வணிகம்
`இந்தியாவில் 600க்கு அதிகமான சட்டவிரோத கடன் செயலிகள்!'‍- பொதுமக்களை எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி

இந்தியாவில் 600க்கும் அதிகமான சட்டவிரோத கடன் செயலிகள் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

2017ம் ஆண்டில் 11,671 கோடி ரூபாயாக இருந்த டிஜிட்டல் கடன் விநியோக சந்தையின் மதிப்பு 2020ல் ரூ.1.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனை பயன்படுத்தி கொண்டு சுமார் 1,100 கடன் செயலி நிறுவனங்கள் இந்தியாவில் டிஜிட்டல் கடன் சேவையில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சட்டவிரோதமாக செயல்படுவது ரிசர்வ் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகைய நிறுவனங்கள் கடனை வசூலிப்பதில் ஆட்சேபகரமாக முறையில் நடந்து கொள்வதும் கடனாளிகள் மொபைல் விவரங்களை திருடுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. டிஜிட்டல் கடன் நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு ஜனவரி முதல் நடப்பாண்டு 2,562 புகார்கள் குவிந்துள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, ஹரியானா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தே அதிக புகார்கள் வந்துள்ளன.

எந்த ஒரு நிறுவனத்திடமும் தனிப்பட்ட விவரங்களை கொடுக்கும் முன்பு ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடன் வழங்கும் நிறுவனங்களை முழுமையாக ஆராய்ந்து அலுவலகத்திற்கே நேரடியாக சென்று மட்டுமே கடன் பெற வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பதிவு: November 24, 2021
ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோனும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியது!

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட பிரீபெய்டு கட்டணங்கள் வரும் 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.79-லிருந்து ரூ.99-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 28 நாட்களுக்கு 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149-லிருந்து ரூ.179 அதிகரிக்கப்பட்டுள்ளது. 28 நாட்களுக்கு தினமும் 1GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.219-லிருந்து ரூ.269 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

28 நாட்களுக்கு தினமும் 1.5GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.249-லிருந்து ரூ.299 ஆகவும், 28 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.299-லிருந்து ரூ.359 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

56 நாட்களுக்கு தினமும் 1.5GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.399-லிருந்து ரூ.479 ஆகவும், 56 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.449-லிருந்து ரூ.539 ஆகவும், 84 நாட்களுக்கு தினமும் 6GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.379-லிருந்து ரூ.459 ஆகவும் 84 நாட்களுக்கு தினமும் 1.5GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.599-லிருந்து ரூ.719 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

84 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.699-லிருந்து ரூ.839 ஆகவும், 365 நாட்களுக்கு 24GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.1499-லிருந்து ரூ.1799 ஆகவும் 365 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.2399-லிருந்து ரூ.2899 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பதிவு: November 23, 2021
ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல், டீசல் விலை!- அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்

சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ.105.13க்கும் மற்றும் டீசல் விலை 33 பைசா உயர்ந்து ரூ.101.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ரூ.104.83 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ.100.92 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ.105.13க்கும் மற்றும் டீசல் விலை 33 பைசா உயர்ந்து ரூ.101.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள் மற்றும் ரஷ்யாவுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப சிங் பூரி கூறியுள்ளார்.

பதிவு: October 28, 2021
ஜெட் வேகத்தில் உயரும் எரிபொருள் விலை!- சென்னையில் சதம் அடிக்கப் போகிறது டீசல் விலை

ஜெட் வேகத்தில் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை கடந்த 21 நாட்களில் 18வது முறையாக அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ரூ.106க்கு அதிகமாகவும், டீசல் ரூ.100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது.

இம்மாதத்தில் 4, 18, 19 தேதிகளில் தவிர 18வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசும், டீசல் 33 காசும் அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் பெட்ரோல் ரூ.103.61க்கும், டீசல் ரூ.99.59க்கும் விற்பனையாகிறது. சேலத்தில் டீசல் விலை வரலாற்றில் முதன் முறையாக ரூ.100யை தாண்டியது. பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பதிவு: October 21, 2021
`வீட்டு கடன், தனி நபர் கடன் வட்டியில் மாற்றமில்லை; ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக தொடரும்'- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் கூடும். இதன்படி, 2 நாட்கள் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் முடிவடைந்து அதன் முடிவுகளை இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முடிவுகளின் படி, அனைவரும் கணித்தபடியே ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை. தொடர்ந்து 4 சதவீதமாக இருக்கும். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 3.35 சதவீதம் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன் மூலம் வட்டி விகிதங்களில் எட்டாவது முறையாக மாற்றங்கள் செய்யாமல் பழைய நிலையிலேயே நீடிக்க ரிசா்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பால் வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் குறையக் கட்டாயம் வாய்ப்பு இல்லை. இதன் மூலம் கனவு வீட்டை வாங்கத் திட்டமிடுவோர் தற்போது வங்கிகளில் இருக்கும் மிகவும் குறைவான வட்டி விகிதத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதேபோல் வாகன கடன், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமும் குறையாது.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், '2021 - 22 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 2021-22 இரண்டாம் காலாண்டில் 7.9 சதவீதமாகவும், 3ம் காலாண்டில் 6.8 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 6.1 சதவீதமாகவும் இருக்கும். 2022- 23ம் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 17.2 சதவீதமாக இருக்கும்.2022 நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 5.3% ஆக இருக்கும். 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 5.2% ஆக இருக்கும்' என்று தெரிவித்தார்.

