திருச்சி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு!- அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் தரிசனம்

வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

பூலோக வைகுண்டம் என்று போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத ஆலயத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து தினம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நம்பெருமாள் நாச்சியர் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடந்தது.

அதனை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்டு ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் கடந்து சென்றார். சொர்க்கவாசல் திறப்புக்கு பின்னர் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள்வார்.

ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். செர்க்கவாசல் திறப்பின் போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் கலந்துகொண்டு நம்பெருமாள் தரிசனம் செய்தார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவை காண்பதற்காக பக்தர்கள் உலகெங்கும் இருந்து ஸ்ரீரங்கம் வந்துள்ளனர். கோயிலை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு 2000க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றி உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலை 7 மணி முதல் 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: December 14, 2021
சிங்கப்பூர், இங்கிலாந்தில் இருந்து திருச்சி, சென்னை வந்தவர்களுக்கு கொரோனா!- ஒமிக்ரான் டெஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டது மாதிரிகள்

சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து விமானத்தில் திருச்சி, சென்னைக்கு வந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, அந்த நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 136 பயணிகளிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிய வகை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அவரின் மாதிரிகள் ஒமிக்ரான் வகை கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூரை சேர்ந்த அந்த நபர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருச்சி ஆட்சியர் கூறுகையில், இவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மாதிரிகள் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த நபருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா உறுதியான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முழுமையான பரிசோதனை முடிவு வரும் வரை ஒமிக்ரான் உறுதி என எடுத்துக்கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

பதிவு: December 03, 2021
அரசு வளர்ச்சிப் பணியை தடுக்கும் திருச்சி திமுக ஒன்றிய செயலாளர், ஊராட்சி தலைவர்!

திருச்சியில் அரசு காண்டிராக்ட் பணியை செய்யவிடாமல் அராஜகம் செய்யும் திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநருக்கு CSR CONSTRUCTIONS புகார் அளித்துள்ளது.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், நவலூர் கிராமத்தில் நாடக மேடை அமைக்க 2020 ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு CSR CONSTRUCTIONS அவர்களுக்கு வழங்கப்பட்டது, கொரோனா காலம் என்பதால் இத்தனை நாட்கள் தாமதமாக இருந்தது. தற்போது இந்த வேலையை துவங்கும் போது திமுக ஒன்றிய செயலாளர் கருப்பையா மற்றும் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருவரும் சேர்ந்து, இப்போது இருப்பது எங்கள் ஆட்சி. நாங்கள் யாருக்கு சொல்கிறோமோ அவர்களுக்குதான் பணி என்று கூறி பணியை நடக்கவிடாமல் டெண்டர் எடுத்தவரை மிரட்டி பணியாளர்களையும் தரைகுறைவாக பேசுகிறார்கள்.

இந்த நிலையில், திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநருக்கு CSR CONSTRUCTIONS செல்வம் அனுப்பியுள்ள புகார் மனுவில், "முதல்வர் எல்லோரையும் அரவணைத்து செல்லும் பண்பாளராக இருக்கும் போது இவர்கள் போன்றோரால் தான் அவருக்கு அவப்பெயர், அவர்கள் அரசு அதிகாரிகளையும் பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள். நான் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியும் இது தொடர்கிறது. தயவு கூர்ந்து முதல்வர் தலையிட்டு இது போன்ற ரவுடிகளை திருத்த வேண்டும் என்று தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.

பதிவு: September 27, 2021

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்