வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, குக் வித் கோமாளி சிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலான 'அப்பத்தா' அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் டிசம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: November 26, 2022
'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' பட 'அப்பத்தா' பாடல் இன்று வெளியாகிறது!

வடிவேலு நடித்துள்ள 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் முதல் பாடலான 'அப்பத்தா' பாடல் இன்று வெளியாகிறது. 

நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனர் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படம் குறித்த அப்டேட்டுகள் விரைவில் ஒவ்வொன்றாக வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. 'அப்பத்தா' எனத் தொடங்கும் இப்பாடலுக்கு நடன இயக்குநர் பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இப்பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது. 

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து வடிவேலு தற்சமயம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாமன்னன்', பி.வாசு இயக்கும் 'சந்திரமுகி 2' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். 

Image

பதிவு: November 14, 2022
நடிகையின் ஆடை குறித்து மேடையில் கமெண்ட் அடித்த நடிகர் சதீஷ்! பிரபலங்கள் கண்டனம்!

மேடையில் நடிகையின் ஆடை குறித்து கமெண்ட் அடித்த நடிகர் சதீஷை கண்டித்து பல பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

அண்மையில் 'ஓ மை கோஸ்ட்' திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் அப்படத்தில் நடித்திருந்த சன்னி லியோன், யூடிபர் ஜி.பி.முத்து உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர். 

இந்நிலையில், மேடையில் நடிகை சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தா பேச வந்த சமயம், நடிகர் சதீஷ் அவர்களை நோக்கி, "அங்கே பாருங்கள், வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சன்னி லியோன் பாவடை தாவணி அணிந்து வந்துள்ளார். ஆனால் நம் கோயம்புத்தூரிலிருந்து வந்திருக்கும் பெண் எப்படி ஆடை அணிந்துள்ளார் பாருங்கள்" என்று கூறினார். நிகழ்ச்சியில் சன்னி லியோன் பாவடை தாவணி உடையிலும், தர்ஷா குப்தா சுடிதார் உடையிலும் வந்திருந்தனர். 

இதை சற்றும் எதிர்பார்த்திராத நடிகை தர்ஷா குப்தா சதீஷ் பேசுவதைக் கேட்டு ஒருநிமிடம் முகம் வாடினார். தொடர்ந்து பேசிய சதீஷ் விளையாட்டிற்குக் கூறியதாக பேச்சை மடைமாற்றினார். இந்நிலையில், இதற்கு பாடகி சின்மயி, இயக்குநர் நவீன், நடிகை காயத்ரி உள்ளிட்டோர் வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் நெட்டிசன்கள் பலரும் அவரைக் கண்டித்தும், இதற்கு முன்பாகவும் அவர் இவ்வாறு பெண்களின் ஆடைகள் குறித்து சர்ச்சைக்குறிய விதத்தில் பேசி கமெண்ட் அடித்துள்ள வீடியோக்களைப் பகிர்ந்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், சதீஷின் பேச்சைக் கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் நவீன்குமார், "சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. சதீஷ் சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நிங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான்" என்று கூறியுள்ளார். மேலும் பலரும் அவரது பேச்சுக்கு வலைதளங்களில் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவிட்டுவருகின்றனர். 

பதிவு: November 10, 2022
சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ராஜ்கிரண் நடிக்கும் புதிய படத்தின் பெயர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ராஜ்கிரண் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'களவாணி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சற்குணம். விமல் மற்றும் ஓவியா நடிப்பில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் இயக்கத்தில் அடுத்ததாக வெளியான 'வாகை சூட வா' திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. 

அதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'நையாண்டி' மற்றும் அதர்வா நடிப்பில் 'சண்டிவீரன்' ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இந்நிலையில், இவரது ஐந்தாவது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதர்வா, ராஜ்கிரண் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு 'பட்டத்து அரசன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்தகவல்கள் குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Image

பதிவு: November 10, 2022
மகள் இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்! அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள லைகா!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்சமயம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதைத்தொடர்ந்து அவர் லைகா தயாரிக்கவிருக்கும் இரண்டு படங்களில் நடிக்கவிருப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் ஒன்று சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் மற்றொன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்திலும் என்று பேசப்பட்டது. இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக அதுகுறித்த புதிய தகவல் ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.  

