திருடப் போன இடத்தில் அதிகளவில் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் திருடருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள கோத்வாலி தேஹாத் என்ற இடத்தில் பொதுச் சேவை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை நவாப் ஹைதர் என்பவர் நடத்தி வருகிறார். இவர் தனது சேவை மையத்தில் வைத்திருந்த 7 லட்சம் ரூபாய் பிப்ரவரி மாதம் 16ம் தேதி திருடுப் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, நுஷாத் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
அப்போது நுஷாத் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “சேவை மையத்தில் தன்னுடன் அஜாஜ் என்பவரும் சேர்ந்து திருடினார். திருட போன இடத்தில் ஏதோ ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் தான் கிடைக்கும் என்று நினைத்து போனோம். ஆனால், சேவை மையத்தில் கத்தை, கத்தையாக பணம் இருந்தது. இதை பார்த்த எங்களுக்கு ஒரே மகிழ்ச்சியாகிவிட்டது. பணத்தை எண்ணிப் பார்த்த போது ரூ.7 லட்சம் இருந்தது. இதை அறிந்த அஜாஜிக்கு திடீரென்று மாரடைப்பு வந்துவிட்டது.
இந்நிலையில் தான், நாங்கள் திருடிய பணத்தில் அஜாஜியின் அறுவை சிகிச்சைக்கே அதிக பணத்தை செலவழித்துவிட்டோம். இந்த சூழ்நிலையில் தான், என்னிடம் இருந்த மிச்ச பணத்தை எடுத்துக் கொண்டு டெல்லிக்கு சென்றுவிட்டேன். அங்கு சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டேன்” என்றார்.
நுஷாத் வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.