`நம்பர் ஒன் தேனாம்பேட்டை மண்டலம்!'- சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு

சென்னை மாநகரில் இதுவரை 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவாக தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் 228 தெருக்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு 700-க்குள் இருந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு 1892-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 766 பேர் குணமடைந்துள்ளனர். 1,126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுவும் தலைநகர் சென்னையில் தினம்தோறும் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது.

அதாவது தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ளன. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகரில் இதுவரை 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 988 தெருக்களில் 3க்கும் குறைவான எண்ணிக்கையில் கொரோனா தொற்றுடையவர்கள் உள்ளனர். 170 தெருக்களில் 3க்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா தொற்றுடையவர்கள் உள்ளனர். 86 தெருக்களில் 4க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். இதில் அதிகளவாக தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் 228 தெருக்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் மொத்தமாக 3,486 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 38,379 தெருக்களில் எவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பதிவு: January 04, 2022
சென்னை கிரிமால்டஸ் மருத்துவமனையின் பொன் விழா கொண்டாட்டம்!- சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கினர்

சென்னை கிரிமால்டஸ் மருத்துவமனை வளர்ச்சிக்காகவும், மக்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவை புரிந்தவர்களுக்கும், சேவை புரிந்து வருபவர்களுக்கும் என 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கெளரவித்தார்  நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி.


தொழுநோய் என்றாலே ஓடும் மக்கள் மத்தியில் அதனை ஒரு சவாலாக எடுத்து, மக்களுக்காக சேவை மனப்பான்மையோடு சிறப்பாக பணியாற்றி இன்று அந்த நோயை விரட்டி அடித்து, அதன் மீது மக்களுக்கு இந்த ஐயப்பாட்டை போக்கிய பங்கு சென்னை செனாய்நகரில் உள்ள கிரிமால்டஸ் மருத்துவமனைக்கு உண்டு. மேலும், காசநோய், சருமநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் முதன்மை மருத்துவமனையாக விளங்கி வருகிறது.

அப்படிப்பட்ட பாரம்பரிய மிக்க, சென்னையில் பிரபலமாக உள்ள கிரிமால்டஸ் மருத்துவமனையின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டம் சேத்துப்பட்டில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் அசோசியேஷன் பாராமெடிக்கல் கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு மருத்துவமனையின் தலைவர் குரியன் தாமஸ் தலைமை வகித்து . இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கலந்து கொண்டார்.

மேலும் அவர் மருத்துவமனை வளர்ச்சிக்காகவும், மக்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவை புரிந்தவர்களுக்கும், சேவை புரிந்து வருபவர்களுக்கும் என 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கெளரவித்தார். இந்த மருத்துவமனையின் செயல்பாட்டை பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசு துறை அதிகாரிகள், மருத்துவர்கள் என பலரும் பாராட்டினர். அந்த பாராட்டின் வடிவம்தான் இந்த பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் நடக்கிறது என மருத்துவமனையின் இயக்குநர் மரியநாதன் தெரிவித்தார்.

பதிவு: December 20, 2021
மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி எஸ்கேப்!- தேடும் 6 தனிப்படைகள்

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 6 தனிப்படைகள் தேடி வருகின்றனர்.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் உள்ளது. மேலும், விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் அடிப்படையில் விருதுநகரில் வழக்கு பதியப்பட்டது. இதில் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

மோசடி வழக்கில் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் வந்ததும், உடனடியாக ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அங்கிருந்து காரில் வேகமாகப் புறப்பட்டுச் சென்றார். இதனால், அதிமுகவினர் பரபரப்பு அடைந்தனர்.

மோசடி வழக்கில் தான் கைதுசெய்யப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதாக கூறப்படுகிறது. மேலும், 6 தனிப்படைகள் அமைத்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியைத் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

பதிவு: December 18, 2021
பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு!- நெல்லையில் நடந்த சோகம்

நெல்லையில் தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 4 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை சந்திப்பில் உள்ள சாப்ட்டர் தனியார் பள்ளியில் காலை 11 மணியளவில் இடைவேளை விடப்பட்டுள்ளது. அப்போது கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள 3 மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். காவல்துறை, வருவாய் துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்தில் இடிந்து விழுந்தவுடன் ஆங்காங்கே அனைவரும் சிதறி ஓடியுள்ளனர். அனைத்து மாணவர்களையும் வகுப்பறைக்கு வர சொல்லி யார் இல்லை என்பது குறித்து கணக்கெடுக்க கூடிய பணியை பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைவேளை விடப்பட்டதாக சொல்லப்படுகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். தற்போது 8 மற்றும் 9ஆம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவித்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்த மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, உயிரிழந்த மாணவர்களின் விவரம் தெரியவந்துள்ளது. 6ம் வகுப்பு சி பிரிவில் படித்த சுதீஷ், 8ம் வகுப்பு ஏ பிரிவில் படித்த விஸ்வரஞ்சன், 9ம் வகுப்பு பி பிரிவில் படித்த அன்பழகன் ஆகிய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த மாணவர்கள் சஞ்சய், இசக்கி பிரகாஷ், சேக் அபுபக்கர், அப்துல்லாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பள்ளியில் நடந்த விபத்து குறித்து அறிக்கை அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பதிவு: December 17, 2021
சென்னை கிரிமால்டஸ் மருத்துவமனையின் பொன் விழா கொண்டாட்டம்- சிறந்த மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருது வழங்குகிறார்...

தொழுநோய் என்றாலே ஓடும் மக்கள் மத்தியில் அதனை ஒரு சவாலாக எடுத்து, மக்களுக்காக சேவை மனப்பான்மையோடு சிறப்பாக பணியாற்றி இன்று அந்த நோயை விரட்டி அடித்து, அதன் மீது மக்களுக்கு இந்த ஐயப்பாட்டை போக்கிய பங்கு சென்னை செனாய்நகரில் உள்ள கிரிமால்டஸ் மருத்துவமனைக்கு உண்டு. மேலும், காசநோய், சருமநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் முதன்மை மருத்துவமனையாக விளங்கி வருகிறது.

