சென்னை
'தீபாவளி வந்தால் குடும்பத்திற்காக நிறைய செலவு செய்வார்; ஆனால் எனக்கு வெறும் இனிப்பு மட்டுமே தருவார்' - சென்னை இரட்டைக்கொலை குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!

பட்டயக் கணக்காளர் ஸ்ரீகாந்த், அனுராதா தம்பதியினர், தங்கள் வீட்டில் பணிபுரிந்துவந்த ஓட்டுநராலேயே கொலை செய்யப்பட்ட நிகழ்வில், அதற்கான காரணம் குறித்து அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் அதிரவைப்பதாக உள்ளது.

சென்னை மயிலாப்பூரில் வசித்துவரும் பட்டயக் கணக்காளர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும், தங்கள் வீட்டில் பெறாத பிள்ளைபோல் இருந்துவந்த கார் ஓட்டுநர் லால் கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளி ரவி உதவியுடன் கொலை செய்யப்பட்ட நிகழ்வு கடும் அதிர்வலைகளைக் கிளப்பியது. 

வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் மகளைக் காணச் சென்றுவந்த தம்பதியர் இருவரையும், பணத்திற்கு ஆசைப்பட்டு உருட்டுக் கட்டையால் தலையில் அடித்து கொலை செய்து, அவர்களது பண்ணை வீட்டில் திட்டமிட்டபடி ஏற்கனவே தோண்டிவைத்திருந்த குழியில் உடலைப் புதைத்துள்ளனர் கிருஷ்ணாவும், அவரது கூட்டாளி ரவியும்.

நில விற்பனை தொடர்பாக ஸ்ரீகாந்துக்கு ரூ.40 கோடி வரவிருப்பது தெரிந்து இத்திட்டத்தைத் தீட்டியுள்ள கிருஷ்ணா, கொலைக்குப்பின் வீட்டில் இருந்த 1000 சவரன் நகையை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து நண்பருடன் நேபாளத்திற்கு தப்பியுள்ளார். இதனிடையே தான் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் தப்பிக்கவிருந்த கிருஷ்ணா மற்றும் ரவி ஆகியோர் காவலர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். மேலும் அவர்கள் திருடிச் சென்ற நகைகளும் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கொலைக்கான காரணம் குறித்து கிருஷ்ணா காவலர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், "ஸ்ரீகாந்திடம் நான் 7 வருடங்களாக வேலைபார்த்து வருகிறேன். என் மீது அவர் அளவுகடந்து நம்பிக்கை வைத்திருந்தார். கார் ட்ரைவராக இருந்தாலும் நான் வீட்டு வேலைகளையும் சேர்த்தே செய்வேன். எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. என் மகன் டார்ஜிலிங்கில் படிக்கிறான். நான் ஸ்ரீகாந்த் வீட்டிலேயே தங்கி இருக்கிறேன். ஆனால் நான் வேலை பார்த்த அளவுக்கு ஸ்ரீகாந்த் எனக்கு சம்பளம் கொடுக்கவில்லை. மகன் படிப்புக்கு உதவும்படி ஸ்ரீகாந்திடம் உதவி கேட்டேன். அவர் முடியாது எனக் கூறிவிட்டார். அவரிடம் நிறைய பணம் இருந்தும் அவர் உதவவில்லை.

தீபாவளி என்றால் நகைகள் வாங்குவது, துணிகள் வாங்குவது என மிகவும் ஆடம்பரமாக குடும்பத்துடன் கொண்டாடுவார். ஆனால், அவர் வீட்டிலேயே இருக்கும் எனக்கு ஒரு கிலோ இனிப்பு பொட்டலம் மட்டுமே கொடுப்பார். அப்போதுதான் ஈசிஆரில் ஒரு நிலம் விற்கப்பட்டது எனக்கு தெரியவந்தது. அந்த பணம் ரூ.40 கோடி அவரது வீட்டில் இருக்குமென நினைத்தே திட்டமிட்டோம். ஆனால் பணம் இல்லை. அதற்கு பதிலாக நகைகள் நிறைய இருந்தன. உண்மை வெளி உலகுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதால் இருவரையும் கொன்று பண்ணை வீட்டில் ஏற்கெனவே தோண்டி வைக்கப்பட்ட குழியில் புதைத்தோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பதிவு: May 09, 2022
சென்னையில் பறக்கும் படையினரால் ரூ.1.39 லட்சம் பறிமுதல் - ககன்தீப் சிங் பேடி தகவல்..

