுகிறது.

இந்த சோதனையின் முடிவிலேயே எவ்வளவு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர், என்னென்ன ஆவணங்கள் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரியவரும். இந்த சோதனையானது நாளை வரை நீடிக்க வாய்ப்பிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணின் அவரது மனைவி சாந்தி, மற்றும் மகன் தரணீதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2016 முதல் 2020 மார்ச் வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி அளவிற்கு சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடகத்தில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் 2 இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும், சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட ஏராளாமான சொத்துகளை தங்கமணி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-2020 மார்ச் வரை வருமானத்திற்கு அதிகமாக தங்கமணி ரூ.4.85 கோடி சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

லஞ்சஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளாகும் 5- வது முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆவார். ஏற்கெனவே வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

பதிவு: December 15, 2021
குன்னூர் மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!‍- 7 பேர் பலி; முப்படை தளபதியின் நிலை என்ன?

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்திற்கு சென்ற போது, வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. 24 பேர் வரை பயணம் செய்யக்கூடிய விபத்துக்குள்ளான இந்த Mi - 17 V5 வகை ஹெலிகாப்டரில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் எல்.எஸ். லிட்டர், ஹர்ஜிந்தர் சிங் உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதால் சுமார் ஒரு மணி நேரமாக தீப்பிடித்து எரிகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவையில் இருந்து டாக்டர்கள் குழு குன்னூருக்கு விரைந்துள்ளது. இந்த நிலையில் விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், இந்திய விமானப்படையின் Mi - 17 V5 வகை ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்தார் என்றும் முப்படைகளின் தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 4 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

பதிவு: December 08, 2021
`மாணவர் மர்ம மரணத்தில் வெளிப்படையான விசாரணை வேண்டும்!'- கமல்ஹாசன்
பதிவு: December 08, 2021
கேரள காதலன் மீது ஆசிட் வீசிய காஞ்சிபுரம் காதலி!‍- `லிவிங் டுகெதர்' வாழ்க்கையில் நடந்த விபரீதம்

கோவையில் காதலன் மீது காதலி ஆசிட் ஊற்றியதோடு கத்தியால் குத்தியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். காதலியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்வர் ஜெயந்தி. இவர்கள் இருவரும் கோவையில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகின்றனர். லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அப்பிரச்னையில் காதலன் ராகேஷ் மீது, ஹேண்ட் பேக்கில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை வீசியுள்ளார் காதலி ஜெயந்தி. மேலும் ராகேஷை கத்தியால் குத்திவிட்டு தானும் தூக்க மாத்திரை சாப்பிட்டு ஜெயந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


தகவல் அறிந்து காவலர்கள் அங்கு சென்று விசாரித்து வருகின்றனர். தற்போது இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் ராகேஷ் மற்றும் ஜெயந்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலன் மீது காதலி ஆசிட் வீசியதோடு, அவரை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: December 04, 2021
`பள்ளிலேயே 3 மாணவர்கள் சுட்டுக்கொலை!'- அமெரிக்காவை பதறவைத்த 15 வயது மாணவன்

அமெரிக்காவில் பள்ளியிலேயே 3 மாணவர்களை மாணவனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்டி 15 வயது மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகர் அருகே உயர்நிலை பள்ளி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் ஐந்து நிமிட இடைவெளியில் 20 முறை அவர் சுட்டத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்கள் 16 வயது ஆண், 14 வயது பெண் மற்றும் 17 வயது பெண் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பள்ளியின் ஆசிரியர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய ஆக்ஸ்போர்ட் உயர்நிலை பள்ளியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். காவல்துறையினர் பிடித்தபோது அந்த மாணவன் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாணவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிசூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனமும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.

பதிவு: December 01, 2021
கம்பீரை மிரட்டும் ஐஎஸ் தீவிரவாதிகள்!- வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரை அடுத்து கவுதம் கம்பீர் எம்.பி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அரசியலில் களமிறங்கினார். பாஜக சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர், கிழக்கு டெல்லி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்போது டிவி நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் தொடர்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.


இந்நிலையில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ’ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக டெல்லி போலீசில் நேற்றிரவு புகார் செய்துள்ளார். கவுதம் கம்பீர் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில், கம்பீருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து ஐஎஸ் காஷ்மீர் என்ற பெயரில் இமெயில் வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை மத்திய டெல்லி இணை போலீஸ் கண்காணிப்பாளர் ஸ்வேதா சவுகான் தெரிவித்தார்.

