திசையெங்கும் உன் குரல்…இசையெல்லாம் உனது புகழ்!

0
294

இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார். அவருக்கு வயது 74.

இந்த நூற்றாண்டின் கலைஞன் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம். இவரது குரல்கள் தொடாத எல்லைகள் இல்லை. காற்றும் காதலித்துக் கவிதைகளும் அவர் குரலில் சொக்கி, மேடைகளும், இசை நிகழ்ச்சிகளும் அவரை உருக உருகக் கொண்டாடித்தீர்த்தன. இசைரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து இசையரசனாக ஒரு ஐம்பதாண்டுகாலம் கோலோச்சிய கலைஞன் எஸ்.பி.பி.

ஹரஹரசிவனே அருணாச்சலனே என்ற ஆன்மீகப் பாடலைப் பாடியது எஸ்.பி.பி என்று தெரியாத முன்னே எனக்கு அவர் குரல் மீதான நேசம் அதிகரித்தது. இதயத்தைத் தொட்டு ரீங்கரித்து, மனதை குழையும் அவரது குரல் பாவம் வள்ளுவர் குறட்பாவில் சொன்னதுபோல் கேட்காதோரையும் உருகிக்கேட்க வைக்கும் ரகம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னதுபோல் தான் பாடிய அத்துணை மொழிகளிலும் முத்திரை பதித்ததுடன், ரசிகர்களின் நாடி அறிந்து தன் பாடல்களைத் தொனிக்கவிட்ட கலைதாகம். இந்த உலகில் வேறு எந்த ஒரு கலைஞனுக்கு இப்படியொரு பாக்கியம் கிட்டாத பேறு.

20 வயதில் பாடத்தொடங்கி அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு முதல் பாடல் ( ஆயிரம் நிலவே) பாடி அசத்திய பாட்டுக்குயில் இன்று நீடுதுயில் தழுவியதை ஏற்கவே மனம தவிக்கிறது. இன்று காலையில் இருந்து இப்போது வரை எத்தனைப் பாடல்கள் உம் குரலில் காட்டு அகமமகிழ்ந்துள்ளேன் தெரியுமா? ஆங்கில நாட்டில் பிறந்து மேற்குலகில் இசைக்கச்சேரிகள் செய்திருந்தால் இவர் ஒட்டுமொத்தமாகத் தம் வாழ்நாளில் பாடி தனிப்பெரும் சாதனையைச் செய்துள்ள 45,000 பாடல்களுக்காகவும் இவரது கலைதாகத்திற்காகவும் இன்றளவும் இளைஞர்களின் ஆகச்சிறந்த துரோணராக இருந்து வழிநடத்திவருவதற்காகவும் இவருக்கு கின்னஸ் சாதனைக்காக விருதுகொடுத்ததுபோல் நிச்சயமாக ஒரு ஆஸ்கார் பரிசு கிடைத்திருக்கவேண்டும்.

தன் மூச்சு விடாமல் பாடி மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மானுடத்தையும் மொழியில் எல்லையைத் தாண்டி ரசித்துத் தாளம்போட்டு இரவுத் தூக்கத்தில் தன் அழுத்தமான அந்தத்த மொழிகளின் தனித்தன்மையான சொற்களுக்கேற்ப நாவசைத்து நம்மையும் சிறுபிள்ளைபோல் இதழ்சிரித்துச் சிணுங்கவைத்தனர்.

காதல், திருமணம், தாய்மை, அன்பு, பிரிவு, வெற்றி, தோல்வி, பரிசு, பந்தம் , காதல்தோல்வி, சங்கீதம், கழிவிரக்கம், உற்சாகம், சோகம், இறப்பும், பிறப்பு, போதை என அனைத்துத் தரப்பு உணர்வுகளையும் தன் குரலுக்குக் கடத்தி ஒரு நாயகனின் நடிப்புக்குத் தீனி கொடுத்த கலைஞன் இனி இந்த உலகில் கிடைக்கப் போகிறாரா? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உன்னைப் பெற்ற நாடும் கலைஞாகத் தத்தெடுத்துக்கொண்ட திரைத்துறையும் உனது தீராக் கலையுணர்வால் பெருமைகொள்கிறது.

