துப்பாக்கிச் சுடும் பயிற்சியினால் விபரீதம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்...

இனி வருங்காலங்களில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியினால் விபரீதம் ஏதும் ஏற்படாமல் இருப்பது உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற கட்சித் தலைவர் ஓ .பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு அப்பாவி சிறுவனின் உயிரை பறித்து ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், பெரம்பலூர் மாவட்ட விவசாயி வீட்டின் மேற்கூரையை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.

30-12-2021 அன்று புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பதினோறு வயது சிறுவன் புகழேந்தியின் தலையில் பாய்ந்து, ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இந்தச் சூழ்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்கிற விவசாயி அப்பகுதியில் உள்ள கல்நார் கூரையுடன் கூடிய வீட்டில் வசித்து வருவதாகவும், இந்த வீட்டின் பின்புறம் சிறிது தூரத்தில் உள்ள மலைப் பகுதியில் துப்பாக்கி சுடும் மையம் செயல்படுவதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வீட்டின் கூரைப்பகுதியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டதாகவும், இந்த நிலையில் கூரைப் பகுதியில் துளை ஏற்பட்டதையும், அதிலிருந்து வெளிச்சம் ஊடுருவியதையும் கண்டதும் தன் மகனை விட்டு மேற்கூரையில் ஏறிப் பார்க்கச் சொன்னதாகவும், ஏணி வைத்து ஏறிப் பார்த்ததில் அங்கு ஒரு துப்பாக்கி குண்டு கிடந்ததாகவும், இது குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இந்நிலையில் அதே வீட்டின் மற்றொரு பகுதியிலிருந்து மேலும் ஒரு தோட்டாவை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அருகில் உள்ள மலைப் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயிற்சியில் ஈடுபட்டதும், பயிற்சியின் போது அவர்கள் பயன்படுத்திய குண்டுகள் விவசாயி வீட்டின் மேற்கூரையை துளைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. நல்ல வேளையாக யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தாலும், இதே காரணத்திற்காக நாம் ஒரு சிறுவனை அண்மையில் இழந்திருக்கின்ற நிலையில், நாரணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடும் பீதியில் உள்ளனர். இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே வலுத்து வருகிறது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் துப்பாக்கிச் சுடும் மையங்களிலும் போதிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும், பாதுகாப்பு ஏற்படுத்த முடியவில்லை என்ற சூழ்நிலை வந்தால் அங்கு பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பதும், இனி வருங்காலங்களில் துப்பாக்கி சுடும் பயிற்சியினால் விபரீதம் ஏதும் ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டுமென்பதும் பொதுமக்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது. இதைச் செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து துப்பாக்கிச் சுடும் மையங்கள் மக்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யவும், ஆய்வின் அடிப்படையில் பயிற்சியை மேற்கொள்ளத் தேவையான அனுமதியினை வழங்கவும், ஆய்வின் முடிவு வேறு மாதிரி இருக்கும்பட்சத்தில் துப்பாக்கிச் சுடும் மையத்தினை வேறு இடத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பதிவு: January 28, 2022
நேற்று முன்தினம் 55 பேர்... இன்று 12 பேர் கைது..!- இலங்கை கடற்படையினரின் செயலால் தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு

ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 55 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக் ஜலசந்தி கடலில் கடந்த 18ம் தேதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர், மன்னார் வளைகுடா கடலில் நேற்று முன்தினம் மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் என 55 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரும், ஊர்காவல்துறை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மண்டபம் மீனவர்கள் 12 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக்கு பின்னர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 மீனவர்களையும், 8 விசைப்படகுகளையும் விடுவிக்கவும், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் சுமுகமான முறையில் மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக எடுக்கவும் வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மேலும் 14 தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 14 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் 2 மீன்பிடி விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்களை மயிலடி மீன்பிடி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஜெகதாபட்டினத்தில் 1,200 மீனவர்களின் போராட்டத்தால் 200 விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டன.

பதிவு: December 21, 2021
படகை நொறுக்கியது கப்பல்... மீனவர் உயிரிழப்பு... 2 பேர் சிறைபிடிப்பு..!- இலங்கை கடற்படை அட்டூழியம்

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு நொறுங்கியது. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். 2 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் வளத்தை அழைப்பதாகக் கூறி இலங்கை வடக்குப் பகுதியில் மீனவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று இலங்கையின் முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரை கடலில் போராட்டங்கள் நடத்திய நிலையில் எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை பிடிக்க இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டனத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற சில படகுகள் இலங்கை காரைநகர் கோவலம் கடற்பகுதிக்குள் வந்ததாக கூறி அந்த படகுகளை விரட்டி சென்ற போது இலங்கை கடற்படையின் கப்பல் தமிழக மீனவரின் விசைப்படகு மீது மோதியது. இதில் மீனவர்களின் படகு நொறுங்கி கடலில் மூழ்கியது. அப்போது படகில் இருந்த 3 மீனவர்களில் 2 மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட நிலையில் மீனவர் ராஜ்கிரண் கடலில் மாயமானார். அவரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மாயமான மீனவர் ராஜ்கிரண் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

இலங்கை கடற்படை கப்பல் தமிழக மீனவரின் படகு மீது மோதி மீனவர் உயிரிழந்த செய்தி மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: October 19, 2021
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் ரெய்டு!- லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது.


விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மாமனார், தங்கை, தம்பி  உள்ளிட்ட உறவினர்களின் வீடுகளிலும் காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து மார்ச் 31 வரை 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22,56,736 ரூபாய் சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனைவி ரம்யா, மகள்கள் பெயரில் விஜயபாஸ்கர் சொத்துகள் வாங்கி குவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனங்களையும் சி.விஜயபாஸ்கர் நடத்தி வந்துள்ளார். அறக்கட்டளை மூலம் பள்ளி, பொறியியல், செவிலியர், கல்லூரி என 14 கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

பதவிக்காலத்தில் ரூ.6.6 லட்சத்துக்கு டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரங்கள், ஜே.சி.பி. வாங்கி இருக்கிறார். அமைச்சராக இருந்த போது ரூ.53 லட்சத்துக்கு பி.எம்.டபிள்யூ. கார் வாங்கி இருக்கிறார். ரூ.40 லட்சம் மதிப்பிலான 85 சவரன் நகைகளும் வாங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சிலாவட்டம், மொரப்பாக்கத்தில் சுமார் ரூ.4 கோடிக்கு விவசாய  நிலங்களை வாங்கியுள்ளார். லஞ்ச பணத்தில் சென்னை தியாகராயர் நகரில் ரூ.15 கோடிக்கு வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார். அமைச்சராக இருந்த போது பல நிறுவன பங்குகளை ரூ. 28 கோடிக்கு வாங்கி இருக்கிறார். அமைச்சராக இருந்த போது தான் மற்றும் மனைவி, 2 மகள்கள் பெயரில் ரூ.58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.

வருமான வரித்துறை கணக்கின் படி 5 ஆண்டில் சி.விஜயபாஸ்கர் வருமானம் ரூ.58.65 கோடி என காட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் வங்கிக்கடன், காப்பீட்டுத்தொகை என ரூ.34.5 கோடி செலவு செய்துள்ளார். சி.விஜயபாஸ்கரும் ரம்யாவும் 5 ஆண்டுகளில் செலவு போக ரூ.24 கோடி மட்டுமே சேமித்து இருக்க முடியும். வருமானத்தை மீறி ரூ.27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு: October 18, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்