பதிவு: November 24, 2021
`பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் நானாகத்தான் இருக்கணும்; காரணமாக இருந்தவரை சொல்ல பயமா இருக்கு!'- தற்கொலை செய்த மாணவி அதிர்ச்சி கடிதம்

பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும் என்றும் தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதை கூறவே பயமாக உள்ளதாகவும் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவி கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவரும் மாணவி உமா (பெயர் மாற்றம்), நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பியுள்ளார். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில், தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், மாணவி எழுதியுள்ள கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள மாணவி, தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதை கூறவே பயமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த பூமியில் வாழணும் ஆசபட்டேன். ஆனா இப்போ பாதியிலேயே போறேன். இன்னொறு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைத்தால் நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணனும்னு ஆசை. ஆனா முடியாதுல்ல“ என்று உருக்கமாக கூறியுள்ள உமா, தனது தாய், சித்தப்பா, மாமா ஆகியோரை மிகவும் பிடிக்கும் என்றும், யாருக்கிட்டயும் சொல்லாம போகிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். இனி எந்த ஒரு பெண்ணும் தன்னை போன்று சாகக் கூடாது என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: November 20, 2021
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.26 லட்சத்தை இழந்த நடிகை சினேகா!- தனியார் நிறுவனம் மீது புகார்

அதிக வட்டி தருவதாக நம்ப வைத்து 26 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக தனியார் சிமெண்ட் நிறுவன உரிமையாளர்கள் மீது நடிகை சினேகா புகார் அளித்துள்ளார்.

பிரபல தமிழ் நடிகையான சினேகா, சென்னை அடுத்த கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தியா, சிவராஜ், கவுரி ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக நம்பிக்கை தரும் விதத்தில் பேசினர். 26 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர்.

இதனை நம்பி 25 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலமாகவும், 1 லட்சம் ரூபாயை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து வழங்கினேன். முதலீடு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு வட்டி தொகை கேட்ட போது அதனை தர மறுத்து தன்னை மிரட்டினர்" என்று கூறியுள்ளார். இந்த பணமோசடி புகார் குறித்து கானாத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: November 18, 2021
காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ!- கும்பல் அட்டகாசம்

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் எழுதிய புத்தகம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய சல்மான் குர்ஷித், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சல்மான் குர்ஷித்தின் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாடில் உள்ள சல்மான் குர்ஷித்தின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. வீடு தீ பற்றி எரியும் படத்தை சல்மான் குர்ஷித் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ராகேஷ் கபில் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சல்மான் குர்ஷித் வீடு மீதான தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பதிவு: November 16, 2021
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.70 லட்சம் மோசடி!- அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா தலைமறைவு

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா. இவர், அமைச்சராக இருந்தபோது சத்துணவு திட்டத்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று கொண்டு மோசடி செய்து விட்டதாக அவரது உறவினர் குணசீலன் பரபரப்பு புகார் அளித்தார். இதன்பேரில் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் ரூ.70 லட்சம் வரை பலரிடம் சரோஜா பணம் வாங்கி கொண்டு மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தவுடன், சரோஜா மற்றும் அவரது கணவரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனு 2 முறை விசாரணைக்கு வந்தபோது, சரோஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு மீதான விசாரணைக்கு வாய்தா கேட்டார்.

இதனால் 2 முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வரும் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில் சரோஜா அவரது கணவர் லோகரஞ்சன் இருவரும் தலைமறைவாகி விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து உறவினர் குணசீலன் கூறுகையில், "கடந்த அதிமுக ஆட்சியில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சராக இருந்த சரோஜா சத்துணவு துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறினார். இதனால் நானும் எனது மனைவியும் சுமார் ரூ.1 கோடி வரை அவருக்கு பணம் பெற்று கொடுத்தோம். ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை.

இதுபற்றி ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அங்கு வழக்கு பதிவு செய்யாத நிலையில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தேன். இந்த புகாரையடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்த போது முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது தரப்பிலிருந்து யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர்" என்றார்.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், ‘‘சரோஜா மற்றும் அவரது கணவர் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் வீட்டுக்கு விசாரணைக்கு சென்றபோது, வீட்டில் முன்னாள் அமைச்சர் இல்லை. இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. முன்ஜாமீன் மனு மீது நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்கு பிறகு போலீசாரின் நடவடிக்கை தொடரும்’’ என்றனர்.