பாலு என்றும் எஸ்.பி.பி என்றும் ரசிகர்களின் வாயிலும், நட்சத்திரங்களின் வாயிலும் ஒலிக்கிற போதெல்லாம் சிறுது வெட்கத்துடன் முகத்தை வைத்து, அசுரத் தனமான தன் சாதகத்தால் குரலில் இக்கால இளைஞர்களுக்கு ஈடுகொடுத்து அவர்களையும் விட ஒருபடி தாண்டி தன் அனுபவத்தைப் பாட்டில் ஏறுகட்டி, இசையோடு ஸ்ருதி சேர்க்கும் உங்களின் குரலில் அபிநயத்தாண்டவத்தை இனி யார் நடத்த முடியும்? அதே குரலில் நடிகர் திலகம் சிவாஜிபோல், உலகநாயகன் கமல்போல் தன் குரல்பாவத்தினாலே நடித்துக்காட்டும் வல்லமையைப் பேசாமல் இருக்க முடியுமா?

பாடகராகத் திரைத்துறைக்கு அறிமுகமாயினும் இசையமைப்பாளராகச் ’’சிகரம் ’’தொட்டுப் பாட்டு வேந்தன் ஜேசுதாஸுக்குத் தம்பியாகவும் அவரையே மானசீகக் குருவாகவும் ஏற்றுக்கொண்டு,அவருக்கு ஈடுகொடுத்துக் கடைசியிலும் அவரை உம்மைப் புகழ்ந்து பாடும்படி உம் திறமையை வளர்த்துக் கொண்டது காலத்தின் கட்டளை.

எந்தக் கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அவர் எஸ்.பி.பியைப் பார்க்க முடியாது. அதன் கதாப்பாத்திரத்தைக் கண்முன் நிறுத்தும் உடல்மொழி என்னவென்பது?

எல்லாக் கவிஞர்களையும் போல் நானும் எனது இரண்டு பாடல்களை நீங்கள் தான் பாடவேண்டுமென நினைத்திருந்தேன்…காலம் சதி செய்துவிட்டது.

காலம் இன்று கல்லாகி உங்களைத் தனக்குள் இழுத்து அது புகழ் தேடிக் கொண்டது. ஏற்கனவே இசை உங்களின் ராஜ்ஜியத்தை பாடுநிலாவாய் முழங்க… தேனிசையில் நனையும் ரசிகர்களின் இதயத்தில் அன்பென்ற பேழையில் நீங்கள்தான் இசைக்கும் நிரந்தராஜா.

தொட்டதெல்லாம் துவங்குவதைக் கதையில் கேட்டவர்களுக்கு உங்கள் 76 ஆண்டு வாழ்க்கை என்பது ஒரு உதாரணம்.

இனிமேல் இரவிலும் பகலிலும் நீங்கள் 16 மொழிகளில் பாடிய பாட்டுகளே எங்களோடு உங்களுக்கும் உறுதுணையாகிக் காலத்தைக் களிப்பூட்டும். நாற்பது ஆண்டுகளில் எம்.ஜி.ஆர்- சிவாஜி; ரஜினி-கமல்; விஜய்- அஜித்; சிம்பு- தனுஷ்; எம்.எஸ்.வி – கேவி.மஹாதேவன்; சங்கர் – கனேஷ்- இளையராஜா; ஏ.ஆர்.ரஹ்மாந் வித்யாசாகர்; யுவன் சங்கர் ராஜா ; ஹாரீஸ் ஜெயராஜ்; அனிருத் – டி.இமான்- ஜி.வி பிரகாஷ்குமார் ஆகிய ஐந்து தலைமுறைக் கலைஞர்களுடன் சுமூகபாக நட்பு வைத்துக்கொண்டதைப் பார்த்துக் கண்படாத ஆட்கள் இல்லை இந்த உலகில். இன்று உனக்கு ஊர் உலகமே கண்ணீரால் சுற்றிப்போட்டு உன் பேரழகையும் உன் புன்னகையும் பிரதிபலிக்கிறது. ஆனால் அதைப் பார்க்க நீ இல்லை என்பதே ஒட்டுமொத்த தேசத்திற்கு நேர்ந்த சோகம்.

நீங்கள் தாயின் வயிற்றில் பிறந்து சாதித்து, பலரின் வாழ்வில் லட்சிய விளக்கேற்றிவைத்து ஒரு சரித்திரக் கலைஞராக விண்ணுக்குச் சென்றாலும், அங்கும் உன் பாடலைக் கேட்கத் தேவர்கள் குழுமுவார்கள்…

அதையும் நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்…

இந்தக் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..கேளாய் பூமணமே ஓஹோஹோ…

திசையெங்கும் உன் குரல்…இசையெல்லாம் உனது
புகழ்!

கட்டுரையாளர்

-சினோஜ்