அப்படிப்பட்ட பாரம்பரிய மிக்க, சென்னையில் பிரபலமாக உள்ள கிரிமால்டஸ் மருத்துவமனையின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் வரும் 18ம் தேதி சேத்துப்பட்டில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் அசோசியேஷன் பாராமெடிக்கல் கல்லூரியில் நடக்கிறது. விழாவிற்கு மருத்துவமனையின் தலைவர் குரியன் தாமஸ் தலைமை தாங்குகிறார். இந்த விழாவின் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மேலும் அவர் மருத்துவமனை வளர்ச்சிக்காகவும், மக்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவை புரிந்தவர்களுக்கும், சேவை புரிந்து வருபவர்களுக்கும் என 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கெளரவிக்கிறார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பு உரையாற்றுகிறார்கள்.

இந்த மருத்துவமனையின் செயல்பாட்டை பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசு துறை அதிகாரிகள், மருத்துவர்கள் என பலரும் பாராட்டுகிறார்கள். அந்த பாராட்டின் வடிவம்தான் இந்த பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் நடக்கிறது மருத்துவமனையின் இயக்குநர் மரியநாதன் தெரிவித்தார்.

 

பதிவு: December 16, 2021
குன்னூர் மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!‍- 7 பேர் பலி; முப்படை தளபதியின் நிலை என்ன?

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்திற்கு சென்ற போது, வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. 24 பேர் வரை பயணம் செய்யக்கூடிய விபத்துக்குள்ளான இந்த Mi - 17 V5 வகை ஹெலிகாப்டரில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் எல்.எஸ். லிட்டர், ஹர்ஜிந்தர் சிங் உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதால் சுமார் ஒரு மணி நேரமாக தீப்பிடித்து எரிகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவையில் இருந்து டாக்டர்கள் குழு குன்னூருக்கு விரைந்துள்ளது. இந்த நிலையில் விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், இந்திய விமானப்படையின் Mi - 17 V5 வகை ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்தார் என்றும் முப்படைகளின் தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 4 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

பதிவு: December 08, 2021
`மழை குறைந்துவிட்டது; பள்ளிக்கு கிளம்பி போங்க தம்பி!'- மாணவனுக்கு ரீ ட்வீட் செய்த கரூர் கலெக்டர்

கரூரில் கனமழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு ட்விட்டரில் கோரிக்கை வைத்த மாணவருக்கு, பள்ளிக்கு புறப்படுங்க தம்பி என, மாவட்ட ஆட்சியர் அளித்த பதில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கடந்த ஒரு மாதமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மழை பெய்தாலே தினமும் காலை மாணவர்கள் செய்தி சேனலில் தமது மாவட்டத்திற்கு விடுமுறையா என பார்ப்பதற்கு அமர்ந்துவிடுகிறார். அதேபோல ஆட்சியருக்கே ட்விட்டரில் டேக் செய்து விடுமுறையா என மாணவர்கள் கேட்பதும் நடந்து வருகிறது.

இதனிடையே, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், புன்னம் சத்திரம், மண்மங்களம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் பெய்து வரும் மழையினால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியரிடம், “கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆகையால் இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா” என ட்விட்டரில் மாணவர் ஒருவர் கோரிக்கை வைத்தார்.


இதையடுத்து, அந்த மாணவருக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், "மழை குறைந்துவிட்டது. பள்ளிக்கு கிளம்பி போங்க தம்பி, நண்பர்களையும் கிளம்ப சொல்லுங்க தம்பி. நிறைய படிக்க வேண்டியிருக்கு எனவும் கூறியிருந்தார். தற்போது, இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாக வருகிறது.

பதிவு: December 04, 2021
கோவையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு!- 2 குட்டியுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நடந்த சோகம்

கோவையில் தண்டவாளத்தை 2 குட்டியுடன் கடக்க முயன்றபோது கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 3 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 9 மணியளவில் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது, கோவை மதுக்கரை வனச்சரகம் க.க.சாவடி காவல் நிலைய சரகம் மகேந்திர மேடு, நவக்கரை அருகே உள்ள தங்கவேல் காட்டு மூளை பகுதியை ரயில் கடக்கையில், வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி ரயில் பாதையை கடக்க முயன்ற 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதன் இரண்டு குட்டி யானைகள் மீது ரயில் மோதியது.

இதில், தாய் மற்றும் 2 குட்டி யானைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். யானை உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமான முறைப்படி இன்று காலை யானையின் உடல் அதே பகுதியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிவு: November 27, 2021
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட்!- இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழக கடலோர பகுதிகளில் வடகிழக்கு திசையை நோக்கி வரும் புயல் சின்னமாக தமிழ்நாட்டில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இன்றைய தினம் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் கனமழை பெய்யும். இதேபோல் நாமக்கல், கரூர், திருவள்ளூர், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி 27 செ.மீ., திருச்செந்தூர் 25 செ.மீ., நாகை 19, ஸ்ரீவைகுண்டம் 18, குலசேகரப்பட்டினம் 16, வைப்பாறில் 15 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. காரைக்கால், திருவையாறு, சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், பெலந்துறையில் தலா 12 செ.மீ. மழை பெய்தது.