சென்னையில் நேற்று வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.39 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககதீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அனைத்து அரசியல் கட்சிகளும், அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் உள்ள சுவர் விளம்பரங்கள், பேனர்களை அகற்ற வேண்டும். ஏற்கெனவே சென்னை மாநகராட்சியில் சுவரொட்டிகள் அனுமதிக்கப்படுவது இல்லை. சுவரொட்டிகள் ஒட்டியிருந்தால், அவற்றை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது, மாநகராட்சி சார்பிலும் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று வரை அரசுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 3,688, தனியாருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 2,528 சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. அதிகாரிகளுக்கு முழுமையாக அகற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் வேட்பாளர்கள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை கூட்டம் நடத்துவது என்றால், காலை 8 மணி முதல் இரவு 8 மணிக்குள் தான் நடத்த வேண்டும்.

தமிழக அரசு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வரும் ஜன.31-ம் தேதி வரை சைக்கிள் பேரணி, ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை. அதேபோல் அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களுக்கும் அனுமதியில்லை. அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் அதிகபட்சமாக நூறு பேர் அனுமதிக்கப்பட வேண்டும். சென்னையில் நேற்று பறக்கும் படையினரால், ரூ.1.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை 27,812 அதிகாரிகளுக்கு 24 மையங்களில் தேர்தல் குறித்துப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பதிவு: January 29, 2022
கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான வழக்கு- உயர் நீதிமன்றம் அதிரடி...

சென்னை - புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பை பி.எஸ் டி. நிறுவனம் தரமற்ற முறையில் கட்டியது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என்றும், சமரச மையம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் 2016-ஆம் ஆண்டில் 112 கோடி ரூபாய் செலவில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவை தரமற்றவையாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்ததால், ஐஐடி குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அதில், தரமற்ற வகையில் குடியிருப்பைக் கட்டிய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்கவும், அந்த நிறுவனத்திற்கு இனி அரசு ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், பி.எஸ்.டி. நிறுவனத்துக்கு எதிராக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஏன் தடை பட்டியலில் சேர்க்கக் கூடாது என விளக்கம் அளிக்க அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து பி.எஸ்.டி. நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பி.எஸ்.டி.நிறுவனத்தின் தரப்பில், சம்பந்தப்பட்ட கட்டடத்தில் 93 சதவீத சரிசெய்யும் பணிகள் முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. நிறுவன தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, நிறுவனத்தை தடைப் பட்டியலில் சேர்த்து பணிகள் மேற்கொள்ள தடை விதித்தால், அது சீரமைப்புப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்து விடும் எனக் கூறி, அந்த நிறுவனத்திற்கு எதிரான நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தாக்கல் செய்த மனுவில் ஏற்கெனவே அந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில், பிரச்சினைகளை Aribitration center என்று அழைக்கப்படும சமரச மையத்தில் மூலம் தீர்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கும், சமரச மையம் விசாரிக்கத் தேவையில்லை என்று கூறி, அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். இந்த வழக்கு மீதான விசாரணையை பிப்ரவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

பதிவு: January 28, 2022
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- வேட்புமனு தாக்கல் தொடங்கியது...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. பல்வேறு பகுதிகளிலும் வேட்பாளர்கள் உற்சாகமாக மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை முதல் தங்களது வேட்புமனுவை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம் என்றும், வரும் ஜனவரி 29-ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்பதால் அன்றைய தினமும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 19 -ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துக்களை ஏற்று வாக்குப்பதிவு நேரத்தினை காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நிர்ணயம் செய்து ஆணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிவு: January 28, 2022
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

நீர்நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை என விண்ணப்பதாரரிடம் உத்தரவாதம் பெற்ற பிறகே, குறிப்பிட்ட நிலத்துக்கு கட்டிட ஒப்புதலோ, அனுமதியோ வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கி அமர்வு விசாரித்தது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டால், அந்த ஆக்கிரமிப்புகள் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அனைத்து வழக்குகளிலும் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர், நீர்நிலை நிலங்களை பதிவு செய்யக் கூடாது.

நீர்நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை என விண்ணப்பதாரரிடம் உத்தரவாதம் (Declaration) பெற்ற பிறகே, குறிப்பிட்ட நிலத்துக்கு சொத்துவரி வசூலிக்க வேண்டும்.

அதேபோல, ஆக்கிரமிப்பு இல்லை என உத்தரவாதம் பெறாமல் மின் இணைப்போ, குடிநீர் இணைப்போ வழங்க கூடாது. அனுமதி கோரும் கட்டிடம் நீர்நிலைகளில் இல்லை என உறுதி செய்ய வேண்டும்.

மேலும், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்த நிலங்களுக்கு கட்டிட ஒப்புதலோ, அனுமதியோ வழங்கியிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையுடன், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

பதிவு: January 27, 2022
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ரிச்ரவ் வங்கி அதிகாரிகள்- ராமதாஸ், தினகரன் கண்டனம்...

குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாத ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளனர்.

இது குறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் இந்திய ரிசர்வ் வங்கியில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தத் தவறியுள்ளனர். அதுமட்டுமின்றி அவ்வாறு செய்யத் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து மரியாதை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திட்டமிட்டே இதை செய்ய மறுத்திருப்பது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயல்.

மத்திய அரசு அதிகாரிகளாக இருந்தாலும் தமிழகத்தில் மாநில விதிகளை மதிக்க வேண்டும். தமிழ்த்தாயை அவமதித்தவர்களை மன்னிக்கக்கூடாது. இதுகுறித்து புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என அரசும், காவல்துறையும் காத்திருக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதேபோன்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காததோடு, அதனை நியாயப்படுத்தியும் பேசியிருக்கிற ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அதிகாரிகளே இப்படி மலிவாக நடந்துகொள்வதை ஏற்க முடியாது. இத்தகைய விதி மீறலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாமல் தடுப்பதும் அவசியம்” என்று பதிவிட்டுள்ளார்.

பதிவு: January 27, 2022
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது...

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

தமிழகத்தில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 4,349 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 2,650 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

அரசு, சுயநிதி கல்லூரிகளில் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கும் இன்று கலந்தாய்வு தொடங்கியது. சென்னையில் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

முதல் நாளில் சிறப்புப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் பங்கேற்க உள்ளனர். 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்லி மாணவர்களுக்கு நாளை, நாளை மறுநால் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பொதுப்பிரிவினருக்கு 30-ம் தேதி முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பதிவு: January 27, 2022
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழக கடலோர மாவட்டங்கள் ,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,'நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 

வருகிற 27ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 28ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர் ,திருச்சி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை,' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: January 24, 2022
குடியரசு தின விழா கொண்டாட்டம்- சென்னை மெரினா கடற்கரை சாலையில் முப்படை வீரர்கள், காவல்துறையினர் இறுதிக்கட்ட ஒத்திகை...

குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் முப்படை வீரர்கள், காவல்துறையினர் இறுதிகட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. 73வது குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி விமர்சியாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சென்னை மெரினா - காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் தேசிய கோடியை ஏற்றவுள்ளார்.

இதையடுத்து முப்படை, மாநில காவல்துறை, கடலோர காவல்துறையின் அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஏற்கனவே கடந்த 20 மற்றும் 22ம் தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்ற நிலையில், இன்று முழு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முழு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

விழாவிற்கு ஆளுநரும், முதலமைச்சரும் வருவது போலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை நடைபெற்றது. இதனை தொடர்ந்து முப்படையினர், துணை ராணுவம், கடலோர காவல்படை, தமிழக காவல்துறை, தீயணைப்புப்படை மற்றும் தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு பயிற்சி மேற்கொண்டனர். இசை வாத்தியங்கள் முழங்க அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து சென்றன.

அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டது. குடியரசுதின ஒத்திகை பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, மாநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பதிவு: January 24, 2022
கொளத்தூரில் குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...

கொளத்தூர் தொகுதியில் அசோக் அவென்யூ, ஜெகநாதன் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டப் பணிகளை, அத்தொகுதி எம்எல்ஏவும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கவுதமபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகளுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் வியாசர்பாடி நீர்நிலை பகிர்மான நிலையத்திலிருந்து ஜவஹர் சாலை வரை 2.8 கிமீ தூரத்துக்கு ரூ.99 லட்சத்தில் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் தொடக்க விழா அக்குடியிருப்பு வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, ஜிகேஎம் காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் ரூ.40 லட்சத்து 30 ஆயிரம் செலவில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர் ரங்கதாஸ் காலனி மற்றும் நேதாஜி காலனி பிரதான சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அசோக் அவென்யூ, ரங்கதாஸ் காலனி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்கள் பணிகள் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, அஞ்சுகம் நகர் 12-வது தெருவில் தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும், விரைவாகவும், தரமாகவும், குறித்த நேரத்திலும் முடித்திட அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

கொளத்தூர் தொகுதிக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஒருசில இடங்களில் காரிலிருந்து இறங்கி, பொதுக்களிடம் கலந்துரையாடி நலம் விசாரித்தார். பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்பி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் சி.விஜயராஜ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குடியிருப்புகளுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் வியாசர்பாடி நீர்நிலை பகிர்மான நிலையத்திலிருந்து ஜவஹர் சாலை வரை 2.8 கிமீ தூரத்துக்கு ரூ.99 லட்சத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

பதிவு: January 22, 2022

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்