ராணிப்பேட்டை
`மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது!'- அன்புமணி காட்டம்

``மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரக்கோணம் மாவட்டம் பனப்பாக்கத்தில் இளம்பெண்ணுக்கு அவரது கணவர் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததாகவும், அதில் குழந்தை இறந்ததுடன், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் வெளியான செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.

மகப்பேறு என்பது மிகவும் சிக்கலான, சிறிய தவறு நடந்தாலும் தாய்க்கும், சேய்க்கும் உயிரிழப்பை ஏற்படுத்தி விடக் கூடிய விஷயமாகும். யூடியூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது. நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. 108 தொலைபேசியில் அழைத்தால் அவசர ஊர்தியில் வீட்டுக்கே வந்து பெண்ணை அழைத்துச் சென்று மகப்பேறு பார்த்து மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து விடும் வசதியை நான் மத்திய அமைச்சராக இருந்த போதே ஏற்படுத்தியுள்ளேன்.

மருத்துவமனையில் மகப்பேறு பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு வேறு பல உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவமனையில் மருத்துவர்களால் செய்யப்படும் மகப்பேறு தான் பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும். யூடியூப் மூலம் மகப்பேறு பார்ப்பது ஒரு சாகசம் என்பது போன்ற விஷமப் பிரசாரம் சமூக ஊடகங்களில் செய்யப்படுகிறது. அவற்றை மக்கள் நம்பக் கூடாது. இது தொடர்பாக தமிழ்நாடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று பதிவிட்டுள்ளார்

பதிவு: December 20, 2021
யூடியூப்பை பார்த்து பிரசவம் பார்த்த கணவன் ... குழந்தை பலி... மனைவி சிரியஸ்!- அரக்கோணத்தில் நடந்த கொடுமை

அரக்கோணம் அருகே யூடியூப்பை பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்த நிலையில் அதிக ரத்தப்போக்கு காரணமாக குழந்தை இறந்தது. பிரசவமான பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பணப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள நெடும்புலி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் லோகநாதனின் மனைவியான கோமதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிரசவ வலியின் போது அவரது அக்கா உதவியுடன் யூடியூப்பை பார்த்து பிரசவம் பார்த்துள்ளார். இதனால் அதிக அளவில் அவரது மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தையை உடனடியாக நெமிலி அருகேயுள்ள புண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரண்டு பேரையும் அழைத்து வந்து அனுமதி செய்துள்ளார்.

இங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக குழந்தை மற்றும் அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சையில் ஈடுபட்டனர். இருந்தாலும் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் பிறந்த ஆண் குழந்தையானது இறந்துள்ளது. மேலும் கோமதி என்பவர் அதிக அளவு ரத்தப்போக்கின் காரணமாக தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் புண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் தற்போது நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததின் காரணமாக குழந்தை இறந்ததாக கூறி மருத்துவர் அளித்த புகாரின் பேரில் தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: December 20, 2021
`5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும்!'- சென்னை வானிலை ஆய்வு மையம்

நாளை முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனையொட்டிய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 15ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

17ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரை நோக்கி நகரும். இன்று முதல் 16ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் , மன்னார் வளைகுடா பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் , கேரளா, லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என கூறப்பட்டுள்ளது.

பதிவு: October 13, 2021
உள்ளாட்சித் தேர்தல்!- திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி வீதி வீதியாக பிரசாரம்

நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் பூந்தமல்லி திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி தலைமையில் பிரசாரம் பரப்புரை துவங்கியது.


தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் களமானது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்தில் மாவட்ட ஒன்றியகுழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுந்தராம்பாள் மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு போட்டியிட கூடிய அசநெல்லிகுப்பம், திருமால்பூர், ஜாகிர் தண்டலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பூந்தமல்லி திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி தலைமையில் வேட்பாளருடன் வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர்களை வெற்றி செய்ய வேண்டும் என திமுக எம்எல்ஏ தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பதிவு: September 27, 2021

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்