திருபுவனம், ஸ்ரீமுஷ்ணம், சாத்தூர், பேராவூரணி, லெப்பை குடிகாடு, பாளையங்கோட்டையில் தலா 11 செ.மீ. மழை பொழிந்தது. தொடர்ந்து திண்டுக்கல், திருவாரூர், பூதலூர், அகரம் சீகூர், வெப்பக்கோட்டை, சிவகங்கையில் 10 செ.மீ. மழை பெய்தது. தாம்பரம், மணிமுத்தாறு, நன்னிலம், காட்டுக்குப்பம், செப்பரம்பாக்கம், கடம்பூர், மணியாச்சியில் தலா 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் அதிக கனமழை இருக்கும் மாவட்டங்களாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி தெற்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பதிவு: November 26, 2021
"மாணவர்கள் தவறாக நினைக்கிறார்கள்; அவமானமாக இருக்கிறது!'‍- தற்கொலைக்கு முன் கரூர் ஆசிரியர் உருக்கமான கடிதம்

"மாணவர்கள் தன்னை தவறாக நினைக்கிறார்கள். மாணவர்கள் முன் தனக்கு அவமானமாக இருக்கிறது. தான் எந்த தவறும் செய்யவில்லை" என்று தற்கொலை செய்து கொண்ட கரூர் பள்ளி ஆசிரியர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம், காமராஜர் நகரில் வசித்து வந்தவர் சரவணன் (42). இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஜெயந்தி (42) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் பணிபுரிந்து வந்த அதே பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஒருவர் தான், பாலியல் தொல்லையால் தற்கொலை செய்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் கணித ஆசிரியர் சரவணன் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் நடராஜன் என்பவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த, இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆசிரியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சரவணன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர் சரவணன் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில், "மாணவர்கள் தன்னை தவறாக நினைக்கிறார்கள். மாணவர்கள் முன் தனக்கு அவமானமாக இருக்கிறது. தான் எந்த தவறும் செய்யவில்லை. தன்னை ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆசிரியர் சரவணனின் தற்கொலையும், அவரது உருக்கமான தற்கொலை கடிதமும் இந்த வழக்கில் மேலும் பரபரப்பை தொற்றிக் கொண்டுள்ளது.

பதிவு: November 25, 2021
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பண்டாரி பதவியேற்பு!- முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். எனவே, தலைமை நீதிபதி பதவிக்கு மூத்த நீதிபதியாக உள்ள துரைசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனிஸ்வரர்நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ரவி, பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பதவியேற்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலரும், மூத்த வழக்கறிஞர்களும் பங்கேற்றனர்.

பதிவு: November 22, 2021
சென்னையில் இன்று மாலைக்குள் தேங்கியுள்ள மழை நீர் அகற்றம்!- ககன்தீப் சிங் பேடி

சென்னை மாநகரில் தேங்கியுள்ள மழை நீர் முழுவதும் இன்று மாலைக்குள் அகற்றப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தொடர்மழையால் சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் தொடர்பாக, ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அளித்த பேட்டியில், "சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும், மழைநீர் அகற்றப்பட்டதாகவும், மீதமுள்ள 93 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரும் இன்று மாலைக்குள் அகற்றப்படும்.

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் கொசுக்களின் உற்பத்தியை தடுக்க, கொசு மருந்துகள் தெளிக்கும்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. சென்னையில் கனமழையால் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற அதிக திறன் கொண்ட 620 மோட்டார்களை மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது. மேலும் கூடுதலாக 20 மோட்டார் பம்புகள் வர உள்ளது. இன்று மாநகராட்சி சார்பாக 4,40,000 மதிய உணவு பொட்டலங்களும், மொத்தமாக 12,00,000 உணவு பொட்டலங்கள் இன்று கொடுக்க உள்ளோம்.

ஏற்கெனவே பணியாற்றிவரும் மாநகராட்சி பணியாளர்களை தவிர்த்து தாற்காலிகமாக 500 பணியாளர்கள் நாளை வரவுள்ளனர். நாளை மாநகராட்சி பணியாளர்களுடன் சேர்ந்து பணியாற்றி மாஸ் கிளினிங் செய்ய உள்ளனர். நாளை மாலைக்குள் அனைத்தும் சீர் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

மாநகராட்சி சார்பாக 4,16,000 குளோரின் மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது. மேலும், நான்கு லட்சம் மாத்திரைகள் வர உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 15 மொபைல் மருத்துவ முகாம் நாளை நடத்தப்படும். கனமழை பெய்து நீர் தேங்கியுள்ளதால் உடனடியாக கொசுக்களின் உற்பத்தியை தடுக்க நாளை முதல் கொசு மருந்துகளை அளிக்க திட்டமிட்டுள்ளோம். அதில் 3,400 மாநகராட்சி பணியாளர்கள் நாளை முதல் கொசு மருந்து அடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களில் 100 பழுதடைந்து சாலைகளை கண்டறிந்து சரிசெய்ய திட்டமிட்டோம் அதில் இன்று 70 பழுதடைந்த சாலைகள் சீர் செய்யப்பட்டது. மேலும், நாளை முதல் இந்த பணி தொடரும். அதுமட்டுமின்றி கடந்த 10 நாட்களில் 1330 பழுதடைந்த சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களில் வழங்கப்பட்ட இலவச உணவு வரும் ஞாயிறு வரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு 10 மணிவரை அம்மா உணவகத்தில் உணவு வழங்கப்படும். சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 22 சுரங்கபாதைகளில் 18 சுரங்கபாதைகள் தண்ணீர்கள் அகற்றப்பட்டுள்ளது. நாளை 4 சுரங்கபாதைகள் நீர் அகற்றப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்" என்று கூறினார்.

பதிவு: November 13, 2021
டெல்டா மாவட்டங்களில் ஆய்வை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

வடகிழக்கு பருவமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர், விழுப்புரம், டெல்டா மாவடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார். நேற்றும் 6-வது நாளாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளை பார்வையிட்ட முதல்வர், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக நேற்று இரவே புதுச்சேரி சென்றார். இரவு அங்கு தங்கி இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிடுகிறார்.

காலை 7.30 மணி முதல் கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காலை 9.30 மணி முதல் மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளில் பார்வையிட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதன்பிறகு, காலை 11.30 மணி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கனி, அருந்தவபுலம் பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளிலும், மாலை 3.30 மணி முதல் தஞ்சாவூர் மாவட்டம் பெரியக்கோட்டை பகுதியிலும் முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார்.

