நாமக்கல்
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்பட 14 இடங்களில் மீண்டும் ரெய்டு!

ஊழல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. கடந்த 15ம் தங்கமணி மற்றும் அவர்களது உறவினர்கள் சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.2.16 கோடி பணம் , 1.13 கிலோ தங்கம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

மேலும் ஐந்தாண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 4.85 கோடி சொத்து குவித்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தங்கமணி மட்டுமல்லாது அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீதும் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில் விசாரணையின் தொடர்ச்சியாக மீண்டும் இன்று காலை 6.30 மணியளவில் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்கள், ஈரோட்டில் 3 இடங்கள், சேலத்தில் ஓரிடத்தில் என சோதனை நடைபெற்று வருகிறது. நாமக்கல்லில் பிஎஸ்கே கட்டுமான நிறுவனம், அதன் உரிமையாளர் அசோக் வீடு, எருமப்பட்டியில் உள்ள சரண்யா ஸ்பின்னிங் மில், அழகு நகரில் உள்ள கோழிப்பண்ணை அதிபர் மோகன் வீடு, ஈரோட்டில் சாந்தான்காடு பகுதியில் தங்கமணியின் நண்பரான குமார் என்பவர் வீடு, ஒண்டிக்காரன்பாளையத்தில் செந்தில் நாதன், செங்கோடம்பள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு, பள்ளிபாளையத்தில் உள்ள தங்கமணியின் ஆடிட்டர் செந்தில் குமார் ஆகிய வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பதிவு: December 20, 2021
கிரிப்டோ கரன்சியில் முதலீடு... ரூ.4.85 கோடி சொத்து குவிப்பு... அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, ஆபீஸில் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நாமக்கல் ஈரோடு உட்பட 69 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்வாரியத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பல முறைகேடான முறையில் சொத்து சேர்த்ததாகவும் இவர் மீது புகார்கள் எழுந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், அவரது வீடு, அலுவலகம், மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்கள் என 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6.30 மணி முதல் சோதனை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக சென்னை, நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒலிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 150 மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர், அவரது உறவினர்கள், அவரது பினாமி கள் வீடு என மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனையானது நடைபெறுகிறது.

இந்த சோதனையின் முடிவிலேயே எவ்வளவு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர், என்னென்ன ஆவணங்கள் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரியவரும். இந்த சோதனையானது நாளை வரை நீடிக்க வாய்ப்பிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணின் அவரது மனைவி சாந்தி, மற்றும் மகன் தரணீதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2016 முதல் 2020 மார்ச் வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி அளவிற்கு சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடகத்தில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் 2 இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும், சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட ஏராளாமான சொத்துகளை தங்கமணி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-2020 மார்ச் வரை வருமானத்திற்கு அதிகமாக தங்கமணி ரூ.4.85 கோடி சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

லஞ்சஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளாகும் 5- வது முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆவார். ஏற்கெனவே வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

பதிவு: December 15, 2021
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.70 லட்சம் மோசடி!- அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா தலைமறைவு

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா. இவர், அமைச்சராக இருந்தபோது சத்துணவு திட்டத்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று கொண்டு மோசடி செய்து விட்டதாக அவரது உறவினர் குணசீலன் பரபரப்பு புகார் அளித்தார். இதன்பேரில் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் ரூ.70 லட்சம் வரை பலரிடம் சரோஜா பணம் வாங்கி கொண்டு மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தவுடன், சரோஜா மற்றும் அவரது கணவரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனு 2 முறை விசாரணைக்கு வந்தபோது, சரோஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு மீதான விசாரணைக்கு வாய்தா கேட்டார்.

இதனால் 2 முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வரும் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில் சரோஜா அவரது கணவர் லோகரஞ்சன் இருவரும் தலைமறைவாகி விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து உறவினர் குணசீலன் கூறுகையில், "கடந்த அதிமுக ஆட்சியில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சராக இருந்த சரோஜா சத்துணவு துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறினார். இதனால் நானும் எனது மனைவியும் சுமார் ரூ.1 கோடி வரை அவருக்கு பணம் பெற்று கொடுத்தோம். ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை.

இதுபற்றி ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அங்கு வழக்கு பதிவு செய்யாத நிலையில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தேன். இந்த புகாரையடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்த போது முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது தரப்பிலிருந்து யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர்" என்றார்.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், ‘‘சரோஜா மற்றும் அவரது கணவர் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் வீட்டுக்கு விசாரணைக்கு சென்றபோது, வீட்டில் முன்னாள் அமைச்சர் இல்லை. இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. முன்ஜாமீன் மனு மீது நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்கு பிறகு போலீசாரின் நடவடிக்கை தொடரும்’’ என்றனர்.

கைது நடவடிக்கைக்கு பயந்தே முன்னாள் அமைச்சர் சரோஜா குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

பதிவு: November 13, 2021
நள்ளிரவு முதல் அதிகாலை வரை அடமழை!- மிதக்கும் திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம்

நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த கனமழையால் திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் வீடு, சாலைகள் தண்ணீரில் மிதக்கின்றன. தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் பகுதியில் நள்ளிரவுக்கு மேல் அதிகாலை வரை கனமழை பெய்தது. ஒரே இரவில் கிட்டத்தட்ட 10 செ.மீ-க்கு மேல் மழை பெய்ததால் தண்ணீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால் மழைநீர் செல்ல வழியில்லாத சூழ்நிலையில் வீடுகளுக்குள் புகுந்தது.

பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில், திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட கூட்டப்பள்ளி, சூரியன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் அதிக அளவு மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது. மழைநீரை அகற்றும் பணியில் அந்தந்த பகுதியை சேர்ந்த நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள மேடான பகுதிகளில் தங்கியுள்ளனர்.

பள்ளிப்பாளையத்தில் பேருந்து நிறுத்தம், சங்கீத சாலை உள்ளிட்ட இடங்களில் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழைநீர் வடிகால் ஆக்கிரமிக்கப்பட்டதால் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில், தெருக்களில் அதிகளவு தேங்கியுள்ளது. தண்ணீரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

பதிவு: October 01, 2021

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்