மதுரை
ஒமிக்ரான் பாதிப்பு 34 ஆக உயர்ந்தது!- 3வது இடத்தில் தமிழ்நாடு

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.

உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் கடந்த மாதம் 24ம் தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன. ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில் கால்பதித்துவிட்டது என உலக சுகாதார அமைப்பு உறுதி செய்திருக்கிறது.

இந்தியாவிலும் கடந்த 2ம் தேதி நுழைந்த இந்த வைரஸ் 21 நாளில் 269 பேருக்கு பாதித்துள்ளது. டெல்டா வைரஸைவிட குறைந்தது 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 104 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.

இந்தநிலையில், 41 பேரின் மரபணு பகுப்பாய்வு முடிவுகள் வெளியானதில் 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 43 பேரில் 30 பேர் வெளிநாடு, ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்தவர்கள். இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் முடிவு வர வேண்டி உள்ளது. கொரோனா உறுதியான 114 பேரில் 57 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருந்ததால் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் கண்டறியப்பட்ட நிலையில் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

சென்னையில் 26 பேரும், மதுரையில் 4 பேரும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் முடிவு வர வேண்டி உள்ளது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் சிகிச்சையில் இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

பதிவு: December 23, 2021
`மதுரை காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி; ஒருவருக்கு அரசு வேலை!'- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மதுரையில் பழமையான கட்டட சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த தலைமை காவலர் சவரணன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் உயிரிழந்த காவலரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரை கீழவெளி பகுதியில் மொத்த விற்பனை கடைகள், சரக்கு லாரிகள் நிறுத்தும் இடம் இருப்பதால் அந்த பகுதியில் இரவு நேரத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், அப்பகுதியில் விளக்குத்தூண் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் கண்ணன் மற்றும் சரவணன் ஆகியோர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நெல்பேட்டை அருகே உள்ள 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் ஒன்றின் முன்பாக சிலர் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை கண்ட காவலர்கள், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பிறகு அங்கேயே காவலர்கள் சிறிது நேரம் நின்றிருந்த போது கட்டடத்தின் முதல் மாடி சுவர் திடீரென்று இடிந்து அவர்கள் மேல் விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த கண்ணனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்றொரு காவலர் சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து பகல் நேரத்தில் நிகழ்ந்திருந்தால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். பழமையான கட்டடங்களை அகற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில், மதுரையில் கட்டடம் இடிந்ததால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயிரிழந்த காவலரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், பழமையான கட்டடம் இடிந்ததால் காயமடைந்த காவலர் கண்ணனுக்கு ரூ.5 லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே இந்த கட்டடத்தை இடிக்க 3 மாதத்திற்கு முன்பே நோட்டீஸ் விடுத்ததாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பழமையான கட்டடங்கள் இடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.

மதுரையில் பழமையான கட்டிடங்களின் நிலை குறித்து 2வது முறையாக ஆய்வு செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மதுரை நகரில் காலாவதியான பழமையான கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு மாநகராட்சி, தீயணைப்புத்துறை இணைந்து ஆய்வு செய்து 500 பழமையான கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கின. நோட்டீஸ் கொடுக்கப்பட்ட 500 கட்டடங்களில் பல கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

 

பதிவு: December 22, 2021
திரையரங்குகள் 100% இருக்கை அனுமதியை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நவம்பர் 3,4ம் தேதிகளில் திரையரங்குகளை மூடவும் உத்தரவிடக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தற்போது தொடர்ச்சியாக திருவிழா காலமாக இருப்பதால், கொரோனா நோய் தடுப்பு வழி முறைகளை, பொதுமக்கள் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதாகவும், தமிழகம் இன்னும் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடவில்லை. இந்நிலையில், திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது கொரோனா நோய் தொற்று பரவலை அதிகரிக்கவே செய்யும்.

அன்மையில், கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்ததன் காரணமாக 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. திரையரங்கங்கள் 100% இருக்கைகளுடன் இயங்கும் போது பார்வையாளர்கள் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே இருக்கும்.

தற்போது தீபாவளி பண்டிக்கையை ஒட்டி எனிமி, வா டீல் ஆகிய உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவுள்ளன. இது கொரோன பரவலுக்கு காரணமாக அமையும். எனவே, சினிமா திரையரங்குகள், 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்தும், நவம்பர் 3, 4 தேதிகளில் திரையரங்குகளை மூடவும் உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

பதிவு: October 30, 2021
`ஓபிஎஸ் சொன்னதில் தவறு இல்லை; சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை!'- செல்லூர் ராஜு- ஜெயக்குமார் அதிர் புதிர் பேட்டிகள்

சசிகலா குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்தில் என்ன தவறு இருக்கிறது என்று கூறினார் செல்லூர் ராஜூ. அதே நேரத்தில், அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த காலத்திலும் இடமில்லை என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசும் போது, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுகவில் எதிர்ப்பும், ஆதரவு நிலவி வருகிறது.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, 'சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து சொன்ன பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் எந்த கருத்தையும் சொல்லவில்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தைதான் ஓ.பன்னீர் செல்வம் சொன்னார். அதில் என்ன தவறு இருக்கிறது' என்று கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த காலத்திலும் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். "சசிகலாவை ஆதரிப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது அதிமுகவின் நிலைப்பாடு. அது ஏற்கெனவே எடுத்த முடிவு என்றும் அவர் கூறினார். டி.டி.வி. தினகரன் இல்ல திருமணத்துக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அனைத்தையும் கட்சி கவனித்துக் கொள்ளும் என்று கூறியுள்ளார்.