இந்த ஆய்வின்போது பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை நேரில் கேட்டறியும் முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கும் உத்தவிட உள்ளார். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழைபாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவும் இன்று முதல்வரை சந்தித்து பாதிப்புகள் குறித்து விளக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

பதிவு: November 13, 2021
`4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம்!'‍- செந்தில் பாலாஜி

கனமழை பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதிலிருந்து 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மழைநீர் பாதிப்பு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை அவர் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2015, 2016 மற்றும் கடந்த ஆண்டுகள தடைபட்ட மின்சாரம் இரண்டு வார காலத்திற்கு பிறகே சரி செய்யப்பட்டது. தற்போது மழை நின்ற உடன் மின்சாரம் சீர்செய்யப்பட்டு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் 66 ஆயிரம் மின் இணைப்புதாரர்களுக்கு மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டு 38,000 இணைப்புதாரர்களுக்கு தற்போது வரை மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. நிறுத்தப்பட்ட எஞ்சியிருக்கும் 28 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 தினங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவுகள் அந்தந்த மின்சார வாரிய அலுவலகங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்படும்" என்று கூறினார்.

பதிவு: November 12, 2021
கிடுகிடுவென நிரம்பி வரும் ஏரிகள்!- 4 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த புழல் ஏரியில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு உபரி நீரை பொதுப்பணித்துறையினர் திறந்தனர். இன்று 90 சதவீத கொள்ளளவை புழல் ஏரி எட்டியது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் 2,916 மில்லியன் கன அடி நீர் உள்ளது. புழல் ஏரியின் 2 மதகுகள் வழியாக 2 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 1,357 கனஅடியாக உள்ளது. புழல் ஏரியில் இருந்து நேற்று முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,872 மில்லியன் கன அடி நீர் உள்ளது.

புழல் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் 13.5 கி.மீ. தூரம் சென்று எண்ணூரில் வங்கக்கடலில் கலக்குகிறது. நீர்வரத்து 1,487 கன அடியாக உள்ள நிலையில் குடி நீருக்காக 191 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் செல்லும் கால்வாய் வழியே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் சென்னையில் உள்ள முக்கிய ஏரிகள் நிரம்பி வருகின்றனர். மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 58 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கொசஸ்தலை வடிநில கோட்டத்தில் உள்ள 336 இருக்கிறது. இந்த ஏரிகளில் 58 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளது. மேலும் 37 ஏரிகள் 76 சதவிகிதமும், 50 ஏரிகள் 51 சதவிகிதமும், 107 ஏரிகள் 50 சதவிகிதமும், 79 ஏரிகள் 25 சதவிகிதமும் நிரம்பியிள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.

பூண்டி நீர்தேக்கத்தில் மொத்த உயரமான 35 அடியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் 33 .98 அடியாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான 3ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி நீரில் தற்போது, 2 ஆயிரத்து 786 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 244 கன அடியாக உள்ள நிலையில், 4 ஆயிரத்து 883 கனஅடி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 138 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 88 ஏரிகள் 70 சதவீதத்துக்கு மேலும் 48 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நிரம்பி உள்ளது பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23.3 அடி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மொத்த கொள்ளளவான 3ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில் தற்போது 2ஆயிரத்து 942மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 710 கன அடியாக உள்ள நிலையில், ஏரியிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 144 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியில், அதன் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது, 18 அடியாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான ஆயிரத்து 81 மில்லியன் கனஅடியில், 908 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 520 கன அடியாக உள்ள நிலையில், ஆயிரத்து 200 கனஅடி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23 .3 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக உள்ள நிலையில், அவை முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சுற்றி உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

பதிவு: November 08, 2021
கனமழை எதிரொலி… எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு ஏற்கெனவே 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

அதேபோன்று திருவண்ணாமலை, தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, சேலம், கரூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: November 08, 2021
பசும்பொன் செல்ல ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு அனுமதி... எடப்பாடிக்கு திடீர் தடை… உச்சகட்ட பரபரப்பில் அ.தி.மு.க

சசிகலா விவகாரம் தொடர்பாக, முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதை, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் தவிர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ராமநாதபுரம் பசும்பொன்னில் நாளை முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, இன்று மதுரை செல்கிறார் சசிகலா. கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின், மருதுபாண்டியர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து பசும்பொன் சென்று, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

ஆண்டுதோறும், பசும்பொன் தேவர் நினைவிடத்திலும் அ.தி.மு.க., சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம். 'சூரியனை பார்த்து குரைக்கிறது' என, சசிகலாவை பழனிசாமி விமர்சித்த விவகாரம், தென் மாவட்ட முக்குலத்தோர் சமுதாயத்தினரிடம் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அதுமட்டுமல்லாது முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சசிகலா குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இவைகள் முக்குலத்தோர் சமூகத்தினரிடையே கடும் அதிருப்பதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில், பசும்பொன் நினைவு இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தால், அவர் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தக்கூடும் என்றும் இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவும் உளவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் பழனிசாமி வருகைக்கு, போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
அதேநேரத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு மத்தியில் நடக்கும் நிகழ்ச்சியாக இருப்பதால் இதில் அ.தி.மு.க.வில் உள்ள சீனியார்கள் யார்? யார்? இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பதை வைத்துதான் அ.தி.மு.க.வில் செல்வாக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகமா? அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு அதிகமா? என்பது தெரிய வரும் என்று அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

சசிகலாவும் நாளை பசும்பொன் செல்கிறார். அங்கு முத்துராமலிங்க தேர்வல் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் ஆதரவாளர்கள் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரே நாளில் பசும்பொன் செல்வதால் இருவரும் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலினும் பசும்பொன் செல்கிறார். அவருடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள். இதேபோன்று பல்வேறு கட்சித் தலைவர்களும் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள். இதனால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதிவு: October 29, 2021
`போலி நகைக்கு ரூ.2.39 கோடி கடன்!'- ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் நடந்த கூத்து

கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் ஆதாரத்துடன் கண்டுபிடிக்கபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இதனையடுத்து, பல மாவட்டங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

அவ்வாறு விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில், 5 சவரனுக்கு அதிகமாக விதிகளை மீறி நகைக்கடன் பெற்றவர்களின் ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் எனவும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து நகைக்கடனை வசூலிக்கவும், தவணை தொகையை கட்ட தவறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் அதிகாரிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் 77 போலி நகைகள் மற்றும் தரம் குறைவான சீல் இடப்பட்ட நகைப் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நபர்களுக்கு குறைவாக எடை கொண்ட நகைகளுக்கு அதிக எடை என எழுதப்பட்டு கூடுதலாக ரூ.2.39 கோடி நகைக்கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, போலி நகைக்கடன் வழங்க உறுதுணையாக இருந்த வங்கி பணியாளர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மீது தக்க நடவடிக்கை மற்றும் விசாரணை மேற்கொள்ள திருவண்ணாமலை இணைப்பதிவாளர், கூட்டுறவு சங்க பதிவாளருக்கு பரிந்துரைத்துள்ளார். இதன் அடிப்படையில் வங்கி பணியாளர்கள் 3 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல முறைகேடு தொடர்பான செய்யாறு துணைப்பதிவாளர் விசாரணை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடனில் முறைகேடை தொடர்ந்து தற்போது பொது நகைக்கடன் முறைகேட்டையும் ஆதாரத்துடன் கூட்டுறவுத்துறை கண்டுபிடித்துள்ளது.

பதிவு: October 27, 2021
வடகிழக்கு பருவ மழை!- கலெக்டர்களை அலர்ட் செய்த முதல்வர் ஸ்டாலின்

``இயற்கையின் சீற்றம் அதிகமாக இருக்கும் காலத்தில் மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும், அரசு அதிகாரிகளாகிய உங்களுக்கும்தான் இருக்கிறது'' என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களை அலர்ட் செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், இந்த அவசரக் கூட்டத்தை நமது அரசு ஏற்பாடு செய்திருக்கிறது என்று சொல்வதைவிட, இயற்கை ஏற்பாடு செய்திருக்கிறது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இயற்கையோட அழைப்பை ஏற்று இங்கே கூடி இருக்கிறோம். இயற்கையை முறையாகக் கையாண்டால் அது கொடை! முறையாகக் கையாளவில்லை என்று சொன்னால், அதுவே பேரிடராக மாறிவிடும். இயற்கையை முறையாக எதிர்கொள்வதற்கு தவறும்போது, அது, தான் யார் என்பதை நமக்கு சுட்டிக்காட்டிவிட்டுச் சென்று விடுகிறது.

எனவே, இயற்கையை கொடையாக எதிர்கொள்ளப் போகிறோமா அல்லது பேரிடராக மாற்றப் போகிறோமா என்பது நம்முடைய கையில்தான் இருக்கிறது. இயற்கையின் சூழலானது காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. சமீபகாலமாக அதன் மாறுதல் புதிராக இருக்கின்றது. குறிப்பிட்ட காலம் மழைக்காலம், குறிப்பிட்ட காலம் கோடைக்காலம் என்று வரையறுக்க முடியாத அளவுக்கு காலமாற்றம் இப்போது கடுமையாகி வருவதை அதிகாரிகள் அனைவரும் முதலில் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இயற்கையின் சீற்றம் அதிகமாக இருக்கும் காலத்தில் மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும், அரசு அதிகாரிகளாகிய உங்களுக்கும்தான் இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக எடுப்பது மட்டுமல்ல, எத்தகைய பேரிடரையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ளவும் வேண்டும். தமிழ்நாட்டில் இன்று முதல், வடகிழக்குப் பருவமழை துவங்கப் போகிறது என்றும், இந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், தமிழ்நாட்டிற்கு இயல்பான மழைப்பொழிவு கிடைக்கப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த அக்டோபர் மாதத்திலேயே கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. மேலும் 17 மாவட்டங்களிலும் அதிக மழை பெய்துள்ளது. எனவே, நாம் கவனத்துடன் பணியாற்ற வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளோம்.

கடந்த 24-9-2021 அன்று, ‘வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்தப் பணிகள்’ குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலாளர் தலைமையில் 11-9-2021 அன்று முப்படையினைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்து, பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் சொல்லப்பட்ட கருத்துகளை உங்களுக்கு நினைவூட்டத் தேவையில்லை. இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட அரசு அமைப்புகளிலிருந்து வரப்பெறும் முன்னெச்சரிக்கை செய்திகள், சமூக ஊடகங்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும், பொது மக்களுக்கும், மீனவர்களுக்கும் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் நன்கு சேவையாற்றக்கூடிய தன்னார்வத் தொண்டு அமைப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும். சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும், 24 மணி நேரமும் உரிய துறை அலுவலர்களோடு செயல்படவேண்டும். இந்த மையங்களை பொது மக்கள் 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம். இந்தத் தகவல் அனைத்துப் பொது மக்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். 100 என்று சொன்னால், அது காவல் துறை. 108 என்று சொன்னால், அது அவசர ஆம்புலன்ஸ் என்று மக்கள் மனதிலே பதிந்திருக்கிறது. அதைப்போல, இந்த எண்களும் மக்கள் எளிதில் பயன்படுத்தும் சொற்களாக மாற வேண்டும்.

