`என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை!'- நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்த கூடலூர் மாணவி

"என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை" என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த கூடலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரை சேர்ந்த ஜெயா (18), கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தார். இந்த நிலையில் டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்த அவர் ‘நீட்’ தேர்வும் எழுதினார்.

கடந்த மாதம் தேர்வு முடிவு வெளியாகியது. இதில் மாணவி ஜெயா 69 மதிப்பெண் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மன வருத்தத்துடன் அவர் இருந்தார். இதையறிந்த பெற்றோர் அவரை திருப்பூரில் உள்ள அக்கா வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சில வாரங்கள் இருந்த ஜெயா, தனது பெற்றோரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு பாரதி நகருக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 17ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அத்துடன் மாணவி ஜெயா எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த கடிதத்தில், ‘நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன். அம்மா... என்னை மீண்டும் மன்னித்துவிடு’ என்று கூறியுள்ளார்.

பதிவு: December 24, 2021
`தேசத்திற்கான அவரது சேவையை மறக்க முடியாது!'- 8 நாள்கள் தீவிர சிகிச்சை பிறகு உயிரிழந்தார் கேப்டன் வருண்சிங்

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண்சிங் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நிகழ்ந்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில், பயணம் மேற்கொண்ட 14 பேரும் உயிரிழந்துள்ளனர். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் டிசம்பர் 8ல் காலமான நிலையில் வருண்சிங் 80 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். கேப்டன் வருண் சிங் மரணத்தை அடுத்து ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

முதலில் வருண் சிங் மீட்கப்பட்டு குன்னூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் 80% தீக்காயமடைந்த வருண்சிங்கிற்கு பெங்களுருவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது காலமாகியுள்ளார்.

குரூப் கேப்டன் வருண் சிங் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வீரத்துடன் நாட்டிற்காக வருண் சிங் செய்த சேவையை என்றும் மறக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேப்டன் வருண் சிங் பெருமையுடனும் வீரத்துடனும் நாட்டுக்காக சேவையாற்றியுள்ளார் என்று பிரதமர் மோடி புகழஞ்சலி தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "குன்னூர் அருகே நடந்த பயங்கர ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை என்ற சோகமான செய்தியைக் கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவரது வீரமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் உத்வேகமாக அமையும், அவர் என்றும் நம் மனதில் நிலைத்திருப்பார்” என்று கூறினார்.

பதிவு: December 15, 2021
`மீட்பு நடவடிக்கைக்கு உறுதுணையாக உதவி செய்தீர்கள்!'- முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய விமானப் படை நன்றி

ஹெலிகாப்டர் விபத்தின் போது மீட்பு பணியில் உதவிய தமிழக முதல்வர், நீலகிரி கலெக்டர், போலீசார் மற்றும் காட்டேரி கிராம மக்களுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பூங்கா, நஞ்சப்ப சத்திரம் அருகே கடந்த 8-ம் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கிய கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். பெங்களூரு கொண்டு செல்லப்பட்டுள்ள அவருக்கு, அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மலைப்பகுதியில் நடந்த இந்த ஹெலிகாப்டர் விபத்தால் மீட்புக்குழுவினர் வருவதற்கு கால தாமதம் ஆனது. ஆனால், விபத்து நடந்த சில நிமிடங்களில் காட்டேரி பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கேப்டன் வருண் சிங்கை மீட்டனர். உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். போலீசார், தீயணைப்புத்துறையினர், உள்ளூர் பொதுமக்கள், ராணுவம் உள்பட அனைத்து தரப்பும் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. தமிழக அரசு தரப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. மேலும், கோவையில் இருந்து சிறப்பு மருத்துவக்குழுவும் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கும், மீட்பு பணியின் போது உதவிய அதிகாரிகளுக்கும் இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய விமானப்படை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "எதிர்பாராத விதமாக நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தின் போது மீட்பு நடவடிக்கைக்கு உறுதுணையாக உதவிகள் வழங்கிய தமிழ்நாடு முதல்வர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், நீலகிரி கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மற்றும் காட்டேரி கிராம மக்களுக்கும் விமானப்படை நன்றி தெரிவிக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.