பதிவு: October 28, 2021
சசிகலாவுக்கு வக்காலத்து... ஈபிஎஸுக்கு குட்டு..!- ஓபிஎஸ் திடீர் மனமாற்றம்

எடப்பாடி பழனிசாமி சசிகலாவை விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், கட்சியில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும்" என்று குட்டுவைத்தார். சசிகலாவுக்கு திடீரென ஓபிஎஸ் வக்காலத்து வாங்கியிருப்பது அதிமுகவினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி பொதுச்செயலாளர் என்ற பெயருடன் சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் சசிகலா நலத்திட்ட உதவிகளை செய்தார். தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக கொடியை ஏற்றினார். இது அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது, அவரை சட்டரீதியாக சந்திப்போம் என எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் செய்தியாளர் சந்திப்பின் போது, 'சூரியனை பார்த்து... (சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் பாதிப்பு). அத நான் ஓபனா சொல்ல முடியாது,' என்று எடப்பாடி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வத்திடம், எடப்பாடி பழனிசாமி சசிகலாவை விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், கட்சியில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும். அதிமுக தொண்டர்கள் முதல் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் வரை அவை நாகரீகத்தோடு பேச வேண்டும் என்றார்.

சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு, சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றும் அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு என்றும் ஓபிஎஸ் கூறினார்.

இதனிடையே சசிகலா குறித்து ஓபிஎஸ் தெரிவித்து கருத்து குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""சசிகலா, அவரை சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என ஓபிஎஸ் கூறினார். சசிகலா, அவரை சார்ந்தவர்களை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஓபிஎஸ் பேசியதை முழுமையாக பார்த்துவிட்டு நான் விளக்கம் அளிக்கிறேன். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.

பதிவு: October 25, 2021
`நாங்கள் டபுள் டாக்டர்ரேட் முடித்து விட்டோம்!'- செல்லூர் ராஜூ கலகல

``அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நாங்கள் டபுள் டாக்டர்ரேட் முடித்து விட்டோம்.” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜு தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வரும் 24ம் தேதி மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு ஓ.பி.எஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். 30ம் தேதி பசும்பொன் செல்லும் முன் கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் சிலைக்கு மாலை மரியாதை செய்ய உள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகள் குறித்து அதிமுகவினர் கவலைப்படவில்லை. கருணாநிதி காலத்திலேயே சோதனைகளை சந்தித்து உள்ளோம். எல்.கே.ஜி படிக்கும் போதே அச்சுறுத்தலை சந்தித்தோம், இப்போது அச்சுறுத்தலில் டபுள் டாக்டர்ரேட் முடித்து விட்டோம்” என்று கூறினார்.

பதிவு: October 22, 2021
ஏசி அறையில் பற்றி எரிந்த தீ... கருகிய கணவன், மனைவி... நள்ளிரவில் மதுரையில் அதிர்ச்சி!

மதுரையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தூங்கி கொண்டிருந்த கணவன் - மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆனையூர் அருகேயுள்ளது எஸ்.பி.பி நகர். இந்த பகுதியில் உள்ள குடியிருப்பில் சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி இருவரும் தங்களது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மாடியில் இருந்து கரும்புகை வெளியே வந்திருப்பதை பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் வீட்டின் கீழே படுத்து தூங்கி கொண்டிருந்த அவரின் குழந்தைகளும் பார்த்துள்ளனர்.

உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைவாக செயல்பட்டு மாடியில் உள்ள அந்த அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கணவன், மனைவியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்தி கண்ணன் இதே பகுதியில் தொழில் செய்து வருகிறார். கணவன் மனைவி இரண்டு பேரும் தீ விபத்தில் உயிரிழந்திருப்பது இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: October 09, 2021
`ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெயலலிதா வழியில் ஸ்டாலின்!'- பாராட்டும் செல்லூர் ராஜு

ரவுடிகளை அடக்கி ஒடுக்கி நடவடிக்கை எடுப்பதில் ஜெயலலிதாவை போலவே முதல்வர் மு.க.ஸ்டாலினும் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டியுள்ளார்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதிகள் சார்ந்த பணிகளை விரைவுபடுத்துமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கோரிக்கை மனு அளித்தார். பின்னர் மாநகராட்சி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சி காலங்களில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அதே போல் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சிகளை எடுத்து வருவதாகவும் இது வரவேற்கத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளது. அதை விரைவில் சீரமைக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடை தண்ணீர் குடிநீரில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே கடந்த ஆட்சி காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து விட்டார்கள். அந்த டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. எனவே, அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்" என்று கூறினார்.

பதிவு: September 29, 2021

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்