இந்த நேரத்தில் மீனவர்கள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தியாக வேண்டும். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களுக்கும், கரையில் உள்ள மீனவர்களுக்கும், வானிலை முன்னறிவிப்பு குறித்து, நவீனத் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும், மீனவளத் துறை மூலமாகவும் தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த மழைக்காலத்தில், அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்துகொண்டேயிருக்க மீன்வளத் துறை தக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

அனைத்து மீனவர்களது உயிரும் நமக்கு முக்கியம் என்பதை கடலோர மாவட்டங்களைச் சார்ந்த ஆட்சியாளர்களும், காவல் துறை கண்காணிப்பாளர்களும் நினைவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். பருவமழை காலத்தின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அளிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நீங்கள் தவறாது பின்பற்ற வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் பகுதிக்கென தனித்தனியே பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, ஏழை எளிய மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகள், கடலோர மீனவக் குடியிருப்புகள் ஆகிய இடங்களின் நிலைமையை இந்தக் குழுக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

தூர்வாரப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள், வரத்துக் கால்வாய்கள், நீர்வழிப் பாதைகள் உள்ளிட்டவை சரியாக உள்ளனவா என்பதை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவசரகாலப் பணிகளை மாவட்டங்களில் மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள செய்தியை பார்த்திருப்பீர்கள். அனைத்து மாவட்டங்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கும், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்துறை அலுவலர்கள், மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த 25ம் தேதியன்று சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சென்று, நேரிடையாகப் பார்வையிட்டது அனைவருக்கும் தெரியும்.

காந்தி மண்டபம் சாலை மற்றும் இதர பகுதிகளில், வடிகால்கள் தூர்வாரக்கூடிய பணியினையும், வண்டல் வடிகட்டும் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியினையும், மழை, வெள்ளநீர் தங்குதடையின்றி செல்லக்கூடிய வகையில் வேளச்சேரி ஏரி மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் ஆகாயத் தாமரையினை அகற்றும் பணியினையும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கழிவுகளை அகற்றும் பணியினையும், நாராயணபுரம் ஏரியில் அமைக்கப்பட்டு வரும் பெரும் வடிகால் பணியினையும் நேரிடையாக சென்று பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் நீங்கள் அனைவரும் பணிகளை முடுக்கி விட வேண்டும். செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளை கடந்த 20 ஆம் தேதியன்று பார்வையிட்டு, உரிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் பரவலாக மழைபெய்து வரும் நிலையில், பெரும்பாலான அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன. எனவே, முழுகொள்ளளவை எட்டியுள்ள அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அணைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க அவ்வப்போது உபரி நீரை வெளியேற்றி, அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வெள்ள அபாயம் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தடி நீரைச் செறிவூட்டவும், வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அணைப் பாதுகாப்பு, அணைகள், நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றுவது தொடர்பான விதிமுறைகளைத் தவறாது பின்பற்றி, உபரி நீர்த் திறப்பு குறித்து பொது மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கைகளை வழங்கி உபரி நீரைத் திறந்து விட வேண்டும்.

பருவமழை காலத்தில் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இருப்பில் வைப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றவும், தாழ்வாகச் செல்லக்கூடிய மின்கடத்திகளைச் சரிசெய்திடவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்குவதால் பயிர்கள் மூழ்கி சேதமாகும் சூழல் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே, வடிகால்களைத் தூர்வார வேண்டும். அறுவடை செய்த நெல்மணிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். மழைக் காலங்களில் நோய்கள் அதிகம் உருவாகி, பரவிடக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நீங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள், மருந்து உபகரணங்கள், பாம்புக் கடிக்கான மாற்று மருந்தும், ஆக்சிஜன் உருளைகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகும் மக்களை மீட்கும்போது, மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும். இதற்கு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்துத் துறைகளுடைய ஒருங்கிணைப்புதான், அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படக்கூடிய அனைத்துப் பாதிப்புகளையும் தடுக்கும் என்பதை அனைவரும் நன்றாக உணர்வீர்கள். ‘இயற்கையை இயைந்து வெல்வோம்!’ என்ற அந்த உறுதியை நாம் எடுத்துக் கொள்வோம்" என்று பேசினார்.

பதிவு: October 26, 2021
9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!- அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

வெப்ப சலனம் காரணமாக இன்று கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர் ,சேலம், தர்மபுரி ,வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் , வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 20-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

21ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி,கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வரும் 22ம் தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழையும்,  அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும்  பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.  இன்று கேரள கடலோர பகுதி,  லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால்,  மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு: October 18, 2021
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் ரெய்டு!- லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது.


விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மாமனார், தங்கை, தம்பி  உள்ளிட்ட உறவினர்களின் வீடுகளிலும் காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து மார்ச் 31 வரை 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22,56,736 ரூபாய் சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனைவி ரம்யா, மகள்கள் பெயரில் விஜயபாஸ்கர் சொத்துகள் வாங்கி குவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனங்களையும் சி.விஜயபாஸ்கர் நடத்தி வந்துள்ளார். அறக்கட்டளை மூலம் பள்ளி, பொறியியல், செவிலியர், கல்லூரி என 14 கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

பதவிக்காலத்தில் ரூ.6.6 லட்சத்துக்கு டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரங்கள், ஜே.சி.பி. வாங்கி இருக்கிறார். அமைச்சராக இருந்த போது ரூ.53 லட்சத்துக்கு பி.எம்.டபிள்யூ. கார் வாங்கி இருக்கிறார். ரூ.40 லட்சம் மதிப்பிலான 85 சவரன் நகைகளும் வாங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சிலாவட்டம், மொரப்பாக்கத்தில் சுமார் ரூ.4 கோடிக்கு விவசாய  நிலங்களை வாங்கியுள்ளார். லஞ்ச பணத்தில் சென்னை தியாகராயர் நகரில் ரூ.15 கோடிக்கு வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார். அமைச்சராக இருந்த போது பல நிறுவன பங்குகளை ரூ. 28 கோடிக்கு வாங்கி இருக்கிறார். அமைச்சராக இருந்த போது தான் மற்றும் மனைவி, 2 மகள்கள் பெயரில் ரூ.58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.