பதிவு: December 11, 2021
`பனி மூட்டத்தில் மறைந்தது; அதி பயங்கர சத்தம் கேட்டது!- தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டரை வீடியோ எடுத்தவர்கள் பேட்டி

``ஹெலிகாப்டர் பனிமூட்டத்திற்குள் மறைந்தது. பின் மரத்தில் ஹெலிகாப்டர் இடித்து பயங்கர சத்தம் கேட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்தோம். எரிந்த நிலையில் ஹெலிகாப்டர் கீழே கிடந்தது. ஹெலிகாப்டர் வீடியோவை போலீசிடம் ஒப்படைத்து விட்டோம்" என்று விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை வீடியோ எடுத்த கோவையை சேர்ந்தவர்கள் கூறினர்.


நீலகிரி மாவட்டம், குன்னூரில் முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், விபத்திற்கு சில நொடிகளுக்கு முன்னர் சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியது. இந்த வீடியோவில் முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் பனி மூட்டத்தால் மலைப்பகுதியில் தாழ்வாக செல்வது இடம்பெற்றது. தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் வெடித்து சிதறும் சத்தம் கேட்க, அந்த வீடியோவில் இருக்கும் நபர்கள் “என்னாச்சு உடைஞ்சுருச்சா” என அதிர்ச்சியுடன் கேட்கும் காட்சிகளும் பதிவாகியது.

இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தொடர்ந்து இந்த வீடியோவை எடுத்த சுற்றுலா பயணிகள் யார் என்பது குறித்தும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய தற்போது தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோயம்புத்தூர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமண புகைப்படக் கலைஞரான ஜோ, தனது நண்பர் எச்.நாசர் (52) என்பவருடன் இன்று காலை கோவை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்றார். குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதிக்கு படம் எடுப்பதற்காக சென்றதாக தெரிவித்தனர். ஹெலிகாப்டர் இருப்பதை கவனித்த ஜோ, தனது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்ததாக தெரிவித்தார்.

கோவை காந்திபுரத்தில் அச்சகம் நடத்தி வரும் கரும்புக்கடையைச் சேர்ந்த நாசர் மற்றும் அவரது குடும்பத்தினர் புதன்கிழமை ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்களுடன் ஜோவும் சென்று இருந்தார். மதியம் 12.15 மணியளவில், அவர்கள் காட்டேரி அருகே மலை ரயில் பாதையை அடைந்தனர். அங்கு குடும்பத்தினர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டு இருந்தனர். அப்போது தான் ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் கேட்டு வீடியோ எடுத்து உள்ளார்.

இது குறித்து ஜோ, நாசர் கூறுகையில், "ஹெலிகாப்டர் சத்தம் கேட்டு வீடியோ பதிவு செய்ய ஆரம்பித்தோம். அது 19 வினாடிகள் கொண்ட வீடியோ. ஹெலிகாப்டர் சீராக பறந்து மூடுபனிக்குள் மறைந்தது. வானத்தில் ஹெலிகாப்டர் சத்தம் கேட்டு வீடியோ எடுத்தோம். இறுதியாக ஹெலிகாப்டர் பனிமூட்டத்திற்குள் மறைந்தது. பின் மரத்தில் ஹெலிகாப்டர் இடித்து பயங்கர சத்தம் கேட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்தோம். எரிந்த நிலையில் ஹெலிகாப்டர் கீழே கிடந்தது. ஹெலிகாப்டர் வீடியோவை போலீசிடம் ஒப்படைத்து விட்டோம். ஹெலிகாப்டர் விபத்து விசாரணைக்கு எங்கள் வீடியோ முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும். ஊட்டியை அடைந்ததும், நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை அணுக முயற்சித்தோம். ஆனால் அதிகாரிகளுக்கு செய்தியை தெரிவிக்க முடியவில்லை. நாங்கள் இருவரும் சம்பவ இடத்திற்குத் திரும்பி, அங்குள்ள அதிகாரிகளுடன் செய்தியைப் பகிர்ந்து கொண்டோம்" என்று தெரிவித்தனர்.