பதிவு: October 08, 2021
ஒரே நாளில் எகிறியது தங்கம் விலை!- ஒரு சவரன் ரூ.35,136க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.448 உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சர்வதேச சந்தையை பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்ற வாரம் முழுவதும் சரிந்து வந்த தங்கம் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே ஏறியும் இறங்கியும் வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென தங்கம் விலை உயர்ந்து அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,392க்கும், சவரன் ரூ.35,136க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.63.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பதிவு: October 01, 2021
தங்கம் விலை அதிரடியாக சரிவு!- ஒரு பவுன் ரூ.34,920க்கு விற்பனை

தங்கம் விலை அதிரடி குறைவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஒரு பவுன் இன்று ரூ.34,920க்கு விற்பனையாகிறது.

தங்கம் இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை 176 ரூபாய் குறைந்து 35,440 ரூபாய்க்கு விற்பனையானது. இன்றும் தங்கம் விலை கடுமையாக வீழ்ச்சியை கண்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,365 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,485 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 35,472 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 400 ரூபாய் குறைந்து 34,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.50 குறைந்து ரூ.65.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 65,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: September 17, 2021
இந்தியாவில் ஆலையை மூடுகிறது ஃபோர்டு நிறுவனம்! - 4000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 20 வருடங்களாக இந்தியாவில் பல்வேறு வகை கார்களை தொடர்ந்து உற்பத்தி செய்துவரும் ஃபோர்டு நிறுவனம் லாபமின்றி தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருவதாகவும், பல்வேறு புதிய மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்தும் நஷ்டமே ஏற்பட்டு வருவதால் உற்பத்தி மிகவும் குறைந்திருப்பதாகக் கூறியிருக்கிறது. இதனால் ஃபோர்டு இந்தியா நிறுவனத்துக்கு 2 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறது.

இதனால் தமிழ்நாட்டிலுள்ள மறைமலைநகர், குஜராத்திலுள்ள சனண்ட் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனிமேல் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்யாமல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விற்பனையை மட்டும் இந்தியாவில் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலை மூடப்பட்டால் சுமார் 4000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது.

ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவன ஆலைகள் ஏற்கெனவே மூடப்பட்ட நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பதிவு: September 09, 2021
வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதியை நீட்டித்தது வருமான வரித்துறை!

பல்வேறு வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை, வருமான வரித்துறை நீட்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேரடி வரி தொடா்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காணும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்துவதற் கான தேதி, செப்டம்பா் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வட்டித் தொகையுடன் சோ்த்து அக்டோபா் 31-க்குள் கட்டணம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்வதற்கான கெடு, ஜூலை 31-ல் இருந்து நவம்பா் 30-ஆம் தேதி வரையிலும், தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கெடு அக்டோபா் 31-ல் இருந்து டிசம்பா் 31ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான காலகட்டத் தில் ஜிஎஸ்டி வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவா்களுக்கு சலுகை அளிக்க ஜிஎஸ்டி கவுன் சில், கடந்த மே மாதம் முடிவு செய்தது. அதன்படி, குறைக்கப்பட்ட தாமதக் கட்டணத் தை மத்திய நிதியமைச்சகம் ஜூன் 1-ஆம் தேதி அறிவித்தது.

இந்தக் கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது, தாமதக் கட்டணம் செலுத்த கடைசி தேதி நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய வலைதளத்தில் கோளாறு ஏற்பட்ட தால், வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதியை வருமான வரித் துறை நீட்டித்துள்ளது.

பதிவு: August 30, 2021
புதுச்சேரியில் வாட் வரி குறைப்பு!- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.43 சரிவு!

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விற்கபடும் பெட்ரோல் மீதான 3 சதவீதம் வாட் வரியை குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, பெட்ரோல் விலை ரூ.2.43 குறைந்து புதுச்சேரியில் ரூ.99.52 ஆகவும் காரைக்காலில் ரூ.99.30 ஆகவும் விற்பனை செய்யப்படும் என ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள சிபிஎஸ்இ / ஐசிஎஸ்இ உள்ளிட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகளைத் தொடங்கும் வகையில் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள இன்று முதல் பள்ளிகளைத் திறக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தாமாக முன்வந்து பள்ளிகளுக்கு வர விரும்புவதால், 2021-22 கல்வியாண்டில் மாற்று நாட்களில் பள்ளிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை (அரை நாள்) வாரத்தில் 6 நாட்கள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: August 26, 2021

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்