தஞ்சாவூர்
11 உயிர்களைப் பறித்துள்ள தஞ்சை தேர் விபத்து! விபத்துக்குக் காரணம் என்ன?

தஞ்சை களிமேடு பகுதியில் ஏற்பட்ட தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன.

தஞ்சை மாவட்டம், களிமேடு கிராமத்தில் அப்பர் மடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அப்பர் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 93 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டுவரும் இத்திருவிழா, 94-ஆம் ஆண்டாக இவ்வாண்டும் கடந்த செவ்வாய் அன்று தொடங்கி கொண்டாடப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்றைய தினம் அதிகாலை தேரோட்டம் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், சுமார் 3 மணியளவில் தேர் சாலையின் வளைவில் திரும்புகையில், சாலையின் பக்கவாட்டில் சென்ற உயர்மின் அழுத்தப் பாதையில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து தேர் தீப்பற்றி எரியத்துவங்கியுள்ளது. மேலும் தேரில் மற்றும் தேரைச் சுற்றியிருந்த 11 பேர் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கவலைகளைத் தெரிவித்து வருகின்றனர். தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்திற்கு மின் கம்பிகளின் பாதை சாலையின் ஓரத்தில் அமைக்கப்படாததே காரணம் என குற்றம் சாட்டுகின்றனர் களிமேடு பகுதி மக்கள்.

இதுகுறித்து களிமேடு கிராம மக்கள் கூறுகையில், ‘தேர், சாலையின் வளைவில் திரும்புகையில், சாலையில் இருந்த மேடு காரணமாக நிலைதடுமாறி சற்றே சாய்ந்து, சாலையின் பக்கவாட்டில் இருந்த மின்னழுத்தப் பாதையில் உரசி விபத்து ஏற்பட்டது. அரசு அதிகாரிகள் சாலை விரிவாக்கத்தின்போது மின்பாதைகளை தள்ளி அமைக்காமல் கவனக்குறைவாக அப்படியே வழியில் விட்டுவிட்டதால் தான் தேர் அதில் உரசி இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. மின்சாரம் பாய்ந்ததில் அதில் இருந்தவர்கள், தேரை இயக்கியவர்கள், தேரைச் சுற்றி நின்றுகொண்டிருந்தவர்கள் என அனைவரும் சற்றுநேரத்தில் சுருண்டு விழுந்தனர். இத்தனை ஆண்டுகளில் இவ்வாறு விபத்து நிகழ்ந்ததே இல்லை. இவ்விபத்திற்கு மின்சாரத்துறையும் போக்குவரத்துத் துறையும்தான் காரணம்’ என்று வேதனை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து களிமேடு கிராமத்திற்கு கொண்டுவரப்பட தயாராக உள்ளதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பதிவு: April 27, 2022
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி...

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதிப்பட கூறினார்.

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டறியும் வகையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாணவி தற்கொலைக்கு காரணமாக 68 வயதுடைய பள்ளி விடுதி வார்டன் மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகமும் விளக்கமளித்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ பள்ளியாக இருந்தாலும் அங்கு இந்துக்கள் தான் அதிகமாக படித்து வருகின்றனர். அங்கு தற்போது பயின்று வரும் மாணவர்கள், முன்னாள் மாணவர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இந்த கருத்துக்கள் எல்லாம் போலீஸ் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக உரிய தண்டனை பெற்று தரப்படும்.

இதற்கு முன்பாக நடந்த விபத்துகள் வேறு விதமாக இருந்தாலும் இவ்வாறு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது குறித்து பள்ளிக்கல்வித்துறை மூலமாக விசாரிக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த கருத்துக்கள் போலீஸ் தரப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இழந்த உயிரை மீண்டும் கொண்டுவர முடியாது என்றாலும், இதுபோன்று மீண்டும் எங்கும் நடக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. தனியார் அமைப்புகள் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் சென்று இதனால் நடந்திருக்கோ அல்லது அதனால் நடந்திருக்குமோ என்று வினவி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட குழந்தை உறுதியாக ஆமா.. இதனால் தான் என்று சொல்லாமல் இருந்திருக்கலாம், போயிருக்கலாம் என்று சொல்லியுள்ளனர். இதில் சோகமான விசயமாக பார்க்கப்படுவது, பெற்றோர்களால் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையிலும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள பள்ளி விடுதி வார்டன் தான் பள்ளி கட்டணம் செலுத்தி படிக்க வைத்துள்ளார். இருப்பினும் மனஉளைச்சல் ஏற்பட காரணமாக அவர்களே இருந்துள்ளதால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தனியார் அமைப்புகள் இதனை அரசியல் ஆக்காதீர்கள் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தீர விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறியனார்.

பதிவு: January 24, 2022
டெல்டா மாவட்டங்களில் ஆய்வை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

வடகிழக்கு பருவமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர், விழுப்புரம், டெல்டா மாவடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார். நேற்றும் 6-வது நாளாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளை பார்வையிட்ட முதல்வர், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக நேற்று இரவே புதுச்சேரி சென்றார். இரவு அங்கு தங்கி இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிடுகிறார்.

காலை 7.30 மணி முதல் கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காலை 9.30 மணி முதல் மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளில் பார்வையிட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதன்பிறகு, காலை 11.30 மணி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கனி, அருந்தவபுலம் பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளிலும், மாலை 3.30 மணி முதல் தஞ்சாவூர் மாவட்டம் பெரியக்கோட்டை பகுதியிலும் முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார்.

இந்த ஆய்வின்போது பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை நேரில் கேட்டறியும் முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கும் உத்தவிட உள்ளார். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழைபாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவும் இன்று முதல்வரை சந்தித்து பாதிப்புகள் குறித்து விளக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

பதிவு: November 13, 2021

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்