பதிவு: December 10, 2021
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின் கடைசி நொடி காட்சிகள்!- சுற்றுலா பயணிகள் வெளியிட்ட வீடியோ

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன் எடுக்கப்பட்ட பிரத்யேக வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கோவை மாவட்டம் சூலூர் வந்து அங்கிருந்த விமானப் படைதளத்தில் இருந்து குன்னூருக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு வந்து கொண்டிருந்த போது நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியது.

விழுந்து நொருங்கிய அந்த ஹெலிகாப்டரில் தீப்பற்றி எரிந்தது, அக்கம்பக்கத்தினர் சிலர் ஓடோடி வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கொளுந்து விட்டு எரிந்த ஹெலிகாப்டரில் இருந்து உடல்கள் பெரும் சிரமத்துடன் மீட்கப்பட்டன. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி, அவரின் மனைவி மதுலிகா ராவத், மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் என அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான எம்ஐ 17 வி5 ரக ராணுவ ஹெலிகாப்டர் உயர் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது என கூறப்பட்டது. இருப்பினும் குன்னூரில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அல்லது தொழில்நுட்ப காரணங்களால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என பல்வேறு கோணங்களில் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த விபத்தை நேரில் கண்ட உள்ளூர்வாசிகள் ஹெலிகாப்டர் தடுமாறிய நிலையில் மரத்தின் மீது மோதி தீப்பிடித்ததாக கூறினர். ஒருசிலர் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்குவதற்கு முன் பயங்கர சத்தம் கேட்டதாகவும் கூறினர். இந்த விபத்து குறித்த வீடியோக்கள் ஏதும் வெளியாகாமல் இருந்து வந்தது,

இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கும் முன்னர் எடுக்கப்பட்ட பிரத்யேக வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கும் முன்னர் அப்பகுதியில் சுற்றுலா சென்ற ஒருவர் அந்த விபத்தை தனது மொபைலில் பதிவு செய்துள்ளார். உதகை மலை ரயில் இருப்புப் பாதையில் சுற்றிப் பார்க்க வந்த குடும்பத்தினர், அப்பகுதியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், ஹெலிகாப்டர் பலத்த சத்தத்துடன் அவர்களை கடந்து செல்கிறது. அப்போது அந்த பகுதியில் அடர் பனிமூட்டம் நிலவுவதை காண முடிகிறது. சுற்றிலும் வெண்புகையாக காட்சியளிக்கிறது. மேலும் ஹெலிகாப்டர் இஞ்சினில் இருந்து வரும் சப்தம் வித்யாசமாகவும் இருக்கிறது.

ஹெலிகாப்டர் பறந்து சென்றது இயல்புக்கு மாறாக இருந்த நிலையில் அங்கிருந்தவர்கள் சத்தம் வந்த திசையை திரும்பிப் வானில் பார்க்கின்றனர், ஹெலிகாப்டர் தரையில் மோதியதைப் போல சத்தம் கேட்டதால், “என்னாச்சு உடஞ்சிருச்சா?” என ஒருவர் கேட்க அதற்கு வீடியோ எடுப்பவர் ஆனாம் என பதில் தருகிறார். விபத்துக்கு முன் எடுக்கப்பட்டு தற்போது வெளியாகி இருக்கும் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: December 09, 2021
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேரில் 13 பேர் உயிரிழப்பு!- சிகிச்சையில் இருக்கும் ஒருவர் யார்?

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துவிட்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. சிகிச்சையில் இருக்கும் நபர் யார் என்பதுதான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.

நீலகிரி மாவட்டம், வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். ஏற்கெனவே 4 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்துள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் பிபின் ராவத் நிலை குறித்து தெரியவில்லை. அவரது மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக நீலகிரி ஆட்சியருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எஞ்சிய 3 பேரின் நிலை குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.

