ஆதனூரிலுள்ள அரசுப்பள்ளியில் தன்னை கண்டித்த ஆசிரியரை அடிக்க கை ஓங்கிய மாணவனை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூருக்கு அருகே மாதனூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சஞ்சய் என்பவர் தாவரவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், பாடம் சார்ந்த ரெக்கார்ட் நோட்டை ஆசிரியர் சஞ்சய் மாணவர்களிடம் சமர்ப்பிக்கக் கூறியுள்ளார். ஆசிரியரின் பேச்சை கண்டுகொள்ளாமல் மாணவர் ஒருவர் வகுப்பிலேயே படுத்து தூங்கியுள்ளார்.
இதனைக் கண்ட ஆசிரியர் சஞ்சை மாணவரை அழைத்துக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் சஞ்சையை தகாத வார்த்தைகளால் திட்டி, ஆபாசமாகப்பேசி அடிக்கக் கை ஓங்கியுள்ளார். வகுப்பிலிருந்த மேலும் இரண்டு மாணவர்கள் இவருடன் சேர்ந்து ஆசிரியரைத் திட்டியுள்ளனர்.
இதையடுத்து, இது பற்றிய காணொலி இணையத்தில் வெளியானதையடுத்து பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மாணவர்களைத் திருத்த ஆசிரியர்களிடம் அடிக்கச்சொல்லி பெற்றோர்கள் கேட்டுக்கொண்ட காலம் போய், மரியாதையுடன் நடத்தவேண்டிய ஆசிரியர்களை இவ்வாறு ஆபாசமாகப் பேசும், தாக்க முயற்சிக்கும் மாணவர்கள் தற்சமயம் உருவெடுப்பது பலரிடையே அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
காணொலி வைரலானதையடுத்து சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் வேலன் மாணவர் மற்றும் ஆசிரியரிடையே விசாரணை நடத்தினார். மேலும் தகவல்களைக் கேட்டறிந்த அவர் மாணவரை பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சமீபமாக ஆசிரியர்களை அவமதிக்கும் வகையில் மாணவர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து அமைந்துவருவது ஆசிரியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒழுக்கத்தின் பிறப்பிடமான பள்ளிகளிலேயே இவ்வாறு ஒழுக்கக் கேடான நிகழ்வுகள் நடைபெறுவது பெற்றோரை கவலையில் துவளவைப்பதாக உள்ளது.