"இலங்கை தமிழர்களுக்கு இந்த அரசு உற்ற துணையாக இருக்கும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
தமிழகப் பொது மறுவாழ்வுத் துறை சார்பில் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கான புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ரூ.142.16 கோடியில் 3,510 குடியிருப்புகள் கட்டுமான திட்டத்துக்கு அடிக்கல், 78 முகாம்களுக்கு ரூ.12.41 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், 18,890 குடும்பங்களுக்கு எரிவாயு உருளை இணைப்புடன் உபகரணங்கள் வழங்குதல், 58,747 பேருக்கு உயர்த்தப்பட்ட பணக்கொடை வழங்குதல் உள்ளிட்ட மொத்தம் ரூ.225.86 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி விழா பேருரை நிகழ்த்தினார். விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "எந்த நாட்டில் இருந்தாலும் தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான். குறிப்பாக நாம் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். 1983-ல் இருந்து ஈழத்தில் இருந்து இங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள். முகாம்களிலும் சிலர் வெளியிலும் தங்கியுள்ளீர்கள்.
1997-ல் முதல்வராக கருணாநிதி இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினார். கடந்த 10 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக அரசு எந்த நலனையும் செய்யவில்லை. கவலைப்படவில்லை. தற்போது, திமுக அரசு பொறுப்பேற்றதும் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீங்கள் அகதிகள் இல்லை என்பதுடன் அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இலங்கைத் தமிழர்களுக்காக 1997-ல் 3,594 புதிய வீடுகள் கட்டப்பட்டன. 1998-99ல் 3,816 வீடுகள் கட்டப்பட்டன. 2009-ல் 100 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் 19,046 குடியிருப்புகளில் மிகவும் பழுதடைந்த 7,469 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. முதல் கட்டமாக 290 சதுரடி பரப்பளவுள்ள 3,510 புதிய வீடுகள் கட்டப்பட உள்ளன. என்றைக்கும் திமுகவினர் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடன்பிறப்பாக நினைத்துக் கொள்ளுங்கள். இலங்கைத் தமிழர்களுக்கு இந்த அரசு உற்ற துணையாக நிற்கும்" என்று பேசினார்.
நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை உரை நிகழ்த்தினார். இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்கன் (அரக்கோணம்), டி.எம்.கதிர் ஆனந்த் (வேலூர்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன், வில்வநாதன், தேவராஜ், நல்லதம்பி, ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா முடிவில் பொது மற்றும் மறுவாழ்வுத் துறைச் செயலாளர் ஜெகநாதன் நன்றி தெரிவித்தார்.