தீபாவளிக்கு பட்டாசுகளை இந்துக்கள் கடைகளிலேயே வாங்கவேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள ட்வீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வரும் 24-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு ஆடைகள், பட்டாசுகள் வாங்குவது போன்ற முன்னேற்பாடுகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மத அடையாளங்களை மறந்து அனைவரும் தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடித்து இனிப்புகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியில் ஈடுபடுவர்.
இந்நிலையில், தீபாவளிப் பண்டிகைக்கு இந்துக்கள் கடைகளில் மட்டுமே பட்டாசுகள் வாங்கவேண்டும் என்ற சர்ச்சைக்குறிய பதிவை இந்து மக்கள் கட்சி பதிட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தீபாவளிக்கு எந்தப் பொருள் வாங்கினாலும் இந்து கடையா என்று பார்த்து வாங்கவும்; நாம் கொடுக்கின்ற ஒரு பைசா லாபம் கூட ஒரு இந்துவுக்கு தான் போய் சேர வேண்டும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
ஒரு பண்டிகை இந்து, கிறித்துவ, இஸ்லாமிய மதங்களைச் சார்ந்த பண்டிகையாக இருந்தாலும் அன்றைய தினம் அன்பையும், உணவையும் சாதி மதம் பாராமல் பரிமாரிக்கொள்வதில் தான் பண்டிகையின் சாரமே அடங்கியுள்ளது. இப்படி இருக்கையில் பிரிவினையை போதிக்கும் விதமான இப்படிப்பட்ட கருத்துகள் சமூகத்தில் தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்புபவையாக உள்ளது.
இந்து மக்கள் கட்சியின் இக்கருத்துக்கு, "பட்டாசு வாங்கவேண்டாம் என்று சொன்ன நீங்கள், இந்துக் கடைகள் தவிர்த்து மற்ற கடைகளில் அரிசு, பருப்பு, ஆடை, பெட்ரோல் வாங்கமாட்டேன், தேவையின்போது பிறரது இரத்தம் வேண்டாம், பிற மத மருத்துவர்கள் வேண்டாம் என்று கூறத் தயாரா?' என்று நெட்டிசன்கள் கருத்திட்டு வருகின்றனர்.
— Indu Makkal Katchi (Offl) 🇮🇳 (@Indumakalktchi) October 21, 2022
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ இரயில் இயக்க நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம், பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பயணச்சீட்டுகளில் சலுகைகள் வழங்குவது, இரயில் இயக்க நேரங்களை நீட்டிப்பது மற்றும் இடைவெளியை அதிகரிப்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ இரயில் இயக்க நேரங்களில் மாற்றம் செய்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் தனது அறிவிப்பில், "தீபாவளியை முன்னிட்டு நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று நாட்கள் மட்டும், 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் இயக்கப்படும்.
எனவே 2022 அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலான நெரிசலமிகு நேரங்களில் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட கூடுதல் மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் 20.10.2022 (வியாழன்), 21.10.2022 (வெள்ளிக்கிழமை) மற்றும் 22.10.2022 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளுக்கு மட்டுமே" இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
Press Release - 20-10-2022 pic.twitter.com/yM6BvvbK9V
— Chennai Metro Rail (@cmrlofficial) October 20, 2022
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பேருந்து நிலைய பாலூட்டும் அறைகள் பராமரிப்பின்றி கிடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர்,
"கழக நிறுவனர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் காலம் தொட்டே அஇஅதிமுக பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த, 2015-ஆம் ஆண்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது பேருந்து நிலையங்களில் தாய்மார்களுக்கென்று பாலூட்டும் தனி அறைகள் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்களுக்கான இத்திட்டம் இந்த விடியா ஆட்சியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. தமிழகமெங்கும் பேருந்து நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை எந்தவித பராமரிப்பின்றியும் இருக்கைகள் சேதமடைந்த நிலையிலும், துர்நாற்றம் வீசும் அவல நிலையிலும் மூடிக் கிடக்கிறது.
இந்நிலை மாறவேண்டும். தாய்மார்கள் போற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அறைகளை உடனடியாக சீர்செய்து, மீண்டும் தாய்மார்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
கழக நிறுவனர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் காலம் தொட்டே அஇஅதிமுக பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த, 2015ஆம் ஆண்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது பேருந்து நிலையங்களில் தாய்மார்களுக்கென்று, 1/3 pic.twitter.com/ZL2MyXAFWi
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) October 13, 2022