கைது நடவடிக்கைக்கு பயந்தே முன்னாள் அமைச்சர் சரோஜா குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

பதிவு: November 13, 2021
28 நாள் சிறை வாசத்துக்கு பிறகு வெளியே வந்தார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான்!

மும்பையில் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கைதான ஆர்யன் கான் 28 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்து, தற்போது ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் சிறையிருந்து தற்போது வெளியே வந்துள்ளார்.

மும்பையில் சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி எனப்படும் போதை விருந்து நடைபெறுவதாக தகவலறிந்த மும்பை போதை பொருள் தடுப்பு இயக்குநர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் அதே கப்பலில் பயணிகள் போல் சென்றுள்ளனர். கப்பல் நடுக்கடலை நெருங்கியபோது பார்ட்டி தொடங்கியுள்ளது. அதில் பயணித்தவர்கள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதையடுத்து போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்டவர்களில் பல பேர் மும்பை திரையுலகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அதில், குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கானும் ஒருவர். பின்னர் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் ஆர்யன் கானை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த 28 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்த ஆர்யன் கானுக்கு நேற்று முன்தினம் ஜாமீன் கிடைத்த நிலையில் ஆர்யன் கான் தற்போது சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். தனது பாதுகாவலர்களுடன் மகனை ஷாருக்கான் அழைத்துச் சென்றார்.

பதிவு: October 30, 2021
மாடியில் தலைகீழாக மாணவனை தொடங்கவிட்ட பள்ளி முதல்வர்!- உ.பி.யில் அதிர்ச்சி

சாப்பிடும் போது குறும்புத்தனம் செய்ததற்காக தனியார் பள்ளி முதல்வர் ஒருவர், இரண்டாம் வகுப்பு மாணவனை பள்ளிக் கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கவிட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இச்சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம், மிர்ஸாபூர் மாவட்டம், அஹ்ரௌரா நகரில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்தது. இதுகுறித்து அறிய நேர்ந்த மாவட்டக் குற்றவியல் நீதிபதி, உடனடியாக அதுபற்றி விசாரிக்கும்படி அடிப்படைக் கல்வி அதிகாரிக்கு ஆணை பிறப்பித்தார். அதனுடன், சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் மீது புகார் பதிவுசெய்யவும் அவர் உத்தரவிட்டார்.

சோனு யாதவ் என்ற அந்த மாணவன் சாப்பிடும் போது குறும்புத்தனம் செய்ததால், பள்ளி முதல்வர் மனோஜ் விஸ்வகர்மா கோபமடைந்தார். இதனையடுத்து, ஆத்திரத்தில் சோனுவின் ஒரு காலைப் பிடித்து, இரண்டாம் தளத்தில் இருந்து அவனைத் தலைகீழாகப் பிடித்துத் தொங்கவிட்டார். மற்ற மாணவர்களின் முன்னிலையில் அவனுக்குப் பாடம் கற்பிப்பதற்காக அவர் அப்படிச் செய்ததாகக் கூறப்படுகிறது.

அச்சத்தில் அலறி, இனிமேல் செய்யமாட்டேன் என்று சோனு மன்னிப்பு கேட்டபிறகே, அவனை மேலே தூக்கினார் விஸ்வகர்மா. இச்சம்பவம் தொடர்பான படம் சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: October 29, 2021
ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர்!- கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனின் வீடு உள்பட 27 இடங்களில் ரெய்டு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக இருக்கும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் அதிமுகவின் ஜெ.பேரவை புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார் இளங்கோவன். இந்த நிலையில், சேலத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் உள்ள 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் இளங்கோவன். திருச்சியில் முசிறியில் இளங்கோவனுக்கு சொந்தமான பாலிடெக்னிக், கல்லூரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சேலத்தில் சேலம் மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் குபேந்திரன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் துணை தலைவராகவும் குபேந்திரன் உள்ளார்.

சேலம் இளங்கோவன், அவரது மகன் பிரவீன் குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 -2020 வரை வருமானத்துக்கு பொருந்தாத வகையில், ரூ.3.78 கோடி சொத்துகளை குவித்ததாக இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு: October 22, 2021
படகை நொறுக்கியது கப்பல்... மீனவர் உயிரிழப்பு... 2 பேர் சிறைபிடிப்பு..!- இலங்கை கடற்படை அட்டூழியம்

