ராமநாதபுரம்
நேற்று முன்தினம் 55 பேர்... இன்று 12 பேர் கைது..!- இலங்கை கடற்படையினரின் செயலால் தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு

ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 55 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக் ஜலசந்தி கடலில் கடந்த 18ம் தேதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர், மன்னார் வளைகுடா கடலில் நேற்று முன்தினம் மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் என 55 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரும், ஊர்காவல்துறை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மண்டபம் மீனவர்கள் 12 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக்கு பின்னர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 மீனவர்களையும், 8 விசைப்படகுகளையும் விடுவிக்கவும், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் சுமுகமான முறையில் மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக எடுக்கவும் வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மேலும் 14 தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 14 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் 2 மீன்பிடி விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்களை மயிலடி மீன்பிடி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஜெகதாபட்டினத்தில் 1,200 மீனவர்களின் போராட்டத்தால் 200 விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டன.

பதிவு: December 21, 2021
`மாணவர் மர்ம மரணத்தில் வெளிப்படையான விசாரணை வேண்டும்!'- கமல்ஹாசன்
பதிவு: December 08, 2021
அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டது ஏன்?- பரபர பின்னணி

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் பயணித்த சிறுபான்மையினர் நலப்பரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்வர் ராஜா நீக்கப்பட்டதற்கான பரபரப்பு காரணம் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேச முயன்ற அன்வர் ராஜாவை பேச விடாமல் தடுத்ததோடு, அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று குரல் எழும்பியது. இதனை தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சசிகலா இருந்திருந்தால் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 20 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருக்கும் என்றும், அதிமுகவில் இரட்டை தலைமையை தொண்டர்கள் விரும்ப வில்லை என்றும் ஒன்றைத் தலைமைதான் வேண்டும் என்று குரல் எழுப்பினார். இவரது இந்த ஓப்பன் டாக் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் சலசலப்பையும் கட்சிக்குள் பூகம்பத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று இரவு அன்வர் ராஜாவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும். இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கொள்கைக்கும், குறிக்கோள்களுக்கும் முரணாக செயல்பட்டதாக கூறி அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்" என்று கூறியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலிருந்து அக்கட்சியில் பயணித்து வரும் மூத்த தலைவர்களில் ஒருவராக வலம் வந்தார். அதிமுக சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்துவந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா ஆதரவாளராக இருக்கும் அன்வர் ராஜா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதை விமர்சித்தவர். சசிகலா சிறை சென்ற பிறகு, அதிமுகவில் நீடித்த மூத்த தலைவரான அன்வர் ராஜா, கூட்டணிக் கட்சியான பாஜகவை பல்வேறு சமயங்களில் கடுமையாக விமர்சித்தவர். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று கூறியவர்களில் முக்கியமானவர் இவர்.


ஓபிஎஸ் – ஈபிஎஸ் இரட்டை தலைமையிலான அதிமுகவில் இருந்தாலும், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு, சசிகலா – டிடிவி தினகரைனை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தியது, மீண்டும் மாநிலங்களவை பதவி கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தற்போதைய இரட்டை தலைமை மீது அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்தார். அண்மையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல மாவட்டச் செயலாளர்கள் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜாவை நோக்கி ஆவேசமாக பேசத்தொடங்கினர். சமீபத்தில் அதிமுகவின் தலைமை குறித்து அன்வர் ராஜா தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறிவந்ததே அதற்கான காரணம்.


கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட அன்வர் ராஜா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல மாவட்டச் செயலாளர்கள் தலைமையிடம் வலியுறுத்திய நிலையில் அவர் மன்னிப்பு கோரியதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனால் அதனை தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களிலும் நாளிதழ்களுக்கும் அன்வர் ராஜா அளித்த பேட்டியில் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ்க்கு இடையே மனக்கசப்பு இருப்பது உண்மைதான் எனவும், அதிமுக ஒற்றைத் தலைமையை நோக்கி நகர்கிறது என மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையே தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

தொடர்ந்து கட்சியையும், தலைமையும் விமர்சனம் செய்து வந்த அன்வர் ராஜா, அதிமுக செயற்குழுவில் பங்கேற்க கூடாது என முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் அழுத்தமே நள்ளிரவு நேரத்தில் அவரது நீக்கம் குறித்த அறிவிப்புக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

பதிவு: December 01, 2021
முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்த நாளையொட்டி மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது தேவர் ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்டோபர் 28ம் தேதி தொடங்கி 30ம்தேதி வரை நடைபெறுகிறது. இந்தநிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு வெண்கல திருவுருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


இதன் தொடர்ச்சியாக, தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்து மரியாதை செலுத்தினர்.

பதிவு: October 30, 2021
பசும்பொன் செல்ல ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு அனுமதி... எடப்பாடிக்கு திடீர் தடை… உச்சகட்ட பரபரப்பில் அ.தி.மு.க

சசிகலா விவகாரம் தொடர்பாக, முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதை, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் தவிர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ராமநாதபுரம் பசும்பொன்னில் நாளை முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, இன்று மதுரை செல்கிறார் சசிகலா. கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின், மருதுபாண்டியர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து பசும்பொன் சென்று, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

ஆண்டுதோறும், பசும்பொன் தேவர் நினைவிடத்திலும் அ.தி.மு.க., சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம். 'சூரியனை பார்த்து குரைக்கிறது' என, சசிகலாவை பழனிசாமி விமர்சித்த விவகாரம், தென் மாவட்ட முக்குலத்தோர் சமுதாயத்தினரிடம் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அதுமட்டுமல்லாது முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சசிகலா குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இவைகள் முக்குலத்தோர் சமூகத்தினரிடையே கடும் அதிருப்பதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில், பசும்பொன் நினைவு இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தால், அவர் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தக்கூடும் என்றும் இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவும் உளவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் பழனிசாமி வருகைக்கு, போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
அதேநேரத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு மத்தியில் நடக்கும் நிகழ்ச்சியாக இருப்பதால் இதில் அ.தி.மு.க.வில் உள்ள சீனியார்கள் யார்? யார்? இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பதை வைத்துதான் அ.தி.மு.க.வில் செல்வாக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகமா? அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு அதிகமா? என்பது தெரிய வரும் என்று அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

சசிகலாவும் நாளை பசும்பொன் செல்கிறார். அங்கு முத்துராமலிங்க தேர்வல் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் ஆதரவாளர்கள் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரே நாளில் பசும்பொன் செல்வதால் இருவரும் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலினும் பசும்பொன் செல்கிறார். அவருடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள். இதேபோன்று பல்வேறு கட்சித் தலைவர்களும் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள். இதனால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதிவு: October 29, 2021
9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!- அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

வெப்ப சலனம் காரணமாக இன்று கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர் ,சேலம், தர்மபுரி ,வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் , வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 20-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

21ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி,கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வரும் 22ம் தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழையும்,  அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும்  பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.  இன்று கேரள கடலோர பகுதி,  லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால்,  மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு: October 18, 2021

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்