இதனடிப்படையில் லைகா தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கவிருப்பதாகவும், விஷ்ணுவிஷால், விக்ராந்த் இதில் இணைந்து நடிக்கவிருப்பதாகவும், இதில் சிறப்புத் தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும் அதிகாரப்பூர்வத் தகவலை லைகா வெளியிட்டுள்ளது.

பெயர் அறிவிப்பு போஸ்டரை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில் இது கிரிக்கெட் விளையாட்டைப் பற்றிய படமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஆயினும் கதை குறித்த தகவல்கள் எதுவும் படக்குழு தரப்பிலிருந்து வெளியாகவில்லை. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

பதிவு: November 05, 2022
மீண்டும் இணையும் ஜெய்பீம் கூட்டணி! வெளியாகியிருக்கும் முக்கிய தகவல்!

ஜெய்பீம் திரைப்படம் மூலம் இணைந்த சூர்யா - த.செ.ஞானவேல் கூட்டணி மீண்டும் இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பர் 2-ல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கியிருந்த இப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெயின்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

திருட்டு வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு காவல்துறையால் கொடுமைக்கு ஆட்படுத்தப்படும் இருளர் இன மக்களையும், அவர்களைக் காப்பாற்றப் போராடும் வழக்கறிஞரின் முயற்சிகளையும் இரத்தம் உறையக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். இது நீதியரசர் சந்துரு வாழ்வில் நடந்த உண்மைச்சம்பவம் ஆகும்.

முக்கியப் பிரச்சினைகளை அலசியதாலும், உண்மைக்கு மிக நெருக்கமான திரைக்கதை அமைப்பாலும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் குறிப்பிட்ட சமூகத்தினரை தவறாகச் சித்தரித்ததாக சில சர்ச்சைகளிலும் சிக்கியது. ஆயினும் பெருவாரியான ஆதரவின் காரணமாக ஜெய்பீம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 

இந்நிலையில் தான் ஜெய்பீம் வெளியாகி ஒரு வருடம் நிறைவானதையொட்டி, புதிய படம் ஒன்றின் அசத்தல் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெய்பீம் படத்தில் இணைந்த சூர்யா - த.செ.ஞானவேல் மீண்டும் புதிய படத்தில் இணைவதாகவும், அப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகவிருப்பதாகவும், அப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெயின்ட் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆயினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.  

பதிவு: November 03, 2022
'நான் பெண்களைத் தவறாகத் தொட்டேனா? என் இயல்பே அதுதான்!' - பிக்பாஸிலிருந்து வெளியேறிய அசல் கோளாறு பகீர்!

தான் பெண்களைத் தவறான நோக்கத்தில் தொட்டுப் பேசவில்லை என்றும் நட்பு ரீதியாகவே அவ்வாறு நடந்துகொண்டதாகவும் பிக்பாஸிலிருந்து வெளியான போட்டியாளர் அசல் கோளாறு தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 9-ல் தொடங்கி நடைபெற்றுவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்துவழங்கிவருகிறார். எல்லா சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் பலதரப்பட்ட பின்புலங்களையும் துறைகளையும் சேர்ந்த 22 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல்வார எவிக்ஷனில் நடன அமைப்பாளர் சாந்தி வெளியேறினார். அதன் பின் மகனின் உடல்நிலை காரணமாக பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து தாமாக வெளியேறுவதாகக் கூறி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து சென்ற வாரம் கானா பாடகர் அசல் கோளாறு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். போட்டிகளில் முடிந்தவரை தன்னுடைய பங்கை சரியாகவே அளித்துவந்த அசல், வீட்டிலிருந்து வெளியாக முக்கியக் காரணம் அவர் பெண்களிடம் நடந்துகொண்ட விதம்தான்.

ஆரம்பத்திலிருந்தே பிக்பாஸ் பெண் போட்டியாளர்களை தொட்டுப் பேசுவது, அவர்களுடன் இயல்புக்கு மாறாக நெருக்கத்துடன் பழகுவது, அவர்கள் மீது சாய்ந்து கட்டிப்பிடிப்பது என்று அசல் எல்லை மீறியது வெளியில் பெரும் எதிர்ப்புகளைச் சம்பாதித்தது. அவர் வீட்டிலிருந்த கடைசி சில நாட்களில் போட்டியாளர் நிவாஷினியுடன் காட்டிய நெருக்கம் காண்போரை முகம்சுழிக்கவைத்து அவரை வெளியேறவும் வைத்துவிட்டது.

