"சர்க்கரை என நினைத்து, பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட தென்காசி சிறுமி இசக்கியம்மாள் தற்போது உடல் நலம் தேறினார். இந்த சிறுமி முதல்வரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, ரூ.5 லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை மேலூர் கே.சி ரோடு குடிநீர் தொட்டி கீழ்ப்புறம் பகுதியை சேர்ந்த சீதாராஜ் என்பவரின் 5 வயது மகள் இசக்கியம்மாள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது ப்ளீச்சிங் பவுடரை சர்க்கரை என்று நினைத்து சாப்பிட்டுவிட்டார். இதனால் உணவுக்குழல் பாதிப்பட்டு உணவை எடுத்துக்கொள்ளாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சிறுமியின் உடல் மோசமடைந்தது 5 வயதில் 18 கிலோ எடை இருக்கவேண்டிய குழந்தை உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்பட்டார். இது தொடர்பாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த குழந்தைக்கு சென்னையில் சிகிச்சை கொடுக்கவும் அவரது பெற்றோர் தமது எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் தங்கிக்கொள்ளவும் ஏற்பாடுகளை செய்திருந்தார். அதன் அடிப்படையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த 5 மாதங்களாக சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
தற்போது இசக்கியம்மாள் நன்றாக உடல்நலம் தேறி இருக்கிறார். இந்நிலையில் இசக்கியம்மாளுடன் சென்னை தலைமை செயலகத்திற்கு வந்த அவரது பெற்றோர், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினர். அப்போது குழந்தையிடம் நலம் விசாரித்த முதல்வர், தொடர் சிகிச்சைக்கும், மருத்துவ செலவுக்கும் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெற்றோரிடம் வழங்கினார்.