33 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் கோட்டையை தகர்த்தது இந்தியா! #AUSvsIND

0
98
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
india test team

பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில 336 ரன்கள் எடுத்தது. 33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. முகமது சிராஜியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி 294 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினர். இந்தியா 1.5 ஓவரில் 4 ரன்கள் எடுத்திருக்கும்போது நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 21 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். ஒரு பக்கம் புஜாரா நிலைத்து நிற்க மறுபக்கம் ஷுப்மான் கில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ரன்கள் விளாசினார். அவர் 90 பந்தில் அரைசதம் அடித்தார். இவரது அரைசதத்தாலும், புஜாராவின் நிதான ஆட்டத்தாலும் இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது 62 ஓவர்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் தேவையிருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஷுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவும் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மான் கில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 132 ரன்கள் எடுத்திருந்ததது. அடுத்து வந்த ரஹானே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாட முடிவு செய்தார். இதனால் 22 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்தியா தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது, வெற்றிக்கு குறைந்தது 37 ஓவரில் 145 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. கைவசம் 7 விக்கெட் இருந்த நிலையில் இந்திய அணி தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டத்தை தொடங்கியது. ரிஷப் பண்ட், புஜாரா அபாரமாக விளையாடினர். அரைசதம் அடித்த புஜாரா 211 பந்தில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 100 பந்தில் அரைசதம் அடித்தார்.

புஜாரா ஆட்டமிழந்த பிறகு மயங்க் அகர்வால் களம் இறங்கினார். ஒருபக்கம் அடித்தும் விளையாட வேண்டும். அதேசமயம் விக்கெட்டும் இழக்கக் கூடாது என்ற நிலை ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்டது. மயங்க் அகர்வால் 9 ரன்னில் வெளியேற ரிஷப் பண்ட்-க்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி 8 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்டன. கம்மின்ஸ் பந்தில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை ஊட்டினார். இதனால் கடைசி 7 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டன. 7-வது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் 6 ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டன. 6-வது ஓவரில் 9 ரன்கள் கிடைத்தன.

கடைசி 5 ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. 5-வது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் வாஷிங்டன் சுந்தர் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ஆட்டமிழந்தார். என்றாலும் அவர் 29 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். இந்த ஓவரில் ஐந்து ரன்கள் கிடைத்தன. கடைசி 4-வது ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டன. 4-வது ஓவரை ஹசில்வுட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பண்ட் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தில் ஷர்துல் தாகூர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தை ரிஷப் பண்ட் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 1988க்கு பின் பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரோலியா அணி தோற்றது இல்லை என்ற சாதனையை தற்போது தகர்த்துள்ளது இந்திய அணி.

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஆலன் பார்டர் – சுனில் கவாஸ்கர் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. கோப்பையை இந்திய அணி கேப்டன் ரஹானே பெற்றுக் கொண்டார். அதை பெற்றுக்கொண்ட ரஹானே நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி நடராஜன் கோப்பையை ஏந்தி நிற்க இந்திய அணி வீரர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்தத் தொடரில் அறிமுகமாகி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய டி நடராஜனிடம் ரஹானே கோப்பையை ஏந்தச் சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.

tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
வெற்றி களிப்பில் இந்திய தேசிய கொடியுடன் மைதானத்தை சுற்றி வரும் இந்திய வீரர்கள்

 

இதனிடையே, வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ள பிசிசிஐ. பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கண்டு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். வெற்றிதான் அவர்களுடைய இலக்காக இருந்ததால் அதற்கான திடமான மன உறுதியும் வெளிப்பட்டது. அணிக்கு வாழ்த்துக்கள்! உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துகள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது” என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆஸ்திரேலியாவில் அருமையான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு #TeamIndiaக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்று வெற்றிக்கு ஒவ்வொரு வீரரும் பங்களிப்பு செய்வதால் அணிப் பணியின் முக்கியத்துவத்தை இறுதிப் போட்டி எடுத்துக்காட்டுகிறது. எங்கள் இளம் வீரர்களின் அற்புதமான செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி!” என்று கூறியுள்ளார்.