வருமான வரித்துறை கணக்கின் படி 5 ஆண்டில் சி.விஜயபாஸ்கர் வருமானம் ரூ.58.65 கோடி என காட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் வங்கிக்கடன், காப்பீட்டுத்தொகை என ரூ.34.5 கோடி செலவு செய்துள்ளார். சி.விஜயபாஸ்கரும் ரம்யாவும் 5 ஆண்டுகளில் செலவு போக ரூ.24 கோடி மட்டுமே சேமித்து இருக்க முடியும். வருமானத்தை மீறி ரூ.27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு: October 18, 2021
`5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும்!'- சென்னை வானிலை ஆய்வு மையம்

நாளை முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனையொட்டிய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 15ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

17ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரை நோக்கி நகரும். இன்று முதல் 16ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் , மன்னார் வளைகுடா பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் , கேரளா, லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என கூறப்பட்டுள்ளது.

பதிவு: October 13, 2021
90 வயதில் பஞ்சாயத்து தலைவர்!- உள்ளாட்சித் தேர்தலில் அசத்தினார் சிவந்திப்பட்டி மூதாட்டி

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் அசத்தல் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.இந்த இருகட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் முடிவுகளின்படி, பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 21 வயது பெண் சாருலதா என்பவர் வெற்றி பெற்றார். இவர், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்று கொண்டார்.

அதே போல, திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தேர்தலில் 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட்டை இழக்கச் செய்து 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொண்டார்.

பதிவு: October 13, 2021
`நாளை உருவாகிறது புயல்; தமிழகத்தில் 5 நாட்களுக்கு செம மழை!'- வானிலை மையம் அலர்ட்

"அந்தமான் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது என்றும் இதனால் தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் செய்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி , கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும் ஈரோடு தேனி திண்டுக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வருகின்ற 15ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ம் தேதி ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இன்று முதல் வருகின்ற 16ம் தேதி வரை தென்கிழக்கு வங்க கடல், குமரி கடல், மன்னார் வளைகுடாப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் உள்ளிட்ட இடங்களில் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என அலர்ட் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: October 13, 2021
`ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு!'- அமைச்சர் சேகர்பாபு

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான நிலம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் மீட்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் இன்று அறநிலையத்துறை வசம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, 'காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் இதுவரை 132 கிரவுண்டு இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தி உள்ளது. இன்று 250 கோடி மதிப்பிலான 38 கிரவுண்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலைய துறை தன்வசபடுத்தி உள்ளது. முறையாக 78 நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தி உள்ளோம்.

அறநிலையத்துறையில் குறைகள் பதிவேடு துறை ஆரப்பித்தோம். இணையதளம் மூலம் குறைகளை மக்கள் தெரிவிக்க கடினமாக இருந்ததால் தொலைபேசி எண்ணை அறிவித்தோம். அதன் மூலம், இதுவரை 4500 குறைகள் வந்துள்ளன, மண்டல வாரியாக பிரித்து அனுப்பி ஆய்வு செய்து வருகிறோம். விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹெச்.ராஜாவின் இந்து சமய அறநிலையத் துறை மீதான ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் இந்து சமய அறநிலைத்துறை கருத்தில் கொள்ளாது. எதையோ பார்த்து ஏதோ குறைக்கிறது என்று நினைத்துக்கொள்வோம். ஹெச்.ராஜா மத்திய அரசின் பிரதிநிதி அல்ல.

சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் வழிபாட்டிற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது விஜயதசமி அன்று கோவில் திறப்பது தொடர்பாக நீதிமன்றதில் வழக்கு நிலுவையில் உள்ளது, நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். திருநீர் மலையில் ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். மற்ற கோயில்களில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் நடைபெறும்' என்றார்.

பதிவு: October 12, 2021
ஸ்ரீபெரும்புதூர் பெண்ணிடம் நகை பறிப்பு; ஜார்க்கண்ட் கொள்ளையன் என்கவுன்ட்டர்!- போலீஸை துப்பாக்கியால் சுட்டதால் அதிரடி

ஸ்ரீபெரும்புதூர் அருகே காவல்துறையினரை துப்பாக்கியால் சுட்ட ஜார்க்கண்ட் கொள்ளையன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வயதான பெண்மணியிடம் 6 சவரன் நகையை வழிப்பறி செய்து அங்கிருந்து 2 வடமாநில இளைஞர்கள் தப்பித்து செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடிக்க முயன்ற போது கைத்துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். தப்பியோடிய கொள்ளையர்கள் பென்னலூர் ஏரி பகுதிக்கு சென்று பதுங்கி கொண்டனர். 10 குழுவினர் அந்த ஏரி பகுதியில் முகாமிட்டு கொள்ளையர்கள் தேடி வந்தனர். ட்ரோன் கேமரா உதவியுடன் கொள்ளையர்களை பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்த காரணத்தினால் துப்பாக்கியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று இரவு முழுவதும் தேடி வந்தனர்.

இந்நிலையில் அந்த ஏரி பகுதியில் பதுங்கி இருந்த ஒரு கொள்ளையனை பிடிக்க முயற்சிக்கும் போது அவர் தனது பாதுகாப்பிற்காக போலீசார் நோக்கி துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளார். அப்போது தங்களது பாதுகாப்பிற்காக சம்மந்தப்பட்ட கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். தற்போது இறந்த கொள்ளையனின் உடலை ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையனின் பெயர் முர்தஷா என்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவன் என்றும் தெரியவந்துள்ளது. தப்பியோடிய மற்றொரு கொள்ளையன் நைம் அக்தரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து துப்பாக்கி, 3 கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கொள்ளையர்களுக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது? இறந்த கொள்ளையனின் விவரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: October 11, 2021
ஊழியர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் திமுக எம்பி ரமேஷ் சரண்!- `நிரூபித்து வெளியே வருவேன்' என அறிக்கை