இந்நிலையில், போட்டியிலிருந்து வெளியேறிய அசல், தான் சில யூடியூப் சேனல்களுக்குக் கொடுத்த பேட்டிகளில் தனது இயல்பே அப்படித்தான் என்று கூறி அதிர வைத்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்துகொண்டது பற்றி பேட்டியில் அவரிடம் கேட்டதற்கு, "நான் சிறுவயதிலிருந்தே அப்படித்தான். என்னைப் பொறுத்தமட்டில் வீட்டில் இருப்போரிடம் எப்படி தொட்டுப் பேசி பழகுவேனோ அப்படித்தான் பிக்பாஸ் பெண் போட்டியாளர்களிடமும் பழகினேன். அதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது நட்பு ரீதியான பழக்கமே தவிர வேறில்லை. அதனால் தான் அப்போட்டியாளர்களும் என்னை அவர்களுடன் நெருங்கிக் பழக அனுமதித்தனர். நான் நடத்துகொண்ட விதம் மக்களிடையே தவறாக பிரதிபலிப்பாகும் என்று நான் நினைக்கவில்லை. ஆயினும் நான் வெளியாக இதுதான் முக்கியக் காரணம் என்று தற்போது புரிகிறது. பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மக்கள் எதிர்பார்ப்பது போல் விளையாடுவேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பதிவு: November 03, 2022
"பிரபு சாலமன் சார் கதை மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அந்தக் கதையில்... வந்து..." - பேச்சில் தடுமாறி கலங்கிய குக் வித் கோமாளி அஷ்வின்!

செம்பி பட இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் கதாநாயகன் அஷ்வின் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிரபுசாலமன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் செம்பி. இதில் நடிகை கோவை சரளா, குக் வித் கோமாளி அஷ்வின் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில் பிரபு சாலமன், கோவை சரளா, கமல்ஹாசன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

இதைத்தொடர்ந்து பேசிய அப்படத்தின் கதாநாயகன் அஷ்வின், "எனக்கு படம் பண்ணுவதே பெரிய பாக்கியம். கனவாக மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தது நிறைவேறியுள்ளது. பிரபு சாலமன் சார் இந்த படத்தை இயக்குகிறார் என்று சொன்னதுமே நான் படத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன். இதற்காக தயாரிப்பாளர் ரவி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல் படமும் எனக்காக அவர் பார்த்து பார்த்து பண்ணினார். பிரபு சாலமன் சாரின் படங்களைப் பற்றி நான் சொல்லவேண்டியது இல்லை. தமிழ்நாட்டிற்கே அவரது படங்களைப் பற்றித் தெரியும். எனக்கு அவர் மேல் பெரிய நம்பிக்கை இருந்தது. 

பிரபு சாலமன் சாரை நேரில் பார்த்தபோது இந்த கதை உங்களுக்கு ஓகேவா சார் என்று கேட்டேன். அவரது படத்தில் இருப்பதே பாக்கியம். இந்த படத்தின் ஷூட்டிங் போகும்போது எனது ட்ராவல் ரொம்ப மோசமாக இருந்தது. அப்போ நெறய பேர் எனக்கு... தேங்க் யூ ஆல். எல்லோரும் இங்கு வந்ததற்கு மிக்கநன்றி.

கமல் சார் பக்கத்தில் நிற்பதற்கு பாக்கியம் வேண்டும். அவர் பண்ணாத படங்கள் இல்லை. அவர் இருக்கும்போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உலகம் முழுவதும் கமல் சாரை லவ் பண்றாங்க. அவர் இங்கு இருக்கும்போது இந்த மேடையில் பேச எனக்கு தகுதி இல்லை என்றுதான் நான் ஃபீல் பண்ணுகிறேன். தேங்க் யூ சார். லவ் யூ சார்" என்று பேசி முடித்தார். 

இதற்கு முன்னதாக 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில், "நான் கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியுள்ளேன்" என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர்மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் தான், நீண்ட இடைவெளிக்குப்பிறகு செம்பி இசைவெளியீட்டுவிழாவில் அவர் பெரும் பக்குவத்துடன், யோசித்து யோசித்துப் பேசியது முந்தைய அனுபவங்களின் வாயிலாக அவர் பொது மேடையில் எவ்வாறு பேசவேண்டும் என்று கற்றுக்கொண்டதைக் காட்டுகிறது. ஆனால், இதையும் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். 

பதிவு: October 29, 2022

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்