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு நொறுங்கியது. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். 2 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் வளத்தை அழைப்பதாகக் கூறி இலங்கை வடக்குப் பகுதியில் மீனவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று இலங்கையின் முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரை கடலில் போராட்டங்கள் நடத்திய நிலையில் எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை பிடிக்க இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டனத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற சில படகுகள் இலங்கை காரைநகர் கோவலம் கடற்பகுதிக்குள் வந்ததாக கூறி அந்த படகுகளை விரட்டி சென்ற போது இலங்கை கடற்படையின் கப்பல் தமிழக மீனவரின் விசைப்படகு மீது மோதியது. இதில் மீனவர்களின் படகு நொறுங்கி கடலில் மூழ்கியது. அப்போது படகில் இருந்த 3 மீனவர்களில் 2 மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட நிலையில் மீனவர் ராஜ்கிரண் கடலில் மாயமானார். அவரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மாயமான மீனவர் ராஜ்கிரண் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

இலங்கை கடற்படை கப்பல் தமிழக மீனவரின் படகு மீது மோதி மீனவர் உயிரிழந்த செய்தி மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: October 19, 2021
`பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற கணவருக்கு 4 ஆயுள் தண்டனை!'- கேரளா நீதிமன்றம் அதிரடி

கேரள மாநிலம் கொல்லம் அருகே பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கில் குற்றவாளியான கணவர் சூரஜுக்கு கொல்லம் மாவட்ட நீதிமன்றம் 4 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் அருகே அஞ்சல் பகுதியை சேந்தவர் விஜயசேனன். அவரது மகள் உத்ரா (25). இவருக்கும் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்த சூரஜ் (27) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த வருடம் மே 7ம் தேதி உத்ராவை பாம்பு கடித்ததாக கூறி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் உத்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறி அவரது தந்தை விஜயசேனன் அப்போதைய கொல்லம் எஸ்பி ஹரிசங்கரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் சூரஜ் தான் சொத்துகாக உத்ராவை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சூரஜ் மீது கொலை செய்தல், துன்புறுத்துதல், வனவிலங்கு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், சொத்துகாக உத்ராவை கொலை செய்ததாகவும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் இருந்து பாம்பை வாங்கி வீட்டில் வைத்திருந்ததாகவும் கூறினார். இதையடுத்து சுரேசையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை கொல்லம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ் தீர்ப்பு அளித்தார். அதில், உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் கணவர் சூரஜ்க்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் குற்றவாளியாவார்,' எனத் தீர்ப்பளித்தார். இந்த நிலையில் இன்று குற்றவாளி சூரஜுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மனோஜ் தீர்ப்பளித்துள்ளார். 4 ஆயுள் தண்டனையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, சூரஜுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தார்.

பதிவு: October 13, 2021
ஸ்ரீபெரும்புதூர் பெண்ணிடம் நகை பறிப்பு; ஜார்க்கண்ட் கொள்ளையன் என்கவுன்ட்டர்!- போலீஸை துப்பாக்கியால் சுட்டதால் அதிரடி

ஸ்ரீபெரும்புதூர் அருகே காவல்துறையினரை துப்பாக்கியால் சுட்ட ஜார்க்கண்ட் கொள்ளையன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வயதான பெண்மணியிடம் 6 சவரன் நகையை வழிப்பறி செய்து அங்கிருந்து 2 வடமாநில இளைஞர்கள் தப்பித்து செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடிக்க முயன்ற போது கைத்துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். தப்பியோடிய கொள்ளையர்கள் பென்னலூர் ஏரி பகுதிக்கு சென்று பதுங்கி கொண்டனர். 10 குழுவினர் அந்த ஏரி பகுதியில் முகாமிட்டு கொள்ளையர்கள் தேடி வந்தனர். ட்ரோன் கேமரா உதவியுடன் கொள்ளையர்களை பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்த காரணத்தினால் துப்பாக்கியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று இரவு முழுவதும் தேடி வந்தனர்.

இந்நிலையில் அந்த ஏரி பகுதியில் பதுங்கி இருந்த ஒரு கொள்ளையனை பிடிக்க முயற்சிக்கும் போது அவர் தனது பாதுகாப்பிற்காக போலீசார் நோக்கி துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளார். அப்போது தங்களது பாதுகாப்பிற்காக சம்மந்தப்பட்ட கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். தற்போது இறந்த கொள்ளையனின் உடலை ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையனின் பெயர் முர்தஷா என்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவன் என்றும் தெரியவந்துள்ளது. தப்பியோடிய மற்றொரு கொள்ளையன் நைம் அக்தரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து துப்பாக்கி, 3 கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கொள்ளையர்களுக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது? இறந்த கொள்ளையனின் விவரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: October 11, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்