முந்திரி தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். "என் மீதான புகார் ஆதாரமற்றது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து வெளியே வருவேன்" என்று ரமேஷ் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் முந்திரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு (55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி கோவிந்தராசு, மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், தனது தந்தையை ரமேஷ் எம்.பி. மற்றும் முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் அடித்துக் கொலை செய்து விட்டதாகவும், இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த மாதம் 28ம் தேதி விசாரணையை தொடங்கினர். தீவிர விசாரணை நடந்து வந்த வேளையில், கோவிந்தராசுவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையிலும் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராசு சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி கடலூர் எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜ் (31), தொழிலாளர்கள் அல்லா பிச்சை (53), சுந்தர் என்கிற சுந்தர்ராஜ் (31), வினோத் (31), கந்தவேல் (49) ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத், கந்தவேல் ஆகியோரை கைது செய்தனர். அப்போது நடந்த விசாரணையின்போது எம்.பி.யின் உதவியாளர் நடராஜ் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அல்லா பிச்சை உள்ளிட்ட 4 பேர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. எம்.பி. ரமேஷிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே திமுக எம்பி ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், "என் மீதான புகார் ஆதாரமற்றது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து வெளியே வருவேன். நல்லாட்சியின் மீது வீண்பழி வீசுபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் எனக் கருதி சரணடைந்தேன்" என்று கூறியுள்ளார்.

பதிவு: October 11, 2021
ஏசி அறையில் பற்றி எரிந்த தீ... கருகிய கணவன், மனைவி... நள்ளிரவில் மதுரையில் அதிர்ச்சி!

மதுரையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தூங்கி கொண்டிருந்த கணவன் - மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆனையூர் அருகேயுள்ளது எஸ்.பி.பி நகர். இந்த பகுதியில் உள்ள குடியிருப்பில் சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி இருவரும் தங்களது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மாடியில் இருந்து கரும்புகை வெளியே வந்திருப்பதை பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் வீட்டின் கீழே படுத்து தூங்கி கொண்டிருந்த அவரின் குழந்தைகளும் பார்த்துள்ளனர்.

உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைவாக செயல்பட்டு மாடியில் உள்ள அந்த அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கணவன், மனைவியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்தி கண்ணன் இதே பகுதியில் தொழில் செய்து வருகிறார். கணவன் மனைவி இரண்டு பேரும் தீ விபத்தில் உயிரிழந்திருப்பது இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: October 09, 2021
அதானி பள்ளி மாணவ, மாணவிகள் கொண்டாடிய காந்தி ஜெயந்தி விழா!

``மகாத்மாவுக்கு வணக்கம்" என்ற தலைப்பில், அகமதாபாத்தில் உள்ள அதானி வித்யா மந்திர் பள்ளி மாணவ, மாணவிகள் காந்தி ஜெயந்தி விழாவை கொண்டாடினர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அதானி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்காக மகாத்மா காந்தியின் பெரும் பங்களிப்பை பறைசாற்றும் விதமாக சபர்மதி ஆசிரமம் திகழ்கிறது. இந்த நிலையில், காந்தியின் 152வது பிறந்தநாளை முன்னிட்டு ``மகாத்மாவுக்கு வணக்கம்" என்ற தலைப்பில் அகமதாபாத்தில் உள்ள அதானி வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான 32 மாணவர்கள், சர்தார் வல்லபாய் பட்டேல் உள்நாட்டு விமான நிலையத்தில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது தியாகங்களை பறைசாற்றும் வகையில் நிகழ்த்தி நடத்தினர்.

மேலும், அகிம்சை மூலம் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த நமது தேசத் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதை நோக்கமாகக் கொண்டு . அவரது வாழ்க்கையை நினைவுகூரும் மற்றும் கலைப் பாதையில் அவரது மதிப்புகளை நினைவுகூரும் ஒரு தாழ்மையான முயற்சியாக "மகாத்மாவுக்கு வணக்கம்" என்ற தலைப்பில் அதானி பள்ளி மாணவ, மாணவிகள் இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியை நடத்தினர். இது மாணவர்களை மட்டுமல்ல, விமான நிலையத்தில் உள்ள பயணிகளையும் ஊக்குவிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு காந்திய கொள்கைகளை பிரதிபலிக்க மற்றும் நம்புவதற்கு தூண்டுகோலாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளியின் அறங்காவலர் ஸ்ரீமதி ஷிலின் அதானி, "மாணவர்கள் இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் கலாசாரத்தை புரிந்து கொள்ளவும் பெருமை கொள்ளவும் விரும்புகிறார்கள். தனது தாய்நாடு மற்றும் மக்கள் மீதான அன்புதான் அவரை சுதந்திரத்திற்காக போராடவும் சாதி பாகுபாட்டை எதிர்த்துப் போராடவும் செய்தது. அகிம்சை, சத்தியாகிரகம், தூய்மை மற்றும் சுதேசி இயக்கம் போன்ற பல விஷயங்களை காந்தி ஊக்குவித்தார்" என்று கூறினார்.

பதிவு: October 05, 2021
`ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல கூடாது!'- தமிழக வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம் என்று வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் MDT23 எனப் பெயரிடப்பட்ட புலி ஒன்று மனிதர்களையும், கால்நடைகளையும் வேட்டையாடி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட கால்நடைகள், 4 மனிதர்களை அந்த புலி கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதையொட்டி அப்பகுதி மக்கள் தாங்கள் அச்சத்துடன் நாட்களைக் கடத்தி வருவதாகவும், புலியை உடனடியாக பிடிக்கக்கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தினர்.எனவே ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க தமிழக தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார்.

புலியை சுட்டுப் பிடிக்கும் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடர்பட்டது. அதில், இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் பேனர்ஜி, ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த புலியை கொல்வதற்காக சுட்டுப்பிடிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் அதை உயிருடன் பிடிப்பதே நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி, நீலகிரியில் உலவும் புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம் என்றும் எனவே புலியை கொல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும் புலியை பிடிக்கும் பணியின் போது மற்ற விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்றும் புலியின் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து அதை பிடித்து உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த புலியை பிடித்து சிகிச்சை அளித்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தசரா விடுமுறைக்கு பின் ஒத்திவைத்தனர்.

பதிவு: October 05, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்