tamil seithigal

`23 ஆண்டு கால பணியில் 24 முறை டிரான்ஸ்பர்!’- சகாயம் ஐஏஎஸ் திடீர் விஆர்எஸ் விண்ணப்பம்!

சகாயம் ஐஏஏஸ் தனது 23 ஆண்டு பணிக்காலத்தில் 24 முறை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டு இருக்கும் நிலையில் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.

சகாயம். இந்த பெயரை உச்சரிக்காத நபர்களே இருக்க முடியாது என்றே கூறலாம். மதுரையில் கலெக்டராக இருந்த சகாயம், கிரானைட் ஊழலை வெளிக் கொண்டு வந்தவர். கிரானைட் மற்றும் கனிம மணற் கொள்ளை பற்றி விசாரிக்க இவர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி 4 நாட்களுக்குள் குழு அமைக்க வேண்டும் என்று உத்தவிட்டது.

அரசியல் வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தவர் சகாயம். இவரது தாரக மந்திரமே `லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்’. இந்த வாசகத்தை அவரது இருக்கையின் பின்புறம் காணலாம். அவரது 23 ஆண்டு பணிக்காலத்தில் 24 முறை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதை உண்மையாக உழைக்கும் அரசு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திலேயே போர்டு மாட்டி வைத்திருந்தனர். மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளாலும் நேர்மையான அணுகுமுறைகளாலும் மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டவர் சகாயம்.

வாழ்க்கை வரலாறு

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த உபகாரம் பிள்ளை – சவேரி அம்மாள் தம்பதியினரின் ஐந்து மகன்களில் கடைசியாகப் பிறந்தவர். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னை லயோலா கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பு (சமூகத் தொண்டு), சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு என அடுத்தடுத்து தன் கல்வித் தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார்.

சகாயம் வகித்த பதவிகள்
தர்மபுரியில் பயிற்சி ஆட்சியராக பணியாற்றிய சகாயம், பின்னர் நீலகிரி மாவட்டம், கூடலூரில் கோட்ட வளர்ச்சி அதிகாரி பணியாற்றினார். திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரியாகவும், காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சி அதிகாரியாகவும், திருச்சி உணவு பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளராகவும் பணியாற்றினார்.

கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளராகவும் சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், தொழில் வணிகத்துறை இணை இயக்குநராகவும், மாநிலத் தேர்தல் ஆணையச் செயலராகவும், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையராகவும், நாமக்கல் மாவட்ட ஆட்சியராகவும், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராகவும், மதுரை மாவட்ட ஆட்சியராகவும், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராகவும், இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குநராக பணியாற்றிய சகாயம், தற்போது சயின்ஸ் சிட்டி எனப்படும் அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

6 ஆண்டுகளாக அந்த பதவியில் இருந்து வரும சகாயம், இன்று திடீரென விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார். 57 வயதாகும் சகாயம், ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில் விஆர்எஸ் கேட்டுள்ளார். முக்கியமில்லாத பதவியில் பல ஆண்டுகளாக வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில் சகாயம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஓய்வுக்கு பிறகு மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையில் முழு நேரமாக செயல்பட முடிவு செய்துள்ளார். இதனிடையே, ரஜினியின் முதல்வர் வேட்பாளர் சகாயம் என்றும் கட்சித் தலைவர் ரஜினி என்றும் ஒரு தகவல் அரசல் புரசலாக அடிப்பட்டு வருகிறது.