இதனிடையே, ``தமிழகத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில் 13 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றும் "டிஎன்ஏ சோதனை மூலம் உடல்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்படும்'' என்றும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. சிகிச்சையில் இருக்கும் அந்த நபர் என்ற கேள்வி எழுந்த வண்ணம் இருக்கிறது. இதனிடையே, 80 சதவிகித தீக்காயத்துடன் மீட்கப்பட்ட விமானி வருண் என்பவருக்குதான் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடன் ராணுவ தளபதி நரவனே சந்தித்து வருகிறார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இல்லத்தில் அவரது மகளை ராணுவ தளபதி சந்தித்தார். ஹெலிகாப்டர் விபத்து குறித்த கூடுதல் தகவல்களை அமைச்சரிடம் ராணுவ தளபதி தெரிவித்தார்.

இதனிடையே, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் இன்றைய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ரத்து செய்துள்ளார்.

பதிவு: December 08, 2021
குன்னூர் மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!‍- 7 பேர் பலி; முப்படை தளபதியின் நிலை என்ன?

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்திற்கு சென்ற போது, வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. 24 பேர் வரை பயணம் செய்யக்கூடிய விபத்துக்குள்ளான இந்த Mi - 17 V5 வகை ஹெலிகாப்டரில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் எல்.எஸ். லிட்டர், ஹர்ஜிந்தர் சிங் உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதால் சுமார் ஒரு மணி நேரமாக தீப்பிடித்து எரிகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவையில் இருந்து டாக்டர்கள் குழு குன்னூருக்கு விரைந்துள்ளது. இந்த நிலையில் விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், இந்திய விமானப்படையின் Mi - 17 V5 வகை ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்தார் என்றும் முப்படைகளின் தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 4 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

பதிவு: December 08, 2021
`5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும்!'- சென்னை வானிலை ஆய்வு மையம்

நாளை முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனையொட்டிய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 15ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

17ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரை நோக்கி நகரும். இன்று முதல் 16ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் , மன்னார் வளைகுடா பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் , கேரளா, லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என கூறப்பட்டுள்ளது.

பதிவு: October 13, 2021
`ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல கூடாது!'- தமிழக வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம் என்று வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் MDT23 எனப் பெயரிடப்பட்ட புலி ஒன்று மனிதர்களையும், கால்நடைகளையும் வேட்டையாடி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட கால்நடைகள், 4 மனிதர்களை அந்த புலி கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதையொட்டி அப்பகுதி மக்கள் தாங்கள் அச்சத்துடன் நாட்களைக் கடத்தி வருவதாகவும், புலியை உடனடியாக பிடிக்கக்கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தினர்.எனவே ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க தமிழக தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார்.

புலியை சுட்டுப் பிடிக்கும் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடர்பட்டது. அதில், இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் பேனர்ஜி, ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த புலியை கொல்வதற்காக சுட்டுப்பிடிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் அதை உயிருடன் பிடிப்பதே நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி, நீலகிரியில் உலவும் புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம் என்றும் எனவே புலியை கொல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும் புலியை பிடிக்கும் பணியின் போது மற்ற விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்றும் புலியின் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து அதை பிடித்து உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த புலியை பிடித்து சிகிச்சை அளித்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தசரா விடுமுறைக்கு பின் ஒத்திவைத்தனர்.

பதிவு: October 05, 2021
`மனிதர்களை கொல்லும் புலியை சுட்டுக்கொல்லக்கூடாது!'- உயர்நீதிமன்றத்தில் உபி பிரமுகர் வழக்கு

நீலகிரியில் 4 பேரை கொன்ற புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் MDT23 எனப் பெயரிடப்பட்ட புலி ஒன்று மனிதர்களையும், கால்நடைகளையும் வேட்டையாடி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட கால்நடைகள், 4 மனிதர்களை அந்த புலி கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதையொட்டி அப்பகுதி மக்கள் தாங்கள் அச்சத்துடன் நாட்களைக் கடத்தி வருவதாகவும், புலியை உடனடியாக பிடிக்கக்கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தினர். எனவே ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க தமிழக தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார்.

புலியை சுட்டுப் பிடிக்கும் உத்தரவை எதிர்த்து உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. புலியை சுட்டுப்பிடிப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை,' எனக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

பதிவு: October 04, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்