ஆவடியில் 20 செமீ மழை!- தமிழகம் முழுவதும் தொடரும் ரெயின்

தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து கொண்டுள்ளது. கனமழையாகவும், மிக கனமழையாகவும் அவ்வப்போது பெய்து வருகிறது. வடகடலோர மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீ-யை தாண்டி மழை பதிவாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீட்டரை தாண்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 20 செ.மீ மழையும், சோழவரத்தில் 15 செ.மீ, திருவள்ளூரில் 13 செ.மீ, பொன்னேரியில் 12 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 12 செ.மீ, காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் 12 செ.மீ, ஸ்ரீபெரும்புதூரில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மாமல்லபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இன்று அதிகாலை வரை தலா 18 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இன்று அதிகாலை வரை திருக்கழுக்குன்றத்தில் 16.2 செ.மீ, மதுராந்தகத்தில் 15.4 செ.மீ , திருப்போரூரில் 10 செ.மீ என மழை பதிவாகியுள்ளது.

அம்பத்தூரில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பெரம்பூர் 10 செ.மீ, அயனாவரத்தில் 10 செ.மீ, சென்னை டிஜிபி அலுவலகத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்று பிற்பகல் கனமழை பெய்த நிலையில் மாலை நேரத்தில் மழை குறைந்திருந்த நிலையில் இரவு நேரத்தில் பல இடங்களில் கனமழை பெய்துள்ளது.

பதிவு: November 27, 2021
12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!- தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் மேற்கு வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதனால் தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னை, செங்கல்பட்டு, டெல்டா மற்றும் தென்மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

பதிவு: November 25, 2021
`4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம்!'‍- செந்தில் பாலாஜி

கனமழை பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதிலிருந்து 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மழைநீர் பாதிப்பு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை அவர் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2015, 2016 மற்றும் கடந்த ஆண்டுகள தடைபட்ட மின்சாரம் இரண்டு வார காலத்திற்கு பிறகே சரி செய்யப்பட்டது. தற்போது மழை நின்ற உடன் மின்சாரம் சீர்செய்யப்பட்டு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் 66 ஆயிரம் மின் இணைப்புதாரர்களுக்கு மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டு 38,000 இணைப்புதாரர்களுக்கு தற்போது வரை மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. நிறுத்தப்பட்ட எஞ்சியிருக்கும் 28 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 தினங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவுகள் அந்தந்த மின்சார வாரிய அலுவலகங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்படும்" என்று கூறினார்.

பதிவு: November 12, 2021
கிடுகிடுவென நிரம்பி வரும் ஏரிகள்!- 4 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த புழல் ஏரியில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு உபரி நீரை பொதுப்பணித்துறையினர் திறந்தனர். இன்று 90 சதவீத கொள்ளளவை புழல் ஏரி எட்டியது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் 2,916 மில்லியன் கன அடி நீர் உள்ளது. புழல் ஏரியின் 2 மதகுகள் வழியாக 2 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 1,357 கனஅடியாக உள்ளது. புழல் ஏரியில் இருந்து நேற்று முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,872 மில்லியன் கன அடி நீர் உள்ளது.

புழல் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் 13.5 கி.மீ. தூரம் சென்று எண்ணூரில் வங்கக்கடலில் கலக்குகிறது. நீர்வரத்து 1,487 கன அடியாக உள்ள நிலையில் குடி நீருக்காக 191 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் செல்லும் கால்வாய் வழியே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் சென்னையில் உள்ள முக்கிய ஏரிகள் நிரம்பி வருகின்றனர். மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 58 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கொசஸ்தலை வடிநில கோட்டத்தில் உள்ள 336 இருக்கிறது. இந்த ஏரிகளில் 58 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளது. மேலும் 37 ஏரிகள் 76 சதவிகிதமும், 50 ஏரிகள் 51 சதவிகிதமும், 107 ஏரிகள் 50 சதவிகிதமும், 79 ஏரிகள் 25 சதவிகிதமும் நிரம்பியிள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.

பூண்டி நீர்தேக்கத்தில் மொத்த உயரமான 35 அடியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் 33 .98 அடியாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான 3ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி நீரில் தற்போது, 2 ஆயிரத்து 786 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 244 கன அடியாக உள்ள நிலையில், 4 ஆயிரத்து 883 கனஅடி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 138 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 88 ஏரிகள் 70 சதவீதத்துக்கு மேலும் 48 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நிரம்பி உள்ளது பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23.3 அடி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மொத்த கொள்ளளவான 3ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில் தற்போது 2ஆயிரத்து 942மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 710 கன அடியாக உள்ள நிலையில், ஏரியிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 144 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியில், அதன் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது, 18 அடியாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான ஆயிரத்து 81 மில்லியன் கனஅடியில், 908 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 520 கன அடியாக உள்ள நிலையில், ஆயிரத்து 200 கனஅடி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23 .3 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக உள்ள நிலையில், அவை முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சுற்றி உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

பதிவு: November 08, 2021
`ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு!'- அமைச்சர் சேகர்பாபு

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான நிலம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் மீட்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் இன்று அறநிலையத்துறை வசம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, 'காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் இதுவரை 132 கிரவுண்டு இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தி உள்ளது. இன்று 250 கோடி மதிப்பிலான 38 கிரவுண்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலைய துறை தன்வசபடுத்தி உள்ளது. முறையாக 78 நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தி உள்ளோம்.

அறநிலையத்துறையில் குறைகள் பதிவேடு துறை ஆரப்பித்தோம். இணையதளம் மூலம் குறைகளை மக்கள் தெரிவிக்க கடினமாக இருந்ததால் தொலைபேசி எண்ணை அறிவித்தோம். அதன் மூலம், இதுவரை 4500 குறைகள் வந்துள்ளன, மண்டல வாரியாக பிரித்து அனுப்பி ஆய்வு செய்து வருகிறோம். விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹெச்.ராஜாவின் இந்து சமய அறநிலையத் துறை மீதான ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் இந்து சமய அறநிலைத்துறை கருத்தில் கொள்ளாது. எதையோ பார்த்து ஏதோ குறைக்கிறது என்று நினைத்துக்கொள்வோம். ஹெச்.ராஜா மத்திய அரசின் பிரதிநிதி அல்ல.

சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் வழிபாட்டிற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது விஜயதசமி அன்று கோவில் திறப்பது தொடர்பாக நீதிமன்றதில் வழக்கு நிலுவையில் உள்ளது, நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். திருநீர் மலையில் ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். மற்ற கோயில்களில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் நடைபெறும்' என்றார்.

பதிவு: October 12, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்