“தரமான மருத்துவமும்,கல்வியும் கொடுப்பவர்களுக்கே”வாக்களியுங்கள்–இயக்குனர் சேரன்!

0
47

தரமான மருத்துவமும், கல்வியும் கொடுப்பவர்களுக்கே தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர் சேரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், தரமான மருத்துவமும், கல்வியும் கொடுப்பவர்களுக்கே தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர் சேரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘6ம் தேதி எலெக்ஷன்.. ஓட்டுப்போடுவது உங்கள் கடமை.. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் போடலாம். யார் பேச்சிற்கும் யாரோட அனுதாபியாகவும் இருந்து சிந்திக்கவேண்டாம்..இது உங்களுக்கான உரிமை, உங்கள் வாழ்வில் எதிர்காலத்தில் எது தேவையோ.. நம் சந்ததிகளின் வாழ்க்கை நலம்பெற எது சமூக மாற்றமாகனும்னு நினைக்கிறீர்களோ.. அதற்கான செயல்பாட்டு திட்டமும் சிந்தனையும் யாரிடம் உள்ளதோ அவர்களை தேர்ந்தெடுத்து ஓட்டுப்போடுங்கள்.. இது எக்ஸ்ட்ரா இருக்க வீட்டை வாடகைக்கு விடும் விசயம் அல்ல… இருக்கும் நம் வீட்டுக்குள் குடும்பத்தலைமயை ஒருவரிடம் ஒப்படைப்பது போல.
ஆகையால் ஒரு ஒரு மணி நேரம் குடும்பத்தாருடன் அமர்ந்து பேசுங்கள்.. அவரவர் சார்ந்த துறைகளில் எதில் வளர்ச்சி சிக்கல் இருக்கிறது.. ஏன் தீர்க்கப்படவில்லை.. என்ன செய்தால் அது மாறும், யாரிடம் சரியான சிந்தனை இருக்கிறது என கலந்து பேசுங்கள்.. இலவசமாக கிடைக்கவேண்டியது கல்வியும்,மருத்துவமும் என்பதை நினைவுகொள்ளுங்கள்.
உழைக்கவும், உடலையும் வாழ்வையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிந்திப்பவர்கள் மட்டுமே நம் உண்மையான எதிர்காலம் பற்றி யோசிக்கிறார்கள் என அர்த்தம்.. இது வாக்களிக்கும் அனைவரும் சிந்திக்க வேண்டியதே… நான் எந்த கட்சி சார்ந்தும் பேசவில்லை.. நாம்தான் ஆளவேண்டும். வாக்களிக்க மறக்காதீர்கள். இவ்வாறு சேரன் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
இச்சூழலில், தரமான மருத்துவமும், கல்வியும் கொடுப்பவர்களுக்கே தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர் சேரன் குறிப்பிட்டிருப்பதால், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, அவர் ஆதரவளித்துள்ளதாக நாம் தமிழர் இளைஞர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.